Published:Updated:

``இந்த நான்கு மக்களவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல்!” - ஹெச். ராஜா

``விரைவில் சிவகங்கை உள்ளிட்ட நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரலாம்” என பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பா.ஜ.க தேசியச்செயலாளர் ஹெச்.ராஜா சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசுகையில், ``தமிழகத்தில் சூழலியல் என்ற போர்வையில் சமூக விரோத தீயசக்திகள் கொண்டாடப்படுவது மாற்றப்பட வேண்டும். மற்றொரு சூழலியல் செயல்பாட்டாளர், முகிலன் தன்னை ஆசை வார்த்தைகள் கூறி மோசடி செய்து ஏமாற்றினார் எனப் பாலியல் புகார் கொடுத்துள்ளார்.

திருச்செந்தூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த  ஹெச்.ராஜா
திருச்செந்தூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த ஹெச்.ராஜா

தலைமறைவான முகிலன் இப்போது பிடிபட்டிருக்கிறார். தேர்தல் சமயத்தில் தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் சில அமைப்புகள் அ.தி.மு.க அரசு முகிலனைக் கடத்திக் கொலை செய்துவிட்டது போல பொய்யைக் கூறியுள்ளனர். தலைமறைவான முகிலன் ஆந்திராவில் பிடிபட்டுள்ளார். அவர் யாரை எல்லாம் சந்தித்தார் என்பதை விரிவாக ஆராயப்பட வேண்டும். இதை நாங்கள் எதிர்மறையான கட்சி என்பதால் கூறவில்லை. இதை கவிஞர் தாமரையும் கூறியுள்ளார்.

இப்படிப்பட்டவர்கள் தமிழகத்தில் சாலையும் வரக் கூடாது, தொழிற்சாலையும் வரக் கூடாது என செயல்படுகிறார்கள். மக்கள் பிரதிநிதிகள் செய்யும் ஊழலை கவனிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், விரைவில் சிவகங்கை, தூத்துக்குடி, நீலகிரி, மத்திய சென்னை ஆகிய நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரலாம். தூத்துக்குடியில் கனிமொழி வெற்றியை எதிர்த்து எங்கள் கட்சி மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஹெச்.ராஜா செய்தியாளர் சந்திப்பு
ஹெச்.ராஜா செய்தியாளர் சந்திப்பு

இந்த வழக்கில் பணம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் உள்ளது. எனவே, வழக்கில் தமிழிசை வெற்றிபெறுவார். எனது தொகுதியில் நான் வழக்கு தொடரத் தேவையில்லை. அவர் மீது ஏற்கெனவே வழக்கு உள்ளது. இங்குள்ள ஊழல் ராணிக்கள், ஊழல் ராஜாக்கள் சிறை செல்வார்கள். வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலிலிருந்து தி.மு.க-வின் சரிவு ஆரம்பமாகும்” என்றார்.