Election bannerElection banner
Published:Updated:

`போராடாத மாணவர்கள் மீது வழக்குப் பதிவா?!' -தஞ்சை கல்லூரியைச் சுற்றும் சர்ச்சை

கல்லூரி
கல்லூரி ( ம.அரவிந்த் )

`குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராகப் போராடியதாகக் கூறி எட்டு மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கல்லூரி நிர்வாகத்தின் தூண்டுதலின் பேரில்தான் இவை நடந்துள்ளதாகத் தெரிகிறது'

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்திய தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மீது இரண்டு பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் உட்பட 8 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்

தமிழகம் முழுவதும் குடியுரிமைச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் எனத் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்ட உடனேயே டிசம்பர் 16-ம் தேதி இந்திய மாணவர்கள் சங்கத்தின் சார்பில் தஞ்சாவூரில் உள்ள மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடியுரிமைச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதன் பின்னர் போலீஸார் மாணவர்களை அப்புறப்படுத்தினர்.

இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் 8 மாணவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்ததுடன், இந்தத் தகவலைக் கல்லூரி முதல்வருக்கு அனுப்பிவைத்தனர். இதில் பார்வையற்ற இரண்டு மாணவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதியப்பட்ட மாணவர்களின் பெற்றோரிடத்தில் விளக்கம் கேட்டு கல்லூரி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இது மாணவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்

இது குறித்து இந்திய மாணவர் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் அரவிந்தசாமி கூறியதாவது, ``இந்திய குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி முன் திரண்டு போராட்டம் நடத்தினோம். அதன் பிறகு சமீபத்தில் கல்லூரியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும், கல்லூரிக்கு ஒதுக்கப்படும் நிதி முறைகேடு செய்யப்படுவதாகவும் கூறி போராட்டம் நடத்தினோம். அதன் பின்னர் கல்லூரி நிர்வாகம் மாணவர்களைப் பழி வாங்கும் நோக்கத்தோடு செயல்படத் தொடங்கியது.

இந்த நிலையில் காவல்துறையில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராகப் போராடியதாகக் கூறி எட்டு மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கல்லூரி நிர்வாகத்தின் தூண்டுதலின் பேரில்தான் இவை நடந்துள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து கல்லூரி முதல்வர் செந்தமிழ்ச்செல்வி வழக்கு பதியப்பட்ட மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் 5 பேர், இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 3 பேர் என மொத்தம் 8 மாணவர்களுடைய பெற்றோர்களுக்குத் தனித் தனியாக கடிதம் அனுப்பியுள்ளனர்.

கல்லூரி
கல்லூரி

அதில், ``உங்கள் மகன் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் மற்ற மாணவர்களையும் ஈடுபட வைத்து கல்லூரியின் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டுள்ளார். அவர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக நீங்கள் நேரில் வந்து விளக்கமளிக்க வேண்டும் இல்லையென்றால் உங்கள் மகன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கடிதம் அனுப்பினர். இதைத் தொடர்ந்து சிலரின் பெற்றோர் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.

இது மாணவர்களை மிரட்டும் செயலாக நாங்கள் பார்க்கிறோம். இனி இது போன்ற மக்கள் பிரச்னைக்காக மாணவர்கள் ஒன்றிணைந்து போராடக் கூடாது என நினைத்தே எங்களை நசுக்கும் செயலை கல்லூரி நிர்வாகமும் காவல்துறையும் இணைந்து செய்துள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் வழக்குப் பதியப்பட்ட இரண்டாம் ஆண்டு மாணவர்கள் இரண்டு பேர் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள். அவர்கள் போராட்டத்தில் பங்குபெறவே இல்லை. அவர்கள் மீது வழக்கு பதிந்துள்ளது வேடிக்கையாக உள்ளது" என்றார்.

போராட்டம்
போராட்டம்

இது குறித்து மருத்துவக்கல்லூரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரனிடம் பேசினோம், ``போராட்டம் நடத்தியது தொடர்பாக மாணவர்களிடையே விசாரித்த போது அவர்கள் கொடுத்த பெயர்களின் அடிப்படையில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இதில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் இருப்பதற்கு வாய்ப்பில்லை" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு