Published:Updated:

``தமிழகத்தில் தேசியக் கட்சிகளால் தனித்துப் போட்டியிட முடியுமா?’’ - சீமான் கேள்வி

``தமிழகத்தில் காங்கிரஸ், பா.ஜ.க போன்ற தேசியக் கட்சிகளால் தனித்துப் போட்டியிட முடியுமா... அக்கட்சிகள் தயாரா?” என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சீமான்
சீமான்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் தேர்தல் பிரசாரத்துக்காக நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ``தமிழகத்தில் காங்கிரஸ், பா.ஜ.க கட்சிகள் எதற்கு? இந்தக் கட்சிகள் மொழியை மதிக்குமா, உணர்வை மதிக்குமா, ஸ்டெர்லைட் பிரச்சனை தீர்க்குமா, அணு உலையை மூடுமா, காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்னையில் இந்தக் கட்சிகளின் நிலைப்பாடு என்ன என சொல்ல முடியுமா... காமராஜர் என்ற தலைவர் என்று இறந்தாரோ அன்றே காங்கிரஸும் இறந்து போய்விட்டது.

சீமான்
சீமான்

கேரளாவில் வெல்ல முடியாத காங்கிரஸ், இங்கு கூட்டணியோடு போட்டியிட்டதால்தான் எம்.பி தேர்தலில் 7 இடங்களில் வெற்றி பெற்றது. தமிழகத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடியாது. மக்களின் ஒரு பிரச்னைக்குக்கூட காங்கிரஸ் கட்சி போராடியது கிடையாது. மீத்தேன், ஈத்தேன் உட்பட எல்லா திட்டங்களையும் கொண்டுவந்தது காங்கிரஸ் கட்சிதான். மேடையில் அவர்கள் செய்த நல்ல திட்டங்களைச் சொல்லி வாக்கு பெற முடியாது. மக்களுக்கு பணம் கொடுத்துதான் வாக்குகளைப் பெறுகிறார்கள். நான் எனது உணர்வைப் பதிவு செய்வது சிலருக்கு விருப்பமாக இருக்கிறது. சிலருக்கு வெறுப்பாக இருக்கிறது.

காமராஜரைப் பற்றி பேசுவதற்கு காங்கிரஸ் கட்சியில் யாருக்கும் தகுதி இல்லை. வசந்தகுமார் எம்.பி-யால்தான் நாங்குநேரி தொகுதியில் தேர்தல் திணிக்கப்பட்டது. தமிழகத்தில் காங்கிரஸ், பா.ஜ.க போன்ற தேசியக் கட்சிகளால் தனித்துப் போட்டியிட முடியுமா, அக்கட்சிகள் தயாரா?” என்றார். இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் பிரசாரத்தின்போது ராஜீவ்காந்தி படுகொலை குறித்து சீமான் பேசிய கருத்துக்குக் கண்டனம் தெரிவித்தும், அவரைக் கைது செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட எஸ்.பி அருண்பால கோபாலனிடம் புகார் மனு அளித்தனர்.

காங்கிரஸ் கட்சியினர் நூதனப் போராட்டம்
காங்கிரஸ் கட்சியினர் நூதனப் போராட்டம்

கோவில்பட்டியிலும், சீமானைக் கைது செய்ய வேண்டும், நாம் தமிழர் கட்சியைத் தடை செய்ய வேண்டும், பிரபாகரனின் உருவப்படத்தை அக்கட்சியினர் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோட்டாட்சியர் அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டனர். அப்போது, அலுவலகம் முன்பு கண்ணைக் கட்டி, ராஜீவ்காந்தி படம் ஏந்தி, பாய் விரித்து படுத்து உறங்கி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.