Published:Updated:

ஆளுங்கட்சியின் அடியாளா சி.பி.ஐ?

சி.பி.ஐ
பிரீமியம் ஸ்டோரி
News
சி.பி.ஐ

தனது எஜமானனின் கட்டளைக்குக் காத்திருந்து ‘பாயும்’ ஏவல் துறையாகவே மாறிவிட்டிருக்கிறது, நாட்டின் மிக உயர்ந்த விசாரணை அமைப்பாகக் கருதப்படும் சி.பி.ஐ!

‘சி.பி.ஐ ஜாக்கிரதை!’ என்று மத்திய அரசு எச்சரிக்கைப் பலகை ஒன்றை மாட்டிவைக்காததுதான் பாக்கி. மற்றபடி, தனது எஜமானனின் கட்டளைக்குக் காத்திருந்து ‘பாயும்’ ஏவல் துறையாகவே மாறிவிட்டிருக்கிறது, நாட்டின் மிக உயர்ந்த விசாரணை அமைப்பாகக் கருதப்படும் சி.பி.ஐ!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

2013, மே 8-ம் தேதி இதையே வேறு வார்த்தைகளில் சொன்னார் அன்றைய உச்ச நீதிமன்ற நீதிபதி லோதா... “கூண்டில் அடைக்கப்பட்ட கிளிபோல இருக்கும் சி.பி.ஐ-க்கு ஏராளமான எஜமானர்கள். அவர்கள் சொல்வதைத் திருப்பிச் சொல்லும் கிளிப்பிள்ளையாக அது இருக்கிறது’ என்றார் அவர். `கோல்கேட்’ என வர்ணிக்கப்பட்ட நிலக்கரி ஒதுக்கீடு வழக்கில்தான் இப்படியொரு விமர்சனத்தைவைத்தார் லோதா. அப்போது ஆட்சியிலிருந்தது காங்கிரஸ். அதன் பிறகு 2014-லிருந்து பா.ஜ.க-வின் முறை. சி.பி.ஐ அமைப்பைக் கையாள்வதில் பா.ஜ.க-வும் காங்கிரஸும் துருப்பிடித்த நாணயத்தின் இரு பக்கங்கள்!

மாநில அரசு தொடங்கி அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் என்று யாரையேனும் வழிக்குக் கொண்டுவர வேண்டுமா... இருக்கவே இருக்கிறது சி.பி.ஐ அமைப்பு. முன்னதாக வருமான வரித்துறை, அமலாக்கத்துறைகள் வரிசைகட்ட... பின்னாலேயே வரும் சி.பி.ஐ., மத்திய ஆட்சியாளர்களின் கண்ணசைவுக்கேற்ப கைகட்டி, வாய்பொத்தி சேவகம் புரிகிறது. அத்தனையிலும் அசிங்கமான அரசியல். கிட்டத்தட்ட கரைவேட்டி கட்டாத அடியாட்களாகவே வலம்வருகிறார்கள் சி.பி.ஐ அதிகாரிகள். சரி, அப்படியேனும் குற்றவாளிகளைக் கூண்டிலேற்றி, தண்டனை வாங்கிக் கொடுப்பார்கள் என்று பார்த்தால்... கடைசியில் தாங்களே குற்றவாளிகள்போல நீதிபதிகளின் வசைகளை வாங்கிக்கொண்டு திருதிருவென விழிக்கிறார்கள் அதிகாரிகள். அதில், லேட்டஸ்ட் வரவு, சேகர் ரெட்டி வழக்கு.

ஆளுங்கட்சியின் அடியாளா சி.பி.ஐ?

`துப்பு துலக்காத’ துண்டுச்சீட்டு!

