Published:Updated:

`பான் மசாலா கடைபோல் ஆகிவிட்டது சி.பி.ஐ!’ - பா.ஜ.க அரசைச் சாடிய மகாராஷ்டிரா அமைச்சர்

அஸ்லாம் ஷேக்
அஸ்லாம் ஷேக்

ஆட்சி இல்லாத மாநிலங்களில் தன் ஆதிக்கத்தைச் செலுத்த சி.பி.ஐ -ஐ ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது பா.ஜ.க என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

சமீபகாலங்களில் மாநில எல்லைக்கு உட்பட்ட வழக்குகளில் சி.பி.ஐ அதிகம் பங்குவகிப்பதாக எழுந்த புகாரை அடுத்து அந்த வழக்கு உச்ச நீதிமன்றம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், பி.ஆர்.காவே ஆகியோர் அடங்கிய அமர்வு இதை விசாரித்தது.

அப்போது, மாநில அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்ட பகுதிகளில் சி.பி.ஐ விசாரணை நடத்தும்போது சம்பந்தப்பட்ட மாநில அரசின் ஒப்புதல் கண்டிப்பாகத் தேவை. ஒப்புதல் இல்லாமல் விசாரணை நடத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

நீதிமன்றம்
நீதிமன்றம்

இந்தத் தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்த மகாராஷ்டிரா அமைச்சர் அஸ்லாம் ஷேக், ``பா.ஜ.க ஆட்சியில் சி.பி.ஐ ஒரு பான் மசாலா கடைபோல் மாறிவிட்டது. யார் வேண்டுமானாலும் நுழையலாம், அதுன் செயல்பாடுகளில் தலையிடலாம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. ஆட்சி இல்லாத மாநிலங்களில் தன் ஆதிக்கத்தைச் செலுத்த சி.பி.ஐ -ஐ ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறது பா.ஜ.க. அம்மாநில முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மேல் பழி சுமத்த ஒரு வழியாக சி.பி.ஐ பயன்படுத்தப்பட்டுவந்தது. எங்கே, யார் மீது வேண்டுமானாலும் குற்றம் சுமத்த முடியும் என்பதுபோல் ஆகிவிட்டது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் அந்தத் திட்டம் முறிக்கப்படும். அதனால் இந்தத் தீர்ப்பை வரவேற்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

`அனுமதியில்லாமல் விசாரிக்க முடியாது!’- டி.ஆர்.பி வழக்கில் சி.பி.ஐ-க்குக் கடிவாளம்போட்ட மகாராஷ்டிரா

சி.பி.ஐ என்பது டெல்லி சிறப்பு போலீஸ் ஸ்தாபனச் சட்டம் 1963-ன் படி உருவாக்கப்பட்டது. லஞ்ச ஒழிப்புக்காக சந்தானம் தலைமையிலான கமிட்டியின் பரிந்துரையால் உருவாக்கப்பட்டது. சி.பி.ஐ விதி பிரிவு 6-ன் படி நடுவண் அரசு, மாநில அரசின் எல்லைக்குட்பட்ட வழக்குகளை விசாரிக்க, மாநில அரசின் அனுமதி பெறாமலோ அல்லது பொது அனுமதி பெற்றோ சி.பி.ஐ -ஐ நியமிக்கலாம். இது கூட்டாட்சி அமைப்பின் அங்கமாகக் கருதப்பட்டுவந்தது.

சி.பி.ஐ
சி.பி.ஐ

ஆனால் சமீபகாலங்களில் அரசியல் காரணங்களுக்காக நடுவண் அரசு சி.பி.ஐ-ன் பலத்தை மாநிலங்கள் மேல் செலுத்துவதாக புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன. உத்தரப்பிரதேச மாநிலச் செய்தி நிறுவனங்கள் மீது சி.பி.ஐ வழக்கு பதிந்தது, மகாராஷ்டிரா போலீஸ் விவகாரங்களில் சி.பி.ஐ உள் நுழைந்தது எனப் புகார்கள் எழ, இந்த விவகாரம் உச்ச நீதிமன்றப் பார்வைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

நேற்றைய விசாரணையில் உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ விதி 6-ஐ விலக்கி, மாநில எல்லைக்குட்பட்ட வழக்குகளில் சி.பி.ஐ விசாரணை நடத்த மாநில அரசிடம் கட்டாயம் அனுமதி பெற வேண்டும் என்று தீர்ப்பளித்திருக்கிறது. இதனால், மத்திய அரசின் அரசியல் உள்ளீடுகள் மாநிலங்களின் மீது விழும் சாத்தியக்கூறுகள் குறையும் என்று நம்பப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு