Published:Updated:

`நீதிமன்றம் 30 மணி நேரம் வழங்கியது; எங்களுக்கு 30 நிமிடமே போதும்!’- சஞ்சய் ராவத்

'பெரும்பான்மையை நீருபிக்க எங்களுக்கு 30 நிமிடங்கள் போதும்' என சிவசேனாவின் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்

மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. இதில், பா.ஜ.க - சிவசேனா கூட்டணி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது. சுழற்சி முறையில் முதல்வர் பதவி வேண்டும் என்றது சிவசேனா. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையின் போது, இதுகுறித்துப் பேசவில்லையே என்றது, அம்மாநில பா.ஜ.க தரப்பு. சிவசேனா தரப்பு, அமித் ஷா-வுடனான பேச்சுவார்த்தையின்போது இதைத் தெரிவித்தோம்... அவர் ஒப்புக்கொண்டார் என்றது. செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பா.ஜ.க-வின் ஃபட்னாவிஸோ, உத்தவ் தாக்கரே பொய் சொல்வதாகக் கூறினார். ஃபட்னாவிஸின் இந்த வார்த்தை தாக்கரேவுக்கு ஆத்திரத்தைக் கொடுத்தது. மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சியமைக்கும். அதற்கு அமித் ஷா-வோ, ஃபட்னாவிஸோ தேவையில்லை எனக் கொதித்தார்.

உத்தவ் தாக்கரே - ஃபட்னாவிஸ்
உத்தவ் தாக்கரே - ஃபட்னாவிஸ்

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேசியது சிவசேனா. உத்தவ் தாக்கரே தான் முதல்வர் என்று பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவராக இருந்த அஜித் பவார், பா.ஜ.க-வுக்கு ஆதரவு தெரிவித்தார். தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வரானார். இதை சற்றும் எதிர்பாராத சிவசேனா, நீதிமன்றம் சென்றது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. இதற்கிடையில், நேற்று மாலையே சிவசேனா தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் தனியார் ஹோட்டலில் அணிவகுப்பு நடத்தியது. 162-க்கும் அதிகமான ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் வந்திருந்தனர். அவர்கள் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர். அப்போது பேசிய சரத்பவார், பெரும்பான்மை இல்லாமல் ஆட்சியமைக்க இது கோவா இல்லை. இது மகாராஷ்டிரா என்றார்.

`இது ஒன்றும் கோவா அல்ல;   மகாராஷ்டிரா!’- கூட்டணி எம்.எல்.ஏ-க்கள் அணிவகுப்பில் சரத் பவார் #WeAre162

இந்நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது. மகாராஷ்டிர சட்டப்பேரவையில், நாளை (27.11.2019) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். மேலும், ரகசிய வாக்கெடுப்பாக அல்லாமல் வெளிப்படையான வாக்கெடுப்பாக இருக்க வேண்டும் எனவும், உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, துணை முதல்வர் பதவியை அஜித் பவார் ராஜினாமா செய்தார். அவரைத்தொடர்ந்து மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ஃபட்னாவிஸ் ராஜினாமா செய்தார். ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்
`வாக்குறுதி கொடுக்கவில்லை, ஆனாலும் காத்திருந்தோம்!’- முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் பட்னாவிஸ்

உச்ச நீதிமன்ற உத்தரவுகுறித்துப் பேசிய சிவசேனாவின் சஞ்சய் ராவத், “உண்மை வென்றிருக்கிறது. நீதிமன்றம் 30 மணிநேரம் கொடுத்திருக்கிறது. பெரும்பான்மையை நிரூபிக்க எங்களுக்கு 30 நிமிடங்கள் போதும்” என்றார். மேலும், அஜித் பவார் ராஜினாமா செய்த பின்பு எங்களுடன்தான் இருக்கிறார். உத்தவ் தாக்கரே தான் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மகாராஷ்டிராவின் முதல்வர்” என்றார். மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ஃபாட்னாவிஸ் ராஜினாமா செய்ததால், நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறாது. சிவசேனா கூட்டணியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.