2016-ம் ஆண்டு, டிசம்பர் மாதம். அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு போயஸ் கார்டனுக்கு நெருக்கமானவர்களை வளைத்தது வருமான வரித்துறை. ரெட்டியின் சென்னை, வேலூர் ஆகிய இடங்களிலிருந்து

34 கோடி ரூபாய்க்கு புத்தம் புது 2,000 ரூபாய் நோட்டுக்கட்டுகள் கைப்பற்றப்பட்டன. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, நாடு முழுவதும் ஏ.டி.எம் வாசலில் மணிக்கணக்கில் காத்துக்கிடந்த மக்கள் பெட்டி பெட்டியாகக் குவித்துவைக்கப்பட்டிருந்த கரன்ஸியைக் கண்டு வயிறெரிந்துபோனார்கள். நான்கு நாள்களுக்கும் மேலாக நீடித்த ரெய்டில் 166 கோடி ரூபாய் பணம், 179 கிலோ தங்கம் உட்பட ஏராளமான ஆவணங்களையும் கைப்பற்றியது வருமான வரித்துறை.

கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் இந்த விசாரணையை இழுவையாக இழுத்த சி.பி.ஐ., கடைசியாக நீதிமன்றத்தில், ‘சேகர் ரெட்டி உட்பட ஆறு பேர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க, போதுமான ஆதாரங்கள், சாட்சியங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அதனால், அவர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என்று மனுத்தாக்கல் செய்தது. இதை ஏற்றுக்கொண்ட சி.பி.ஐ நீதிபதி ஜவஹர், அக்டோபர் 29-ம் தேதி இந்த விசாரணையை முடித்துவைத்தார். இதைத் தொடர்ந்து தி.மு.க தலைவர் ஸ்டாலின், `துண்டுச்சீட்டைவைத்து துப்புத் துலக்கும் ஆற்றல் படைத்த சி.பி.ஐ-க்கு, ஆவணங்களைப் பரிசீலித்த பிறகும் ஆதாரம் கிடைக்கவில்லை’ என்றெல்லாம் கண்டனம் தெரிவித்தார்.

அன்புநாதன் டு கன்டெய்னர் கரன்ஸி!

சேகர் ரெட்டி வழக்கு மட்டுமல்ல... டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை ஐந்து ஆண்டுகள் உருட்டோ உருட்டு என உருட்டிய சி.பி.ஐ., 2020, ஜனவரி மாதம், ‘ஆம் அவர் தற்கொலைதான் செய்துகொண்டார்’ என்று கூறி வழக்கை முடித்துவிட்டது. தமிழக சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் கரூர் அன்புநாதன் வீட்டில் நடந்த ரெய்டு, திருப்பூரில் கன்டெய்னரில் பிடிபட்ட 570 கோடி ரூபாய் ஆகியவை எல்லாம் அந்தரத்தில் தொங்குகின்றன. குட்கா விவகாரத்தில் 250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு வழக்கை, குட்காவைப்போலவே வாயில் மென்றுவருகிறது சி.பி.ஐ. ஆர்.கே.நகர் சட்டமன்றத் தேர்தலில் 80 கோடி ரூபாய் விநியோகம், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஆளும்கட்சி தொடர்புடையவர்களைச் சீண்டாதது என சி.பி.ஐ கையாண்ட வழக்குகள் ஒவ்வொன்றுமே, காலப்போக்கில் கண்டுகொள்ளப்படாத ‘கல்வெட்டு’ அதிசயங்கள்!

தமிழகம் மட்டுமல்ல... தேசிய அளவிலும் நிலைமை இதுதான். 2005-ல் குஜராத்தை உலுக்கிய சொராபுதீன் என்கவுன்ட்டர் வழக்கில், அமித் ஷா உள்ளிட்டோர்மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கு 2010-ல் சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. நான்கு ஆண்டுகள் வழக்கைத் தொட்டிலில் தாலாட்டியது சி.பி.ஐ. பிறகு, 2014-ல் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் அமித் ஷா. அவர் மட்டுமல்ல... 2018-ல் அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்தது, மும்பை உயர் நீதிமன்றம். இந்த வழக்கில் இதுநாள் வரை மேல்முறையீடுகூட செய்யவில்லை என்பதிலிருந்தே சி.பி.ஐ-யின் ‘வாலாட்டும்’ எஜமான் மீதான விசுவாசத்தைப் புரிந்துகொள்ளலாம்.

