Published:Updated:

'மகாராஷ்டிரா: 100 கோடி மாமூல் விவகாரம்! - மாஜி அமைச்சர் அனில் தேஷ்முக் மீது அமலாக்கத்துறை வழக்கு'

பரம்பீர் சிங் - தேஷ்முக்
பரம்பீர் சிங் - தேஷ்முக்

மும்பையிலுள்ள பீர் பார்கள் மற்றும் ஹோட்டல்களில் மாதம் ரூ.100 கோடி மாமூல் வாங்கச் சொன்னதாக எழுந்த குற்றச்சாட்டில் மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் புதிதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் உள்துறை அமைச்சராக இருந்த அனில் தேஷ்முக் ஒவ்வொரு மாதமும் மும்பையிலுள்ள பீர் பார் மற்றும் ஹோட்டல்களில் மாமூலாக ரூ.100 கோடி வசூலித்துக் கொடுக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரி சச்சின் வாஸ் என்பவரிடம் கேட்டுக்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. சச்சின் வாஸ் இது தொடர்பாக மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங்கிடம் தெரிவித்தார். பரம்பீர் சிங் இது குறித்து முதல்வருக்குக் கடிதம் எழுதியதோடு அனில் தேஷ்முக் மீதான புகார் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் பரம்பீர் சிங் குற்றச்சாட்டு குறித்து ஆரம்பகட்ட விசாரணை நடத்தி குற்றச்சாட்டில் உண்மைத்தன்மை இருந்தால் வழக்கு பதிவு செய்யும்படி சி.பி.ஐ-க்கு உத்தரவிட்டிருந்தது.

parampir sing and anil deshmukh
parampir sing and anil deshmukh

அதனடிப்படையில் சி.பி.ஐ அதிகாரிகள், புகார் கொடுத்த முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங், போலீஸ் அதிகாரி சச்சின் வாஸ், அனில் தேஷ்முக் மற்றும் அனில் தேஷ்முக்கின் செயலாளர்களிடம் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் அனில் தேஷ்முக் மீது சி.பி.ஐ முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்துள்ளது. அதை ரத்து செய்ய வேண்டும் என்று அனில் தேஷ்முக் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதோடு இது தொடர்பாக சி.பி.ஐ மும்பை உயர் நீதிமன்றத்திலும் அறிக்கை தாக்கல் செய்தது. இந்நிலையில் புதிய திருப்பமாக அனில் தேஷ்முக் மீது அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். சி.பி.ஐ மற்றும் அமலாக்கப் பிரிவு ஆகிய இரு விசாரணை ஏஜென்சிகள் அனில் தேஷ்முக் மீது வழக்கு பதிவு செய்திருப்பது ஆளும் சிவசேனா கூட்டணி அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விரைவில் அனில் தேஷ்முக்கை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணைக்கு அழைப்பார்கள் என்று தெரிகிறது. விசாரணையின் இறுதியில் கைதுசெய்யவும் வாய்ப்பு இருக்கிறது.

இதற்கிடையே பரம்பீர் சிங் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்திய போலீஸ் அதிகாரி பீம்ராவ் தனக்கு பரம்பீர் சிங்கால் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். பரம்பீர் சிங் தானேயில் பணியாற்றியபோது அவருடன் பீம்ராவும் பணியாற்றினார். பரம்பீர் சிங்கும் அவருடன் பணியாற்றிய சில அதிகாரிகளும் சேர்ந்து ஊழல் செய்ததாக சமீபத்தில் பீம்ராவ் குற்றம்சாட்டினார். அதன் அடிப்படையில் பரம்பீர் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது பீம்ராவ் அகோலாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவரது குடும்பம் இன்னும் மும்பை அருகிலுள்ள கல்யாணில் வசித்துவருகின்றனர். அவர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், எனவே அவர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று முதல்வர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு பீம்ராவ் கடிதம் எழுதியிருக்கிறார். இதுவரை தனக்கு எந்தவித மிரட்டலும் வரவில்லை என்றும், அதே சமயம் எதுவும் சொல்லிக்கொண்டு வருவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். `நான் அகோலாவில் இருக்கிறேன். ஆனால் என் குடும்பம் கல்யாணில் இருக்கிறது. எனவே அவர்களுக்குப் பாதுகாப்பு மிகவும் அவசியம்’ என்று தெரிவித்துள்ளார். பரம்பீர் சிங் மட்டுமல்லாமல் 27 போலீஸார் மீது பீம்ராவ் ஊழல் புகார் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு