Published:Updated:

இயந்திரக் கோளாறு; தகித்த தி.மு.க; பதற்றமான பூத்துகள்!- விக்கிரவாண்டி, நாங்குநேரியில் என்ன நடக்கிறது?

நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை முதலாகவே மக்கள் ஆர்வத்துடன் வாக்கு செலுத்தி வருகின்றனர்.

வரிசையில் காத்திருக்கும் வாக்காளர்கள்
வரிசையில் காத்திருக்கும் வாக்காளர்கள்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் ஹெச்.வசந்தகுமார், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றதால் இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க சார்பாக ரெட்டியார்பட்டி நாராயணன், காங்கிரஸ் சார்பாக ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சியின் ராஜ்நாராயணன், பனங்காட்டுப் படை கட்சியின் ஹரிநாடார் மற்றும் இதர வேட்பாளர்கள் என மொத்தம் 23 பேர் வேட்பாளர்களாகக் களத்தில் உள்ளனர்.

நாங்குநேரி இடைத்தேர்தல்... கடும் போட்டியில் அ.தி.மு.க., காங்கிரஸ்!
தொகுதியில் மொத்தம் 299 பூத்கள் உள்ளன. அதில், 146 பூத்கள் பதற்றம் மிகுந்தவையாகக் கருதப்படுகின்றன. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
தேர்தல் அதிகாரி

73 ஊராட்சிகள், 5 பேரூராட்சிகளை உள்ளடக்கிய நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் 2,57,418 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிப்பதற்காக 299 பூத்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், 146 பூத்கள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளதால் அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 2,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் வேட்பாளரான ரூபி மனோகரன் காலையில் கீழநத்தம் பகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளைப் பார்வையிட்டார். அப்போது பேசிய அவர், ``தேர்தல் ஆணையம் மீது சில குறைபாடுகள் இருந்தாலும், சிறப்பாகவே செயல்படுகிறது. மக்களின் ஆர்வத்தைப் பார்க்கும்போது எங்களுடைய வெற்றி உறுதிசெய்யப்பட்டு விட்டதாகவே தெரிகிறது’’ என்றார், நம்பிக்கையுடன்.

காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன்
காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன்

களக்காடு அருகே உள்ள வடுகச்சிமதில் கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. அதனால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர், அதிகாரிகள் அங்கு வந்து இயந்திரத்தைச் சரிசெய்ததால் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.

அ.தி.மு.க வேட்பாளரான நாராயணன், தனது சொந்த ஊரான ரெட்டியார்பட்டியில் உள்ள பூத்தில் குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். பின்னர் பேசிய அவர், ``மண்ணின் மைந்தன் என்கிற அடிப்படையில் நான் இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறேன். அதனால், மக்கள் எனக்கு வெற்றியை உறுதியாகக் கொடுப்பார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது’’ என்றார்.

அ.தி.மு.க வேட்பாளர் நாராயணன்
அ.தி.மு.க வேட்பாளர் நாராயணன்

அ.தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நேரடிப் போட்டி நடக்கும் நாங்குநேரி தொகுதியில், காலை முதலாகவே மக்கள் விறுவிறுப்புடன் வாக்களித்து வருகிறார்கள். காலை 9 மணி நேர நிலவரப்படி நாங்குநேரி தொகுதியில் 6.52 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன.

விக்கிரவாண்டி!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க, தி.மு.க, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 12 பேர் போட்டியிடுகின்றனர். இங்கு அமைக்கப்பட்டுள்ள 275 வாக்குச் சாவடிகளில் 157 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்று அறிவித்திருக்கிறது தேர்தல் ஆணையம். மொத்தமுள்ள 2,23,387 வாக்காளர்கள் இன்று வாக்களிக்க இருக்கின்றனர். காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு 9 மணி நிலவரப்படி 12.84 சதவிகிதத்தைத் தொட்டிருந்தது.

வாக்களிக்கும் மக்கள்
வாக்களிக்கும் மக்கள்

34 மற்றும் 160 வது வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரம் வேலை செய்யாததால் அங்கு வாக்குப்பதிவு 15 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது. வாக்குச்சாவடியிலிருந்து 200 மீட்டர் தள்ளி தி.மு.க தரப்பில் அமைக்கப்பட்டிருந்த பந்தலை காவல்துறை ஆய்வாளர் பூங்கோதை அப்புறப்படுத்தக் கூறியதால் அங்கு சிறிது நேரம் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் வாக்குப்பதிவில் மந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது.