Published:Updated:

`சினிமாவில் பெற்ற வருமானம்; வெளிப்படையாகக் கூற முடியுமா?’ - கமலுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி

கடம்பூர் ராஜூ
கடம்பூர் ராஜூ

``கமல்ஹாசன், இதுவரை நடித்துள்ள திரைப்படங்களில் எவ்வளவு ஊதியம் வாங்கினார், எவ்வளவு வருமான வரி கட்டினார் என வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா?” என அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி எழுப்பியிருக்கிறார்.

`எம்.ஜி.ஆர் பெயரால் கட்சி நடத்தும் அ.தி.மு.க-வின் அமைச்சர்கள் பலர் எம்.ஜி.ஆரை நேரில் பார்த்ததே இல்லை. ஆனால், நான் எம்.ஜி.ஆரின் மடியில் உட்கார்ந்திருக்கிறேன். அவரிடம் பல பாராட்டுகளைப் பெற்றிருக்கிறேன். எம்.ஜி.ஆர் ஏழை மக்களுக்காக ஆட்சி நடத்தினார். ஆனால். தற்போதைய அ.தி.மு.க தலைவர்கள் ஊழல் செய்வதற்காகவே திட்டங்களை அறிவிக்கிறார்கள். தமிழகத்தில் அரசு அதிகாரிகளின் வீடுகளில் சோதனையிடச் செல்லும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், வெறும் கையோடு திரும்பியதில்லை. பெரும்பாலான அதிகாரிகள் திருடித்தான் வைத்திருக்கிறார்கள். அரசு எவ்வழியோ அதிகாரிகளும் அவ்வழி’ எனத் தென் மாவட்டங்களில் கடந்த நான்கு நாள்களாக மேற்கொண்ட பரப்புரையில் பேசிவருகிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

கமலின் இந்தப் பேச்சுகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்திருக்கும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளிடம் கமல்ஹாசன், அமைச்சர்களின் ஊழல்கள் குறித்த பட்டியலைத் தயாரிக்கச் சொன்னதாகவும், இன்னும் சில நாள்களில் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிவருகின்றன.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே குருமலையில் `அம்மா மினி கிளினிக்’ திறப்பு விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு திறந்துவைத்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``நடிகர் கமல்ஹாசன், ஒட்டுமொத்த அரசு அதிகாரிகளையும் தவறாகப் பேசிவருகிறார். கமல்ஹாசன் இதுவரை எத்தனையோ படங்களில் நடித்திருக்கிறார். ஒளிவு மறைவு இல்லாமல் எவ்வளவு ஊதியம் வாங்கினார்,

கடம்பூர் ராஜூ
கடம்பூர் ராஜூ

எவ்வளவு வருமான வரி கட்டினார் என்று அவரால் வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா? இதையெல்லாம் மக்கள் மத்தியில் வெளியிட்ட பின்னர், மற்றவர்களைப் பற்றி அவர் பேசட்டும். முதல்வராக இருந்தாலும், அமைச்சர்களாக இருந்தாலும் நாங்கள்தான் எம்.ஜி.ஆர் ரசிகர்கள். எம்.ஜி.ஆருக்கு பாத்தியப்பட்டவர்களும் நாங்கள்தான். எம்ஜிஆர் நடிகராக இருந்தபோது ரசிகர்களாக இருந்து, அவர் அ.தி.மு.க-வைத் தொடங்கியது முதல் நாங்கள் கட்சிக்குத் தொண்டனாக இருக்கிறோம். எனவே, எம்.ஜி.ஆரைச் சொந்தம் கொண்டாட எங்களுக்கே முழு உரிமை உண்டு.

வேறு யாருக்கும் அவரைச் சொந்தம் கொண்டாட தார்மிக உரிமை கிடையாது . தார்மிக உரிமை இல்லாமல் சொந்தம் கொண்டாடினால் அதற்குப் பெயர் வேறு. தலைவர் என்ற அந்தஸ்துக்கு நடிகர் கமல்ஹாசன் இன்னும் வரவில்லை. வரும் தேர்தலோடு நடிகர் கமல்ஹாசன் தடம் தெரியாமல் போய்விடுவார்” என்றார்.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

’``நடிகர் கமல்ஹாசன் இன்றைய அமைச்சர்களுக்கு எம்.ஜி.ஆரைத் தெரியாது எனக் கூறிவருகிறார். தமிழகத்தில் மூன்று தலைமுறையில் எம்.ஜி.ஆரைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தேர்தல் காலத்தில் மட்டும் மக்களைச் சந்திக்கும் அவர், இதற்கு முன்பு எத்தனை முறை மக்களைச் சந்தித்திருக்கிறார்? கமல்ஹாசன் போன்றவர்கள் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை. புயல், வெள்ளம் போன்ற பேரிடர்ப்பாடுகள் ஏற்பட்டபோதிலும் மக்களுக்காக எந்தப் பங்களிப்பையும் செய்யாமல் அரசு மீது சேற்றை வாரி இறைக்கின்றனர்” என வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமாரும் குற்றம்சாட்டியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு