கோரிக்கைவைத்த பிரபலங்கள்.. அமித் ஷாவிடம் வலியுறுத்தும் தமிழக அரசு! - டிரெண்ட் ஆன #ReleasePerarivalan

எழுவர் விடுதலையில் ஆளுநர் உடனடியாக முடிவெடுக்கக் கோரி சமூக வலைதளங்களில் #ReleasePerarivalan என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகிவருகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேர் கைதுசெய்யப்பட்டு, கடந்த 29 ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களை விடுதலை செய்யக் கூறித் தொடரப்பட்ட வழக்கில், `விடுதலை குறித்து தமிழக அரசு முடிவெடுத்துக்கொள்ளலாம்’ என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதையடுத்து, இந்த ஏழு பேரை விடுவிக்க, தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது.
இரண்டாண்டுகளைக் கடந்த நிலையிலும், ஆளுநர் தரப்பிலிருந்து இந்தத் தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை. கடந்த சில நாள்களுக்கு முன்னர், எழுவர் விடுதலையில் ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. மேலும், ஆளுநர் முடிவெடுக்காதது குறித்து அதிருப்தி தெரிவித்து, இந்த வழக்கை வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்தநிலையில் திரைத்துறையைச் சேர்ந்த விஜய் சேதுபதி, பாரதிராஜா, மாரி செல்வராஜ், வெற்றிமாறன், ரோகிணி, பா.ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், பிரகாஷ் ராஜ், ராம், விஜய் ஆண்டனி, ராஜூ முருகன், அமீர், சத்யராஜ், நவீன் போன்ற பலர் இணைந்து ’161 ரிலீஸ் பேரறிவாளன்’ என்ற பாடலை வெளியிட்டிருக்கிறார்கள்.
`தாய் மனம் ஏங்குது,
விடுதலை வேண்டுது,
தாமதம் சரிதானா ஆளுநரே?’ என்றும் தொடங்கும் பாடலை #ReleasePerarivalan என்ற ஹேஷ்டேக்- உடன் வெளியிட்டிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் #ReleasePerarivalan என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகிவருகிறது.
தமிழக அமைச்சர் ஜெயக்குமார், ``ஏழு பேர் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் நாளை வலியுறுத்தப்படும். இந்த விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்று இன்று கருத்து தெரிவித்தார்.
பேரறிவாளன் விடுதலை ஆக வேண்டும் என்று பல அரசியல் தலைவர்களும், சினிமா துறையினரும் தங்களின் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பகிர்ந்துவருகிறார்கள்.