Published:Updated:

டீக்கடையில் பெண்ணிடம் தகராறு; போதையில் திமுக நிர்வாகிகள் மோதல்! - இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு

குடி போதையில் ரகளை செய்த திமுக நிர்வாகிகள்
குடி போதையில் ரகளை செய்த திமுக நிர்வாகிகள் ( ம.அரவிந்த் )

`திமுக-வில் முக்கியப் பொறுப்பில் உள்ளவர்களான மன்னார்குடியைச் சேர்ந்த சிலர் கடைக்கு வந்தபோது நல்ல குடி போதையில் இருந்தனர். பெட்டிக்கடையில் இருந்த பெண்ணிடம் சிகரெட் கேட்டுவிட்டு பாட்டிலில் வைக்கப்பட்டிருந்த பொருள்களை அவர்களாகவே எடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் அருகேயுள்ள டீக்கடை ஒன்றில் மன்னார்குடியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் சிலர் குடிபோதையில் கடையில் வேலை செய்த பெண்ணிடம் ரகளை செய்ததால், கடையின் ஊழியர்களும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களும் எதிர்த்து கேட்டுள்ளனர். இதில் இரு தரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் இரு தரப்பைச் சேர்ந்த ஏழு பேருக்குக் காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சம்பவம் நடந்த பேக்கரி
சம்பவம் நடந்த பேக்கரி

தஞ்சாவூர் அருகேயுள்ள சூரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் (45). இவர் தஞ்சை அருகே பட்டுக்கோட்டை-மன்னார்குடி பிரிவு சாலையில் `ஐயங்கார் கேக் ஷாப்’ என்ற பெயரில் பேக்கரியும், டீக்கடையும் நடத்திவருகிறார். இந்தநிலையில், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி திமுக நகர அமைப்பாளரான சுதாகர், தொண்டரணி அமைப்பாளரான பாண்டவர், மாணவரணி துணைச் செயலாளர் முருகேசன் உள்ளிட்ட ஆறு பேர் நேற்று மாலை கந்தர்வக்கோட்டையில் நடைபெற்ற கறி விருந்துக்குச் சென்றுவிட்டு, கார் மூலம் திரும்பி பிரிவு சாலை வழியாக மன்னார்குடிக்குச் சென்றிருக்கின்றனர்.

அப்போது பிரிவு சாலைக்கு அருகிலிருந்த காவிரி கிளை ஆற்றில் குளித்திருக்கிறார்கள். பின்னர் பேக்கரியுடன் ஒட்டியிருந்த பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கியிருக்கிறார்கள். எட்டுப் பேரும் நல்ல குடி போதையில் இருந்ததால், அவர்கள் கடையிலிருந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசியதாகச் சொல்லப்படுகிறது. இதில் பயந்துபோன அந்தப் பெண் அருகில் இருந்தவர்களை அழைத்து இதைக் கூறியுள்ளார். பேக்கரியின் உரிமையாளர் ஆனந்தனும் ஊழியர்களும், `ஏன் இப்படிச் செய்றீங்க?’ என்று கேட்டதற்கு அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசியதாகத் தெரிகிறது.

மோதல் நடந்த பேக்கரி
மோதல் நடந்த பேக்கரி

வார்த்தைகள் முற்றிய நிலையில் திமுக நிர்வாகிகள் கடையில் இருந்த டேபிள், கண்ணாடி போன்றவற்றை அடித்து நொறுக்கினர். இதையறிந்த சூரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சிலர் சம்பவ இடத்துக்கு வந்துவிட்டனர். பின்னர் இரு தரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் திமுக நிர்வாகிகள் சிலருக்கு மண்டை உடைந்து ரத்தம் வழிந்தது. இதையடுத்து போலீஸார் வந்து இரு தரப்பிலும் காயமடைந்தவர்களை மீட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். காயம்பட்டவர்களுக்கு சிகிச்சை தொடர்ந்துவருகிறது. மேலும் இரு தரப்பினர் மீதும் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து சிலரிடம் பேசினோம். ``மன்னார்குடியைச் சேர்ந்த, திமுக-வில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களான சிலர் கடைக்கு வந்தபோது நல்ல குடி போதையில் இருந்தனர். பெட்டிக்கடையிலுள்ள பெண்ணிடம் சிகரெட் கேட்டுவிட்டு பாட்டிலில் வைக்கப்பட்டிருந்த பொருள்களை அவர்களாகவே எடுத்திருக்கிறார்கள். அதற்கு அந்தப் பெண், `ஏன் அவசரப்படுறீங்க... நானே எடுத்து தர்றேன்’ என்று சொல்லியிருக்கிறார்ர். அதற்கு அவர்கள் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். அவர்கள் சரியில்லாத நிலையில் இருப்பதை அறிந்த அந்தப் பெண் அருகில் இருந்தவர்களை, உதவிக்குக் கூப்பிட்டிருக்கிறார்.

சேதமடைந்த பொருள்கள்
சேதமடைந்த பொருள்கள்

பின்னர் அவர்கள், `நாங்க என்ன உன் கையைப் பிடிச்சா இழுத்தோம்?’ என்று கேட்டு பிரச்னை செய்திருக்கிறார்கள். துப்பட்டாவையும் பிடித்து இழுத்திருக்கிறார்கள். பதறிப்போன அந்தப் பெண் கூச்சலிட்டுக் கத்தியிருக்கிறார். இதைத் தொடர்ந்து கடையில் வேலை செய்த ஊழியர்கள் வந்து கேட்டிருக்கிறார்கள். அதன் பிறகும் அடங்காத அந்த நபர்கள் கடைக்கு வெளியில் இருந்த பொருள்களை அடித்து நொறுக்கினர்.

சென்னை: `எங்ககிட்டேயே பணம் கேக்குறியா?' - 1,000 ரூபாய் டீசலுக்கு நடந்த ரகளை; வலைவீசும் போலீஸ்

இந்தத் தகவல் சூரக்கோட்டைக்குப் பரவிவிட்டது. இதையடுத்து ஊரைச் சேர்ந்த சிலரும் வந்துவிட்டனர். தாங்க முடியாத அட்டகாசத்தைப் பார்த்து அவர்களும் எதிர்த்து கேட்டிருக்கிறார்கள். அப்போது இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் திமுக-வைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலருக்குக் கடுமையாக அடிபட்டது. மண்டை உடைந்து ரத்தம் வழிந்த நிலையில், சட்டையெல்லாம் ரத்தக்கறையானது. ஒருகட்டத்தில் அவர்கள் காரில் தப்பியோட முயன்றனர். ஆனால், முடியவில்லை.

மருத்துவமனையில் சிகிச்சை
மருத்துவமனையில் சிகிச்சை

பேக்கரி தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் வந்து காயம்பட்ட இரு தரப்பைச் சேர்ந்தவர்களையும் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். குடி போதையில் ரகளை செய்தவர்கள் திமுக நிர்வாகிகள் என்பதால் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது” என்றனர்.

ராஜ்ய சபா எம்.பி பதவி: திமுக-வில் கிடுகிடு ரேஸ் ஆரம்பம்; காங்கிரஸ் மூத்த தலைவருக்கு வாய்ப்பா?!

இந்தப் பிரச்னையை அறிந்த மன்னார்குடியைச் சேர்ந்த முக்கிய திமுக நிர்வாகி ஒருவர் பேக்கரி தரப்பைச் சமாதானம் செய்வதற்காகப் பேசிவருவதாகச் சொல்லப்படுகிறது. போலீஸ் தரப்பில் பேசினோம், ``இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வார்த்தைகள் முற்றிய நிலையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்திருக்கிறோம். சிகிச்சைக்கு பிறகு இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு