Published:Updated:

வேலூர்: துரைமுருகன் ஆதரவாளர் வீட்டில் திடீர் ரெய்டு! - அதிரடிகாட்டிய சி.பி.ஐ

கதிர் ஆனந்த் - துரைமுருகன்
கதிர் ஆனந்த் - துரைமுருகன்

தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு நெருக்கமான பிரமுகரின் வீட்டில், சி.பி.ஐ அதிகாரிகள் இன்று அதிரடியாக சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் சமயத்தில், காட்பாடி காந்தி நகரிலுள்ள தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனின் வீட்டிலிருந்து 10 லட்ச ரூபாயை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து, காட்பாடியை அடுத்திருக்கும் பள்ளிக்குப்பம், மோட்டூரில் வசிக்கும் துரைமுருகனுக்கு நெருக்கமானவரும், வேலூர் மாநகர தி.மு.க-வில் விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளராகவும் இருப்பவர் பூஞ்சோலை சீனிவாசன். இவருக்குச் சொந்தமான சிமென்ட் குடோனிலிருந்து மூட்டை மூட்டையாக ரூ.10.57 கோடி ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பூஞ்சோலை சீனிவாசன்
பூஞ்சோலை சீனிவாசன்

இந்த பணத்துடன் வேலூர் நாடாளுமன்ற வாக்காளர்களுக்குப் பட்டுவாடா செய்வதற்கான பட்டியலும் சிக்கியதாகக் கூறப்பட்டது. கைப்பற்றப்பட்ட பணம் வேலூரிலுள்ள கனரா வங்கியில் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் பெயரிலிருக்கும் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டதற்கான சீரியல் எண் இருப்பதாகவும், வருமான வரித்துறை விளக்கம் அளித்திருந்தது. இதைத் தொடர்ந்து, தி.மு.க வேட்பாளரான கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன் உட்பட மூன்று பேர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன், வேலூர் தேர்தலும் ரத்துசெய்யப்பட்டது. பின்னர் நடைபெற்ற தேர்தலில், கதிர் ஆனந்த் வெற்றிபெற்று ஒரு வருடம் முடிவடைந்திருக்கிறது.

`தமிழ்நாடு இல்லத்தில் அத்துமீறி நுழைந்து உளவுத்துறை மிரட்டல்!' - தி.மு.க எம்.பி கதிர் ஆனந்த் புகார்

இந்த நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது பேசிய கதிர்ஆனந்த், ``டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்தபோது, உளவுத்துறை அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அனுமதியின்றி உள்ளே வந்து தன்னை அச்சுறுத்தினர்’’ என்று சபாநாயகரிடம் திடுக்கிடும் புகார் கூறினார். இது தொடர்பாக, டெல்லி போலீஸாரும் விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தச் சூழலில், துரைமுருகனுக்கு நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடியாகச் சோதனை நடத்தியிருக்கிறார்கள்.

பூஞ்சோலை சீனிவாசன் வீடு
பூஞ்சோலை சீனிவாசன் வீடு

இன்று காலை 7 மணியளவில், சென்னைப் பதிவெண் கொண்ட இரண்டு கார்களில் வந்த சி.பி.ஐ அதிகாரிகள், பூஞ்சோலை சீனிவாசனை வீட்டுக்குள் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். வீடு முழுவதும் சோதனையும் மேற்கொண்டனர். அந்த நேரத்தில், பூஞ்சோலை சீனிவாசனுக்கு வேண்டப்பட்ட யாரையும் வீட்டுக்குள் அனுமதிக்காத சி.பி.ஐ அதிகாரிகள், அனைத்து கதவு, ஜன்னல்களையும் உள்பக்கமாகப் பூட்டிவிட்டு மதியம் வரை விசாரணையைத் தொடர்ந்தனர். அதன் பின்னரே புறப்பட்டுச் சென்றனர்.

தேர்தல் நேரத்தில் பிடிபட்ட கோடிக்கணக்கான ரூபாய் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும், விசாரணைக்கு ஆஜராகுமாறு நேரில் சம்மன் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு