அரசியல்
அலசல்
Published:Updated:

கேபினட் அக்கப்போர்!

கேபினட் அக்கப்போர்!
பிரீமியம் ஸ்டோரி
News
கேபினட் அக்கப்போர்!

தமிழ்க்குரலன், ஓவியம்: சுதிர்

மகனுக்காக மன்றாடும் சீனியர்!

அமைச்சரவையில் டெல்டா மாவட்டங்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்கப்படாதது பெரிய குறையாக இருக்கிறது. ஹாட்ரிக் வெற்றியடைந்த தன் மகனுக்காக, மில்க் சீனியர் தகிடுதத்தம் போட்டும் முதன்மையானவர் மனதை அசைக்க முடியவில்லை. ஜனவரி மாதம் வாரிசுக்கு மகுடம் சூட்டத் திட்டமிட்டிருக்கும் முதன்மையானவரிடம், மறுபடியும் தன் மகனுக்காகப் பேசினாராம் மில்க் சீனியர். ‘பார்க்கலாம்’ என்று மட்டும் பதில் சொன்ன முதன்மையானவர், கற்பிக்கும் துறையின் இளம் அமைச்சரை அழைத்து, “டெல்டாவில் கட்சியை வளர்க்கவேண்டியது உன் பொறுப்பு. வேறு யாருக்கும் இப்போதைக்கு நான் முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன்” என்றாராம். அடுத்தகட்டமாக இல்லத்து ஆட்களை அணுகி மகனுக்காக மன்றாடவிருக்கிறாராம் மில்க் சீனியர்.

கேபினட் அக்கப்போர்!

மகனா... மந்திரியா?

மகனுக்கு ஏதாவது ஒரு முக்கியப் பொறுப்பைப் பெற்றுவிட, பலவிதங்களிலும் காய்நகர்த்துகிறாராம் பசுமையான அமைச்சர். சமீபத்தில் முதன்மையானவரைச் சந்தித்து நீண்ட நேரம் பேசியவர், மகன் குறித்த கோரிக்கையையும் சொல்லியிருக்கிறார்.சம்பந்தப்பட்ட துறையை இப்போது முழுதாக நிர்வகிப்பதே அமைச்சரின் வாரிசுதான். அதை மனதில்வைத்து, “உங்க மகன் இப்பவே பவரில்தானே இருக்கார்?” என முதன்மையானவர் சொல்லிச் சிரிக்க, அமைச்சருக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டதாம். “சும்மா தமாஷுக்குத்தான் சொன்னேன்…” என முதன்மையானவர் சகஜப்படுத்திய பிறகுதான் இயல்புநிலைக்குத் திரும்பினாராம் பசுமையான அமைச்சர்!

கடன் கிடையாது… காரியம் வேணா உண்டு!

கடந்த தேர்தலில், தன் தொகுதியை மட்டுமல்லாமல் தன் மாவட்டத்துக்கு உட்பட்ட அத்தனை தொகுதிகளையும் வெல்லவைக்க வியூகம் வகுத்தார் மேற்கு மாவட்டப் பசை அமைச்சர். அதேபோல் வென்றும் காட்டினார். ஆனால், வியூகத்தைச் செயல்படுத்த அப்போது பசைக்குத் தடுமாறிய அமைச்சர், முன்னாள்-இந்நாள் என வேறுபாடு பார்க்காமல் பலரிடமும் கடன் பெற்றாராம். பணம் கொழிக்கும் வளமான துறைகளுக்கு அமைச்சரான பிறகும், வாங்கிய பசையைத் திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடிக்கிறாராம். “பணமா தர முடியாது. காசு பார்க்கிற வேலைகள் ஏதாச்சும் எடுத்துட்டு வாங்க. செஞ்சு கொடுக்கிறேன்…” எனக் கடன் கொடுத்தவர்களிடம் வித்தியாசமான டீல் பேசுகிறாராம். டீலுக்கு ஒத்துவராதவர்களின் போனை பிளாக் லிஸ்ட்டில் போட்டுவிட்டு, அணுக முடியாத தூரத்துக்குப் போய்விடுகிறாராம்!