Published:Updated:

மாவட்ட ஆட்சியர் கொடுத்த புகார்... செந்தில் பாலாஜிமீது 6 பிரிவுகளில் வழக்கு!

ஆட்சியரிடம் செந்தில் பாலாஜி மனு அளித்தபோது...
ஆட்சியரிடம் செந்தில் பாலாஜி மனு அளித்தபோது... ( நா.ராஜமுருகன் )

செந்தில் பாலாஜி மீது, ஐ.பி.சி 143 (5 பேருக்கு அதிகமாகக் கூடுதல்) 270 (கிருமி பரப்பும் நோக்கில் செயல்படுதல்), 153, 294 (பி) , 353, 506 (2) உள்ளிட்ட 6 சட்டப் பிரிவுகளின் கீழ், கரூர் தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் குறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்தது தொடர்பாக, ஆட்சியர் கொடுத்த புகாரின் அடிப்படையில், அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி மீது, கரூர் தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் 6 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆட்சியரிடம் செந்தில் பாலாஜி மனு அளித்தபோது...
ஆட்சியரிடம் செந்தில் பாலாஜி மனு அளித்தபோது...
நா.ராஜமுருகன்

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில், தி.மு.க-வின் 'ஒருங்கிணைவோம் வா' என்ற திட்டத்தின் அடிப்படையில், கரூர் மாவட்ட தி.மு.க சார்பில் மக்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கினர். அப்போது, பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களையொட்டி, அரசு செய்யவேண்டிய விஷயங்கள் பற்றியும், அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக தி.மு.க-வினர் வழங்கினர். அந்த அடிப்படையில், கடந்த 12 -ம் தேதி, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்ற அரவக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி, கரூர் மாவட்டத்தில் பொதுமக்கள் தெரிவித்த கோரிக்கைகளை மனுவாக ஆட்சியரிடம் வழங்கினார்.

`1 கோடி ரூபாயில் ஒரு ரூபாய்கூட செலவழிக்கவில்லை!'- செந்தில் பாலாஜியைக் கொதிக்கவைத்த `22 நாள்கள்'

அப்போது, 'கரூர் மாவட்டத்தில் நடக்கும் அரசு நிகழ்ச்சி மற்றும் ஆலோசனைக் கூட்டங்களுக்கு மக்கள் பிரதிநிதியான தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மற்றும் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணிக்கு தகவல் கொடுப்பது இல்லை' என மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தார். அப்போது, 'ஆளும் கட்சியில் உள்ள எம்.எல்.ஏ-க்கள் தகவல் அறிந்து அவர்களாகவே வந்து கலந்துகொள்கின்றனர். நீங்கள் வேண்டுமானாலும் தானாகக் கலந்துகொள்ளலாம்' என மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தன்னிடம் கூறியதாக, செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அன்பழகன் (கரூர் மாவட்ட ஆட்சியர்)
அன்பழகன் (கரூர் மாவட்ட ஆட்சியர்)
நா.ராஜமுருகன்

அதைத் தொடர்ந்து, "கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் படித்த முட்டாள் போல பேசுகிறார்" என்று செய்தியாளர்களிடம் காட்டமாகப் பேட்டியளித்தார். இதைத் தொடர்ந்து, கடந்த 15 -ம் தேதி, கரூர் மாவட்ட தி.மு.க சார்பில் நடத்தப்பட்ட ரத்ததான முகாமில் கலந்துகொண்ட செந்தில்பாலாஜி, அப்போதும் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அந்தப் பேட்டியின்போது, மாவட்ட ஆட்சியர் அரசு விழாவிற்கு, தங்களை அழைக்காமல் இருப்பது குறித்து சுட்டிக்காட்டி பேசிய அவர், "ஏற்கெனவே, தேர்தல் நேரத்தில் 100 தி.மு.க-வினர் கூட்டமாகச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் பிரச்னை செய்ததாகவும், அதற்கான ஆதாரம் இருப்பதாகவும் கூறியிருந்தார்.

ஆனால், இதுவரை அந்த ஆதாரத்தை ஆட்சியர் வெளியிடவில்லை. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. மாவட்ட ஆட்சியரை நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க வைப்போம்" எனக் கூறியிருந்தார். இந்த நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், கடந்த 16-ம் தேதி, கரூர் தான்தோன்றிமலை காவல் நிலையத்தில், செந்தில் பாலாஜி மீது புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, அரவக்குறிச்சி தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி மீது, ஐ.பி.சி 143 (5 பேருக்கு அதிகமாக கூடுதல்), 270 ( கிருமி பரப்பும் நோக்கில் செயல்படுதல்), 153 ( திட்டமிட்டு ஈடுபடுதல்) 294 (பி) (தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தி இழிவாகப் பேசுதல்), 353 (அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்தல்), 506 (2) (அச்சுறுத்துதல்) உள்ளிட்ட 6 சட்டப் பிரிவுகளின் கீழ், கரூர் தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி
நா.ராஜமுருகன்

இதுகுறித்து செந்தில் பாலாஜியிடம் பேசினோம். 'ஆட்சியர் செய்யும் தவற்றை சுட்டிக்காட்டியதால், என்மீது வழக்கு கொடுத்திருக்கிறார். இதுதான் ஜனநாயகமா? அவர் என்மீது கொடுத்துள்ள வழக்கை சட்டப்படி சந்திப்பேன்" என்றார்.

தி.மு.க எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி மீது, ஆட்சியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம், கரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அடுத்த கட்டுரைக்கு