Published:Updated:

திருப்பத்தூர்: `தி.மு.க-வில் சாதி பார்த்து பதவி?’ - அறிவாலயம் பறந்த புகார் கடிதம்

புகார் கடிதம்
புகார் கடிதம்

திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க-வில், பதவிக்காக அடித்துக்கொள்ளும் நிர்வாகிகள் சாதிப் பிரச்னையைக் கிளப்பியிருப்பதால், அறிவாலயத்துக்கும் புகார் கடிதம் பறந்திருக்கிறது.

திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க-வில், தொடர்ந்து சர்ச்சையான விவகாரங்கள் நடைபெற்றுவருகின்றன. வாணியம்பாடி நகர பொறுப்பாளர் வி.எஸ்.சாரதிகுமார் சில மாதங்களுக்கு முன்பு பெண் விவகாரத்தில் சிக்கினார். சொத்துகளையும் நகைகளையும் பறித்துவிட்டதாக சாரதிகுமார் மீது அவரின் மனைவி ரம்யாவும், சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். மனநலம் பாதிக்கப்பட்டவரிடம் சொத்துகளை அபகரித்த புகாரிலும் சாரதிகுமாரின் பெயர் அடிபட்டதால் பொறுப்பிலிருந்து அவரை நீக்கியது தி.மு.க தலைமை. காவல் நிலையத்திலும் சாரதிகுமார் மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டன.

நகர பொறுப்பாளர் சாரதிகுமார்
நகர பொறுப்பாளர் சாரதிகுமார்

சாரதிகுமாரின் சர்ச்சைப் பின்னணியில், வேலூர் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஏ.சி.தேவகுமார் இருக்கிறார் என்று தலைமையிடம் புகார் செல்ல, அவரும் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், துரைமுருகனின் ஆசியுடன் மீண்டும் வாணியம்பாடி நகரச் செயலாளர் பொறுப்பில் சாரதிகுமார் அமர்ந்துவிட்டார். தேவகுமாருக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. தேவகுமார் வகித்துவந்த மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பொறுப்பில், ராமநாயக்கன்பேட்டையைச் சேர்ந்த இளம் வழக்கறிஞர் ஜி.பூபதி நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கான அறிவிப்பு கடந்தவாரம் `முரசொலி’யில் வெளியானது.

வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளராகப் பூபதி நியமிக்கப்பட்டதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் துணை அமைப்பாளர்களாக உள்ள ராம அசோகன், ராஜாங்கம் ஆகியோர் தலைமைக்குப் புகார் கடிதங்களை அனுப்பியுள்ளனர். அந்தக் கடிதத்தில், ``தி.மு.க-வில் சாதிப் பாகுபாடு பார்க்கப்படுகிறது. பட்டியலின நிர்வாகிகளுக்குப் பொறுப்புகள் மறுக்கப்படுகிறது. கலைஞர் மறைந்த பிறகு சமநீதியும் சமூக நீதியும் தி.மு.க-வில் மறைந்துவிட்டது’’ என்று உட்கட்சிப் பிரச்னையை வெளிப்படையாக சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.

வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ராஜாங்கத்திடம், இதுதொடர்பாகப் பேசினோம். ``மனுவில் சுட்டிக் காட்டியிருப்பது 100 சதவிகிதம் உண்மை. என் அப்பா காலத்தில் இருந்து இந்தக் கழகத்துக்காக உழைத்திருக்கிறேன். மாணவர் அணி, இலக்கிய அணியில் துணை அமைப்பாளராக இருந்து தற்போது வழக்கறிஞர் அணியில் இருக்கின்றேன்.

துணை அமைப்பாளர் ராம அசோகன்
துணை அமைப்பாளர் ராம அசோகன்

9 பேர் துணை அமைப்பாளர்களாக உள்ள நிலையில், அவர்களில் ஒருவரை மாவட்ட அமைப்பாளராக நியமனம் செய்திருக்கலாம். `மாவட்ட அமைப்பாளர் பொறுப்பை எனக்குக் கொடுங்கள்’ என்று கேட்டிருந்தேன். ஆனால், எங்களுக்குப் பதவி கொடுக்காமல் வாணியம்பாடி நீதிமன்ற கிளை அமைப்பாளராக இருந்தவரை மாவட்ட அமைப்பாளர் பொறுப்பில் அமர வைத்துள்ளனர். இப்படியிருக்க, திருப்பத்தூர் நகரச் செயலாளராக உள்ள ராஜேந்திரன் என்பவர் என்னை கட்சிப் பணியைக்கூடச் செய்ய விடுவதில்லை. நான் பேனர் வைத்தாலும் துரைமுருகன், மாவட்டச் செயலாளர் படத்தைக்கூட போட்டதில்லை. இவர்களால் எனக்கு சுய விளம்பரம் வேண்டாம். நான் அனுப்பிய மனுமீது தலைமை சரியான முடிவு எடுக்காது என்றுதான் நினைக்கிறேன்’’ என்றார்.

மற்றொரு துணை அமைப்பாளர் ராம அசோகன், ``அந்த மனுவை நான் அனுப்பவில்லை. என் பெயரில், எனக்கு வேண்டாதவர்கள் இப்படிச் செய்திருக்கிறார்கள். அறிக்கையை நானும் பார்த்தேன். லெட்டர் பேடை திருடிக்கிட்டு போய் என் கையெழுத்தைக் கிறுக்கியிருக்கிறார்கள். இந்த அளவுக்கு நான் மரியாதை குறைவாகக் கடிதம் எழுத மாட்டேன். ஜீரோ க்ரைமில் (சைபர்) புகார் அளிக்க உள்ளேன்’’ என்றார்.

இவர்களின் புகார் மனுவின் உண்மைத் தன்மை குறித்து தி.மு.க சட்டத்துறை தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் கிரிராஜன் ஆகியோர் விசாரணை நடத்திவருகிறார்கள்.

துணை அமைப்பாளர் ராம அசோகன்
துணை அமைப்பாளர் ராம அசோகன்

தி.மு.க முக்கிய புள்ளிகள் சிலர், ``தனிப்பட்ட பதவி சுகத்துக்காக ஊடகங்களுக்குப் புகார் மனுவை அனுப்பி கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியிருக்கிறார்கள். வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர்களாக உள்ள ராம அசோகன், ராஜாங்கம் மீது தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உள்ளது’’ என்றனர்.

இதுதொடர்பாக மாவட்டச் செயலாளர் தேவராஜிடம் கேட்டபோது, ``பொறுப்பு வேண்டுமென்றால், தலைமையிடம் வலியுறுத்தியிருக்க வேண்டும். அதைவிடுத்து பொது வெளியில் உட்கட்சிப் பிரச்னையைப் பேசுவது கண்டிக்கத்தக்கது. நிர்வாகிகளின் பெயரைக் குறிப்பிட்டு அவர்களின் சாதியையும் சொல்லியிருப்பது அநாகரிகமான செயல். தலைமை எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு