Published:Updated:

'நடிகர் சூர்யா, நடிகர் சிவகுமார், சகாயம் ஐ.ஏ.எஸ்'- முதல்வர் ஸ்டாலினுக்கு வைத்த மூன்று கோரிக்கைகள்!

நடிகர் சூர்யா, நடிகர் சிவகுமார், சகாயம் ஐ.ஏ.எஸ்
நடிகர் சூர்யா, நடிகர் சிவகுமார், சகாயம் ஐ.ஏ.எஸ்

படுக்கை இருந்தா ஆக்ஸிஜன் இல்லை. ஆக்ஸிஜன் இருந்தா வென்டிலேட்டர் இல்லை. இந்த காலத்திலிருந்து மக்களை காப்பாத்துங்க.

தமிழகத்தின் புதிய முதல்வராக இன்றைய தினம் பொறுப்பேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு பிரபலங்களிடமிருந்து வாழ்த்துகளும் அதே சமயம் கோரிக்கைகளும் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நடிகர் சூர்யா, நடிகர் சிவக்குமார், முன்னாள் ஐ.ஏ.எஸ் சகாயம் உள்ளிட்டோர் ஸ்டானுக்கு வைத்த கோரிக்கைகளை இங்கு காண்போம்.

முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி உ.சகாயம் :

முதல்வராக பொறுப்பேற்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.கொரோனா பெருந்தொற்று தமிழகத்தை நிலைகுலையச் செய்திருக்கிறது. இந்தச் சூழலில் பதவியேற்கும் தாங்கள், கொரோனா பரவலை வெகுவாக மட்டுப்படுத்தி, பாதிக்கப்பட்டு பரிதவிக்கும் மக்களின் உயிரைக் காத்திட தேவையான தீவிரமான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக எடுக்க வேண்டும்.கடந்த ஆட்சிக் காலங்களில் புறக்கணிக்கப்பட்டு, உரிய பதவி வழங்கப்படாத நேர்மையும், திறமையும் மிகுந்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு தகுதிக்கு ஏற்ப உரிய பணியிடம் வழங்கி, அவர்களுடைய அறிவையும், ஆற்றலையும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் மாநில உரிமைகளை நசுக்குகின்ற மத்திய அரசுக்கு அடிபணியாமல், எந்தச் சூழலிலும் தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுக்காமல், மக்களின் நல்வாழ்வை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். "என இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சகாயம்
சகாயம்

நடிகர் சூர்யா, நிறுவனர் அகரம் ஃபவுண்டேசன் :

'முடியுமா நம்மால்‌?' என்பது தோல்விக்கு முன்பு வரும்‌ தயக்கம்‌...

'முடித்தே தீருவோம்‌!' என்பது வெற்றிக்கான தொடக்கம்‌...

- 'முத்தமிழ்‌ அறிஞர்‌' கருணாநிதி.

'முடித்தே தீர வேண்டிய' பல காரியங்கள்‌ வரிசைகட்டி முன்நிற்க, சட்டப்பேரவை தேர்தலில்‌ மகத்தான வெற்றி பெற்று 'மக்களின்‌ முதல்வராக' பொறுப்பேற்றுள்ள மு.க. ஸ்டாலினுக்கு எனது நெஞ்சம்‌ நிறைந்த வாழ்த்துகள்‌. சுவாசிப்பதற்கு 'உயிர்‌ காற்று'கூட கிடைக்காமல்‌ மக்கள்‌ அல்லல்படுகிற இந்த பேரிடர்‌ காலத்தில்‌, நீங்கள்‌ ஆட்சிப் பொறுப்பிற்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. தங்கள்‌ ஆட்சியில்‌ அனைத்து துறைகளிலும்‌ தமிழகம்‌ வளர்ச்சியடையும்‌ என்று நம்புகிறோம்‌. தங்களுக்கும்‌, ஆற்றலும்‌ அனுபவமும்‌ நிறைந்த தமிழக அமைச்சர்‌ பெருமக்களுக்கும்‌ மனப்பூர்வமான வாழ்த்துகள்‌. தமிழகத்‌தின்‌ உரிமைகளை மீட்கத் தமிழர்களின்‌ ஒருமித்த குரலாக இனி உங்கள்‌ குரல்‌ ஒலிக்கட்டும்‌"

நடிகர் சிவக்குமார் :

"திமுக தலைவர் கலைஞர் அவர்கள் தமிழக முதல்வராக 5 முறை பதவி வகித்திருக்கிறார். 19 ஆண்டுகள் அவர் தமிழ்நாட்டை ஆட்சி செய்திருக்கிறார். 1996-ல் திமுக 172 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. அதற்குப் பின் 25 ஆண்டுகளுக்குப் பிறகு, கலைஞர் இறந்த பிறகு 125 இடங்களில் வென்று தனி பெரும் கட்சியாக தற்போது பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றிபெற்றது ஸ்டாலினின் அவர்களுடைய இமாலய சாதனை. அதேபோல் உதயநிதி ஸ்டாலினும் முதல் தேர்தலிலேயே வெற்றிபெற்று, தாத்தாவிற்கேற்ற பேரன் என்பதை நிரூபித்துள்ளார்.முதலமைச்சர் அவர்களுக்கு முதலிலே எனது வேண்டுகோள். கொரோனா காலத்திலிருந்து நம்ம மக்களை காப்பாத்துங்க. மருத்துவமனைகளிலும் மருந்துக் கடைகளிலும் காலையிலிருந்து மாலை வரைக்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக நிற்பது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. ஆஸ்பத்திரியில் படுக்கை இல்லை. படுக்கை இருந்தா ஆக்ஸிஜன் இல்லை. ஆக்ஸிஜன் இருந்தா வென்டிலேட்டர் இல்லை. இந்த காலத்திலிருந்து மக்களை காப்பாத்துங்க. ஆந்திரா, கர்நாடகம், கேரளாவில் வசிப்பவர்கள் யாராக இருந்தாலும் அந்தந்த தாய் மொழிகளைப் படித்தே ஆக வேண்டும்.

நடிகர் சிவக்குமார்!
நடிகர் சிவக்குமார்!

ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தமிழ் குழந்தைகள் தமிழ் கற்காமலே பட்டப்படிப்பு படித்துவிட்டு, வேலைக்குச் செல்லும் அவலம் இங்கே மட்டுமே இருக்கிறது. செம்மொழி மாநாடு நடத்தி தமிழுக்குப் பெருமை சேர்த்த முத்தமிழ் அறிஞரோட வாரிசு நீங்க. இங்க, தமிழ் மொழியில பட்ட படிப்பு படிச்சவங்களுக்கு இங்க நிச்சயம் வேலை உண்டு என்ற முறையை உண்டாக்கினால் தமிழ் நிச்சயமாக வாழும். ஏரி, குளங்களைப் பராமரித்து விவசாயம் செழிக்க உதவி செய்யுங்கள். கலைஞர் அவர்கள் அறிமுகப்படுத்திய உழவர் சந்தைக்கு உயிர் கொடுங்கள். அரசியல் சாணக்கியர் கலைஞர் அவர்களின் மடியில் வளர்ந்த நீங்கள், தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சியில்தான் பொற்காலம் என்று சொல்வதுபோல் ஒரு நல்லாட்சியை வழங்குங்கள். உங்களுக்கு என் வாழ்த்துகள்" என்று நடிகர் சிவக்குமார் தான் வெளியிட்டுள்ள வாழ்த்து காணொளியில் தெரிவித்திருந்தார்.

முன்னதாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து நடிகர் விஜய்சேதுபதி, இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் கூட்டாக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்ததும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு