Published:Updated:

`தமிழக அரசு வெட்கப்படவேண்டும்!'- நெல்லையில் கொதித்த வேல்முருகன்

தமிழகத்தில் மண்ணின் மைந்தர்களுக்கே வேலை வழங்கப்படும் என்கிற அறிவிப்பை வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரின் ஆளுநர் உரையில் வெளியிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.

வேல்முருகன்
வேல்முருகன்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்தைக் கண்டித்து நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக நெல்லை வந்த தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பு
வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பு

அப்போது பேசிய அவர், ’’இந்தியா முழுவதும் உள்ள இந்து, முஸ்லிம் உள்ளிட்ட அனைவரும் தன்னெழுச்சியாக இந்திய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்தும் மக்கள் மீது கடுமையான அடக்கு முறையை மத்திய அரசின் உதவியோடு தமிழக மேற்கொண்டு வருகிறது. இது கண்டனத்துக்குரியது.

வீட்டில் கோலம் போடுபவர்கள் மீது கூட தமிழக அரசு வழக்குத் தொடுக்கிறது. தங்கள் வீட்டின் முன்பாக கோலம் போடுகையில் குடியுரிமைச் சட்டத்தைக் கண்டித்ததற்காக நான்கு பேர் மீது வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளைக் காவல்துறை அதிகாரிகள் ரத்து செய்ய வேண்டும். இந்தச் சட்டத்துக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்ததற்காகத் தமிழக அரசு வெட்கப்படவேண்டும்.

செய்தியாளர் சந்திப்பு
செய்தியாளர் சந்திப்பு

மாவட்டங்கள்தோறும் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராடிய ஆயிரக்கணக்கான மக்கள் மீது வழக்குப் பதிவு செய்வது ஜனநாயகத்திற்கு விரோதமானது. இந்தச் சட்டம் இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட பின்னர் அண்டை நாடுகளில் வசிக்கும் ஈழத் தமிழர்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க மறுப்பது ஐ.நா தீர்மானத்துக்கு எதிரானது.

சுங்கச் சாவடிகள் மூலம் அரசே மக்களின் பணத்தை கொள்ளையடித்து வருகிறது. தற்போது டிஜிட்டல் இந்தியா மூலம் சுங்கச்சாவடியில் பாஸ்ட்டிராக் முறையைப் பயன்படுத்தி கொள்ளையடிக்கப்படுகிறது. சுங்கச் சாவடிக் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்யவேண்டும் என்பது தமிழக வாழ்வுரிமை கட்சியின் கொள்கை. இதற்காக நாங்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். 

Vikatan

சுங்கச் சாவடிகளில் குண்டர்களால் பலர் தாக்கப்படுகிறார்கள். தேசிய ஆணையத்தால் போடப்பட்ட ஒப்பந்தங்களைச் சுங்க சாவடியினர் முறையாகப் பின்பற்றவில்லை. இதைக் கேட்டால் எங்கள் மீது வழக்குப் பதிவு செய்கிறார்கள். சுங்கக் கட்டணத்தை நாடுமுழுவதும் ரத்து செய்யாவிட்டால் வாகனத்திற்கான வரியை ரத்து செய்யவேண்டும்.

இந்தோனேசியாவில் இருந்து சிங்கள ராணுவத்திடம் ஒப்படைக்க இருக்கும் 13 ஈழத் தமிழர் குடும்பத்துக்காக இந்திய அரசு ஐ நா மன்றத்தில் முறையிட வேண்டும். தமிழகத்தில் தமிழர்கள் அல்லாதவர்கள் சுமார் ஒரு கோடி பேர் வசித்து வருகின்றனர்.. ஆயிரத்துக்கும் அதிகமானோருக்குத் தமிழக அரசு வேலை வழங்கப்பட உள்ளது.

செய்தியாளர்களைச் சந்திக்கும் வேல்முருகன்
செய்தியாளர்களைச் சந்திக்கும் வேல்முருகன்

பிற மாநிலங்களில் எல்லாம் அந்தந்த மாநில மக்களுக்கு மட்டுமே அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதனால், வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் உரையில் மண்ணின் மைந்தர்களுக்குத் தமிழகத்தில் வேலை வழங்கப்படும் என்கிற அறிவிப்பை வெளியிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கான நலவாரியத்தைத் தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்’’ என்று தெரிவித்தார் .