Published:Updated:

`ரிசர்வ் வங்கியின் உபரிநிதி பயன்பாடு, தவறான முன்னுதாரணம்!' - தூத்துக்குடியில் தகித்த கனிமொழி

இ.கார்த்திகேயன்
ப.கதிரவன்

` இந்திய ரிசர்வ் வங்கியின் உபரிநிதியை மத்திய அரசு பயன்படுத்த நினைப்பது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். உபரிநிதியை தேவையில்லாமல் பயன்படுத்திய பல்வேறு நாடுகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன' என்கிறார் கனிமொழி எம்.பி.

Kanimozhi M.P
Kanimozhi M.P

தி.மு.க நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமணவிழாவில் பங்கேற்பதற்காக இன்று தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்திருந்தார் மக்களவை உறுப்பினர் கனிமொழி. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ இந்தியப் பொருளாதாரம், வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது.

Kanimozhi
Kanimozhi

வெளிநாட்டு முதலீடுகள் எதுவும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 45 வருடங்களாக இல்லாத அளவுக்கு பொருளாதாரத்தில் வீழ்ச்சியைப் பார்க்க முடிகிறது. வேலை இல்லாத் திண்டாட்டமும் மக்களைப் பாதித்துள்ளது. இதனைச் சரிசெய்ய மத்திய அரசு எந்த முயற்சியையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளது. கடந்த முறை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது உலக அளவில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துகொண்டிருந்த நிலையிலும், அப்போதைய மத்திய அரசு இந்தியப் பொருளாதாரத்தைச் சரி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால், இந்தியப் பொருளாதாரம் பாதுகாக்கப்பட்டது.

ஆனால், தற்போது மத்திய அரசு எந்தவித வளர்ச்சித் திட்டங்களையும் மேற்கொள்ளாமல், தொலைநோக்குப் பார்வையில்லாமல் ஆட்சி செய்து வருகிறது. ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை மத்திய அரசு பயன்படுத்த நினைப்பது தவறான ஒரு முன்னுதாரணம் ஆகிவிடும். ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை தேவையில்லாமல் பயன்படுத்திய பல்வேறு நாடுகள் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. எனவே, இந்திய ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை மத்திய அரசு பயன்படுத்துவது மிகப் பெரிய பிரச்னையை உருவாக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும்.

Kanimozhi
Kanimozhi

எடப்பாடி பழனிசாமி, முதல்வராக இருப்பதே தமிழகத்துக்குப் பயனுள்ளதாக இருக்குமா, இல்லையா எனத் தெரியாதபோது, தமிழகத்தில் பல பொருளாதார மாநாடுகளை நடத்தியும் ஒன்றும் செய்ய முடியாத அவர், வெளிநாட்டுக்குப் போனால் மட்டும் மக்களுக்காக என்ன செய்துவிடப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்றார் இயல்பாக.