Published:Updated:

தடுப்பூசி, ஆக்ஸிஜன் விநியோகம்... தமிழகத்துக்கு அநீதி இழைக்கிறதா பா.ஜ.க அரசு?

தடுப்பூசி
பிரீமியம் ஸ்டோரி
தடுப்பூசி

‘தடுப்பூசிக்கு 35,000 கோடி ரூபாய் ஒதுக்குகிறோம்; 100 கோடி இந்தியர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்போகிறோம்’ என்று பிரதமர் மோடி அறிவித்தார்

தடுப்பூசி, ஆக்ஸிஜன் விநியோகம்... தமிழகத்துக்கு அநீதி இழைக்கிறதா பா.ஜ.க அரசு?

‘தடுப்பூசிக்கு 35,000 கோடி ரூபாய் ஒதுக்குகிறோம்; 100 கோடி இந்தியர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்போகிறோம்’ என்று பிரதமர் மோடி அறிவித்தார்

Published:Updated:
தடுப்பூசி
பிரீமியம் ஸ்டோரி
தடுப்பூசி

நாட்டிலேயே கொரோனா தொற்று அதிகம் இருக்கும் மாநிலமாக மாறியிருக்கிறது தமிழகம். இந்தப் பேரிடர் காலத்திலும்கூட, மத்திய பா.ஜ.க அரசு தடுப்பூசி தொடங்கி ஆக்ஸிஜன் வரை தமிழகத்துக்குக் குறைவாக ஒதுக்கியிருக்கும் நிலையில், சென்னை உயர் நீதிமன்றம், “தொற்று அதிகரித்துவரும் நிலையில் தமிழகத்துக்கான ஆக்ஸிஜனையும் தடுப்பூசியையும் ஏன் குறைவாக வழங்குகிறீர்கள்?” என்று மத்திய அரசை நோக்கிக் கேள்விக்கணையை வீசியுள்ளது!

தடுப்பூசி, ஆக்ஸிஜன் விநியோகம்... தமிழகத்துக்கு அநீதி இழைக்கிறதா பா.ஜ.க அரசு?

மத்திய, மாநில அரசுகளின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணையில்தான், “தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துவரும் நிலையில், தமிழகத்துக்கான ஆக்ஸிஜன், தடுப்பூசி மருந்துகள் ஒதுக்கீடு குறைவாக இருப்பது ஏன்? இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஏற்கெனவே டெல்லி உயர் நீதிமன்றம், கொல்கத்தா உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களும் இதே போன்ற கேள்விகளை எழுப்பியிருக்கும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி பீட்டர் அல்போன்ஸிடம் பேசினோம்.

“ஆக்ஸிஜன், தடுப்பூசி, உயிர் காக்கும் மருந்துகள் உள்ளிட்டவற்றை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிப்பதில் நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் மத்திய அரசு நடந்துகொள்ளவில்லை. இதை உச்ச நீதிமன்றமே சுட்டிக்காட்டியிருக்கிறது. தேர்தலுக்கு முன்பே சுமார் 200 ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டது. அவை ஒன்றுகூட தமிழகத்துக்கு வராத நிலையில், தி.மு.க அரசு அமைந்து, முதல்வர் ஸ்டாலின் முன்னெடுப்புகளைச் செய்த பிறகே இங்கு ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் வந்தது. உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு 1,000 மெட்ரிக் டன், 2,000 மெட்ரிக் டன் என ஆக்ஸிஜன் ஒதுக்கீடு செய்கிறார்கள். ஆனால், கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டுக்கு 550 மெட்ரிக் டன் மட்டுமே ஒதுக்கீடு செய்கிறார்கள். அதேபோல தடுப்பூசி ஒதுக்கீட்டிலும் பாரபட்சம் காட்டுகிறது மத்திய அரசு. 6.94 கோடி மக்கள்தொகை கொண்ட குஜராத்துக்கு 1.39 கோடி டோஸ் தடுப்பூசிகளும், 6.66 கோடி மக்கள்தொகை கொண்ட கர்நாடகாவுக்கு 1.06 கோடி டோஸ் தடுப்பூசிகளும், 7.88 கோடி மக்கள்தொகை கொண்ட ராஜஸ்தானுக்கு 1.42 கோடி டோஸ் தடுப்பூசிகளும் ஒதுக்கப்பட்ட நிலையில், 7.62 கோடி மக்கள்தொகை கொண்ட தமிழகத்துக்கு 72 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.

தடுப்பூசி, ஆக்ஸிஜன் விநியோகம்... தமிழகத்துக்கு அநீதி இழைக்கிறதா பா.ஜ.க அரசு?

பட்ஜெட்டில் ‘தடுப்பூசிக்கு 35,000 கோடி ரூபாய் ஒதுக்குகிறோம்; 100 கோடி இந்தியர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்போகிறோம்’ என்று பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால், பட்ஜெட்டை ஆராய்ந்தால், 35,000 கோடி ரூபாய் என்பது மாநில அரசுகளுக்கான கடன்கள் மற்றும் மானியங்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மிகப்பெரிய கொடுமை என்னவென்றால், கொரோனா இரண்டாவது அலை வரப்போகிறது என்று தெரிந்தும்கூட, 2021-2022 பட்ஜெட்டில் கொரோனாவுக்காக சிறப்பு ஒதுக்கீடு என ஒரு பைசா ஒதுக்கப்படவில்லை. பிஎம் கேர்ஸுக்கு எவ்வளவு நிதி வந்தது, அதிலிருந்து மாநிலங்களுக்கு எவ்வளவு ஒதுக்கப்பட்டது என்பது தொடங்கி எதிலுமே மத்திய அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படவில்லை” என்றார் கோபமாக!

ஆனால், மேற்கண்ட கூற்றை மறுத்துப் பேசுகிறார் பா.ஜ.க-வின் மாநில பொதுச்செயலாளரான பேராசிரியர் சீனிவாசன். “மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திடம், ‘மாநிலங்களுக்கு ஆக்ஸிஜனைப் பகிர்ந்தளிப்பது தொடர்பாக ஒரு குழுவை அமையுங்கள். அந்தக் குழு சொல்கிறபடி ஆக்ஸிஜனைப் பகிர்ந்தளிக்கிறோம்’ என்று கூறியிருக்கிறது. மாநிலங்களுக்கு எவ்வளவு ஆக்ஸிஜன் வேண்டும் என்பதற்கு ஆடிட்டிங் வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியிருக்கிறது. ‘கர்நாடகாவுக்கு 1,200 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வழங்க வேண்டும்’ என்று கர்நாடகா உயர் நீதிமன்றம் கூறியது. ‘டெல்லிக்கு 750 மெட்ரிக் டன் வழங்க வேண்டும்’ என்று அந்த மாநில அரசு கேட்டது. தேவையைக் காட்டிலும் கூடுதலாக ஆக்ஸிஜனை மாநிலங்கள் கேட்கின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆக்ஸிஜனையும் மருந்துகளையும் மத்திய அரசு வழங்கிவருகிறது. ஆனால், பெருந்தொற்றைக் குறைக்க வேண்டிய பொறுப்பை மாநில அரசு ஏற்றுக்கொள்ள வேண்டாமா? தமிழகத்தில் மே 7-ம் தேதி தி.மு.க அரசு அமைந்துவிட்டது. இந்த இரண்டு வார காலத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஏன் குறையவில்லை? ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் முடிந்தபோதே எடப்பாடி பழனிசாமி அரசு ஊரடங்கை அமல்படுத்தியிருக்கலாமே... மாறாக, ஆக்ஸிஜன் தரவில்லை... மருந்து தரவில்லை என்று சொல்வதில் நியாயமே இல்லை.

பீட்டர் அல்போன்ஸ் -  சீனிவாசன்
பீட்டர் அல்போன்ஸ் - சீனிவாசன்

மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு 79 லட்சம் டோஸ் தடுப்பூசி அனுப்பியிருக்கிறது. ஆனால், 70 லட்சம் டோஸ் மட்டுமே செலுத்தப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் கூறுகிறார். மீதி ஒன்பது லட்சம் டோஸ்கள் செலுத்தப்படவில்லை. காரணம், தமிழ்நாட்டில் விநியோகம் சரியில்லை. மருந்து வீணாவதைக் கருத்தில்கொண்டு ஒரு லட்சம் டோஸ்களுக்கு இரண்டாயிரம் டோஸ்களை மத்திய அரசு கூடுதலாக விநியோகிக்கிறது. அந்த வகையில், கேரளத்துக்குக் கூடுதலாக வழங்கப்பட்ட டோஸ்களையும் சேர்த்து 74,26,164 டோஸ்களை கேரள அரசு பயன்படுத்தியிருக்கிறது. அதற்காக கேரள முதல்வரை பிரதமர் மோடி பாராட்டியிருக்கிறார். ஆனால், தடுப்பூசியை வீண் செய்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் இருக்கிறது. இதையெல்லாம் சரிசெய்ய வேண்டும்” என்றார்.

மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என்பது கண்கூடாகத் தெரிகிறது. ஆக்ஸிஜன், தடுப்பூசி ஒதுக்கீடுகளில் மட்டுமல்ல... கடந்த காலங்களில் தமிழகத்தில் ஏற்பட்ட பல்வேறு புயல் வெள்ளங்களின்போதும், மத்திய ஆய்வுக்குழு வந்து ஆய்வு செய்து பாதியளவு மட்டுமே இழப்பீடுகளை நிர்ணயம் செய்யும். அதன் பிறகும் தமிழக அரசு கேட்ட நிவாரண நிதியை மத்திய அரசு ஒதுக்கியதில்லை. ஆனால், தற்போதைய டவ்தே புயலின்போது உடனடியாக குஜராத்துக்கு ஓடோடிச் சென்ற பிரதமர் மோடி, அங்கு கையோடு 1,000 கோடி ரூபாயை ஒதுக்கினார். அதேசமயம், சிவசேனா ஆட்சி செய்யும் அருகிலிருக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பைக்கு அவர் செல்லவில்லை. ஒரு பிரதமர் என்பவர் மொத்த நாட்டு மக்களுக்கும் பொறுப்பானவர் என்பதை பா.ஜ.க ஒருபோதும் மறந்துவிடக் கூடாது!