இந்தியாவை உலுக்கிய 2ஜி வழக்கில், `குற்றம் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை’ என்று ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஓ.பி.சைனி, `ஏழு ஆண்டுகளாக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை... இவ்வளவு ஏன்... கோடை விடுமுறை நாள்களில் காத்திருந்தும்கூட சி.பி.ஐ எந்த ஆதாரங்களையும் சமர்ப்பிக்கவில்லை’ என்று சி.பி.ஐ-யின் மானத்தை வாங்கினார்.

கர்நாடகத்தில், சட்டவிரோத சுரங்க வழக்கில் முதல்வர் பதவியிலிருந்தே விலகினார் எடியூரப்பா. `அவர்மீதும் எந்தக் குற்றச்சாட்டும் இல்லை’ எனக் கூறி விடுவித்துவிட்டனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கு குளறுபடிகள் உலகமே அறிந்த ஒன்று. எல்லாவற்றுக்கும் உச்சமாக, சி.பி.ஐ கையாண்ட பாபர் மசூதி இடிப்பு வழக்கில் செப்டம்பர் 30-ம் தேதி, அத்வானி உள்ளிட்ட 32 பேரையும் நீதிமன்றம் விடுதலை செய்ததெல்லாம் சி.பி.ஐ வரலாற்றில் அழிக்கவே முடியாத புறமுதுகு அவமானத் தழும்புகள்!

ஆளுங்கட்சியின் அடியாளா சி.பி.ஐ?

நிலுவையில் 6,226 வழக்குகள்!

மொத்தமாகப் பார்த்தால் சி.பி.ஐ வென்ற வழக்குகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் தரும் புள்ளிவிவரங்களின்படி சி.பி.ஐ வசம் 6,226 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. கடந்த 2019, டிசம்பர் 31-ம் தேதி வரை 678 வழக்குகள் விசாரணையில் இருக்கின்றன. இவற்றில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருப்பவை 25 வழக்குகள். 86 வழக்குகள் மூன்று முதல் ஐந்தாண்டுகள் வரையிலும், 122 வழக்குகள் இரண்டு முதல் மூன்றாண்டுகள் வரையிலும் நிலுவையில் இருக்கின்றன. இவையெல்லாம் வெளி விவகாரங்கள் என்றால், சி.பி.ஐ அதிகாரிகள்மீது துறைரீதியாக தொடரப்பட்ட 74 வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றன என்பது வெட்கக்கேடு!

சொந்த அலுவலகத்திலேயே சூனியம்!

இவையெல்லாம் வெளி வழக்கு தொடர்பான புகார்கள். சி.பி.ஐ அமைப்புக்குள் இருக்கும் அநாகரிக அரசியல் ‘கரை’ வேட்டிகளையே மிஞ்சும் அளவுக்கு ‘கறை’ படிந்தது. ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல இறைச்சி ஏற்றுமதியாளர் குரேஷியுடன் தொடர்பிலிருந்ததாக சி.பி.ஐ இயக்குநர்களாக இருந்த ஏ.பி.சிங், ரஞ்சித் சின்கா ஆகியோர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுவரை விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. சி.பி.ஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குநராக இருந்த ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் குழாயடிச் சண்டையைத் தூக்கிச் சாப்பிட்டது. இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக, தனது சொந்த அலுவகத்திலேயே ரெய்டு நடத்திய சி.பி.ஐ, ஆவணங்களைக் கையாள்வதில் மோசடி செய்ததாக டி.எஸ்.பி தேவேந்தர் குமார் என்பவரைக் கைது செய்தது.

முடிவெடுக்கும் இருவர்!

சி.பி.ஐ அமைப்பின் முன்னாள் அதிகாரி ரகோத்தமனிடம் ``சி.பி.ஐ அமைப்புக்குள் என்னதான் நடக்கிறது?” என்று கேட்டோம். மனிதர் கொந்தளித்துத் தீர்த்துவிட்டார்... ``ஏராளமான கேலிக்கூத்துகள் நடக்கின்றன. சி.பி.ஐ-யைப் பொறுத்தவரை குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்வதற்கு முன்பாக சில நடைமுறைகள் உள்ளன. குற்றச்சாட்டுக்கு 50 சதவிகிதம் ஆதாரம் இருந்தால் மட்டுமே நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார்கள். அதற்கும் குறைவாக ஆதாரங்கள் இருந்தால் துறைரீதியான விசாரணைக்கு அனுப்பிவிடுவார்கள். மேலதிகாரி எப்படி இருக்கிறாரோ அதைப் பொறுத்துதான் விசாரணையின் போக்கும் சட்ட நடவடிக்கையும் இருக்கும். சி.பி.ஐ-யில் இயக்குநர், சிறப்பு இயக்குநர், இணை இயக்குநர், டி.ஐ.ஜி ஆகியோர் பதவிகளில் இருப்பார்கள். இதில் இயக்குநரும் சிறப்பு இயக்குநரும் எடுப்பதுதான் முடிவாக இருக்கிறது” என்றார் ஆதங்கத்துடன்!

“சுதந்திரமான அமைப்பு!”

இது குறித்தெல்லாம் பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனிடம் பேசினோம். ``ஒவ்வொரு வழக்கும் தனித்தன்மையுடன்தான் கையாளப்படுகிறது. ஒரு வழக்கின் விவரம், இன்னொரு வழக்குக்குப் பொருந்தாது. ஓர் இடத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதாலேயே அவர்களைக் குற்றவாளிகளாக எடுத்துக்கொள்ள முடியாது. சோதனைகள் என்பவை சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன. பிறகு கைப்பற்றப்பட்ட பணத்துக்குக் கணக்கு காட்டினாலோ, அபராதம் செலுத்திவிட்டாலோ கிரிமினல் வழக்கு வராது. அப்படித்தான் சேகர் ரெட்டி வழக்கும். அவர் கிரிமினல் வழக்கிலிருந்து வெளியே வந்தாலும், எவ்வளவு அபராதம் செலுத்தினார் என்பது யாருக்கும் தெரியாது. அதேபோல சி.பி.ஐ-யை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துவதில்லை. சுதந்திரமான அமைப்பு அது” என்றார்.

ஆனால், அந்த ‘சுதந்திரம்’ யாருக்கு என்பதெல்லாம் அதன் எஜமானர்கள் மட்டுமே அறிந்த ரகசியம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரே ஆண்டில் ரூ.802 கோடி!

2020-21-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் சி.பி.ஐ-க்கு ஒதுக்கப்பட்ட தொகை 802 கோடி ரூபாய். 2019-20 நிதியாண்டில் 798 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் பயிற்சி மையங்களை நவீனப்படுத்துதல், தடயவியல் பிரிவுகளை ஏற்படுத்துதல், நிலம் வாங்குவது, அதிகாரிகள் குடியிருப்புகளைக் கட்டுவது உள்ளிட்ட செலவுகளும் அடக்கம். ஆனால், வழக்கு தொடர்பான செலவீனங்களை சி.பி.ஐ வெளியிடுவதில்லை. புனேவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் விகார் துருவே என்பவர், `விஜய் மல்லையா, லலித் மோடி ஆகியோரை வெளிநாட்டிலிருந்து கொண்டு வருவதற்கு சி.பி.ஐ செய்த செலவுகள் என்ன?’ என ஆர்.டி.ஐ-யில் கேள்வியெழுப்பியிருந்தார். இதற்கு, ஆர்.டி.ஐ பிரிவு 24-ன்படி, தகவல் தெரிவிக்க சி.பி.ஐ-க்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறது சி.பி.ஐ.