Published:Updated:

`பெகாசஸ் மூலம் கர்நாடக, மத்தியப் பிரதேச அரசை வீழ்த்தினர்!’-மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலே

நானா பட்டோலே
நானா பட்டோலே

பெகாசஸ் மூலம் உளவு பார்த்து, கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேசத்திலுள்ள எங்களது அரசைக் கவிழ்த்தனர் என்று மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலே தெரிவித்திருக்கிறார்.

நாட்டில் பெரும் புயலை கிளப்பியிருக்கும், பெகாசஸ் மூலம் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்ட பிரச்னையால் நாடாளுமன்றம் முடங்கியிருக்கிறது. இதில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து அவையை நடத்தவிடாமல் செய்துவருகின்றன. `இதே பெகாசஸ் மூலம்தான் கர்நாடகா, மத்தியப் பிரதேசத்தில் எங்களது அரசைக் கவிழ்த்தனர்’ என்று மகாராஷ்டிரா காங்கிரஸ் குற்றம்சாட்டியிருக்கிறது.

இது தொடர்பாக அந்தக் கட்சியின் மகாராஷ்டிரா மாநில தலைவர் நானா பட்டோலே அளித்த பேட்டியில், ``பெகாசஸ் மூலம் கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் அரசுகளை மத்திய அரசு கவிழ்த்தது. காங்கிரஸ் அரசுகளைக் கவிழ்க்க மத்திய அரசு ஸ்பைவேர்களைப் பயன்படுத்துகிறது. பிரதமருக்கு இது குறித்துத் தெரிந்திருந்தால், அது குறித்த உண்மையைத் தெரிவிக்க வேண்டும். பிரதமர் நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் தடுப்பதாக எதிர்க்கட்சிகள் மீது குற்றம்சாட்டுகிறார்.

பெகாசஸ்
பெகாசஸ்

ஆனால், எதிர்க்கட்சிகள் எழுப்பும் எந்தப் பிரச்னைக்கும் பதிலளிக்காமல் பிரதமர் ஜனநாயகத்தை அவமதிக்கிறார். பெகாசஸ் பிரச்னையில் எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து பிரதமர் பதிலளிக்க வேண்டும். பெகாசஸ் மூலம் 300 பேரின் போன் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் கண்காணிக்கப்படுகின்றனர்” என்று தெரிவித்தார்.

பெகாசஸ்: `ஒரு ஜனநாயக நாட்டில் இப்படி நடக்கலாமா?!' -  டி.எம்.கிருஷ்ணா ஆவேசம்

முன்னதாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் தடுப்பதன் மூலம் நாடாளுமன்றத்தை அவமதிக்கின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியிருந்தார். இந்த விவகாரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளமும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு