Published:Updated:

மத்திய அரசால் கேரளா புறக்கணிக்கப்பட்ட முக்கியமான 5 விஷயங்கள்!

மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசால் கேரள மாநிலம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

2016-ம் ஆண்டு கேரளாவில் மீண்டும் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்தது சி.பி.எம். பினராயி விஜயன் முதல்வராகப் பொறுப்பேற்றார். ஆட்சிக்கு வந்த பின்பு இரவு நேரங்களில் பெண்கள் வேலைக்குச் செல்லும் தடைச் சட்டத்தை நீக்குவது, பள்ளி கல்லூரிகளில் காலையில் பிரார்த்தனைக் கூட்டங்களில் அரசியலைப்பின் முன்னுரையை வாசிப்பதைக் கட்டாயம் ஆக்கியது போன்ற அதிரடியான பல திட்டங்களைக் கொண்டு வந்தார். இவ்வாறு அதிரடிகளுக்குப் பெயர் போன பினராயி விஜயன் மத்திய அரசு கொண்டு வரும் சர்ச்சைக்குரிய சட்டங்களை எதிர்க்கவும் தயங்குவதில்லை. இதன் விளைவாக மத்திய அரசால் கேரள மாநிலம் தொடர்ந்து பல நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது.

மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு 2017-ம் ஆண்டில், இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்குத் தடை விதித்து அரசாணை வெளியிட்டிருந்தது. அதற்கும் முதல் எதிர்ப்பு கேரளாவிலிருந்துதான் வந்தது. பினராயி விஜயன், பிரதமர் மோடிக்கு இதைப் பற்றிக் கடிதம் எழுதினார். அதில் ``ஏழை மக்களுக்குக் குறைந்த விலையில் அதிக புரதச்சத்தைத் தரும் மாட்டிறைச்சியைத் தடை செய்யக் கூடாது, இது எளிய மக்களுக்குக் கிடைக்கும் உணவைத் தடுப்பது என்பது மட்டுமல்லாமல், தோல் தொழிற்சாலைகளைப் பெரிதும் பாதிக்கும் செயலாக இருக்கும். இந்தியாவில் 25 லட்சம் பேர் தோல் தொழிற்சாலைகளைச் சார்ந்திருக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் பொருளாதாரத்தை இது பெரிதும் பாதிக்கும். மேலும் தோல் பொருள்கள் ஏற்றுமதியில் கடும் வீழ்ச்சியை ஏற்படுத்தும்" என்று கூறியிருந்தார்.

மேலும் அவர் ``மாட்டிறைச்சித் தடை சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்று சேர அழைப்பு விடுத்தார். மத்திய அரசின் செயல்பாடு நாட்டின் கூட்டாட்சி மற்றும் ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும் தனிமனித சுதந்திரத்தைக் கேள்விக்குறி ஆக்குவதே இதன் பிரதான நோக்கம்" என்றார்.

தற்போது மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை எதிர்ப்பதிலும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் முன்னணியில் இருக்கிறார். இந்தத் திட்டத்தை எதிர்த்து கேரளாவில் அனைத்துக் கட்சிகளுடன் இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார். மேலும், குடியுரிமைச் சட்டத்தை எதிர்க்கும் மாநிலங்கள் ஒன்றிணையுமாறும் அழைப்பு விடுத்தார். குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து கேரளச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தங்கள் எதிர்ப்பை உறுதியாகக் கூறும் வகையில் உச்சநீதிமன்றத்தில் இந்தச் சட்டத்தை எதிர்த்து கேரள அரசால் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. மத்திய அரசால் கொண்டுவரப்படும் திட்டங்களை எதிர்க்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லாத போதும், குடியுரிமைச் சட்டம் மதச்சார்பின்மை, சமத்துவத்துக்கு எதிராக இருப்பதாகக்கூறி அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 131-ன் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக மாநில அரசு விளக்கமளித்துள்ளது.

மத்திய அரசின் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை எதிர்ப்பதில் கேரள மாநிலம் இந்தியாவுக்கு முன்னோடியாக இருந்து வருகிறது. இந்த எதிர்ப்புகளின் விளைவாக கேரள அரசு பல நெருக்கடிகளைச் சந்திக்க நேர்கிறது. அவ்வாறு கேரள அரசு சந்தித்த நெருக்கடிகளின் பட்டியலே இந்தக் கட்டுரை.

2
பினராயி - மோடி

சந்திப்பு மறுப்பு:

கேரள மாநிலம் பாலக்காட்டில் ரயில் பெட்டித் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு அண்மையில் ரத்து செய்தது. அந்தத் திட்டத்தை மீண்டும் பாலக்காட்டில் செயல்படுத்தக் கோரி, பிரதமரிடம் மனு அளிப்பதற்காக முதல்வர் பினராயி விஜயன் டெல்லிக்குச் சென்றார். ஆனால், பிரதமரைச் சந்திப்பதற்கு அவருக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த பினராயி விஜயன் டெல்லியில் பிரதமர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார். எனினும் அவரது கோரிக்கைக்குப் பிரதமர் அலுவலகம் செவிசாய்க்கவில்லை.

இதைப் பற்றிக் கருத்துக் கூறிய பினராயி விஜயன், ``கேரள மாநிலத்தைப் பிரதமர் மோடி தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். கேரளா மீது மத்திய அரசு கொண்டுள்ள வெறுப்பின் காரணமாக எங்கள் மாநிலத்தில் தொழில்துறை மிகவும் நலிவடைந்துள்ளது. இது தொடர்பாகப் பிரதமரைச் சந்தித்துப் பேசுவதற்குக் கூட எங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்தியாவில் உள்ள கூட்டாட்சி முறையை மத்திய அரசு மதிக்கவில்லை. மாநிலங்களின் பிரச்னைகளை அணுகுவதில் மோசமான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது" என்றார் பினராயி விஜயன்.

2016-ம் ஆண்டில் தொடங்கி இன்று வரை நான்கு முறை கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்திக்க பிரதமர் மோடி மறுத்துள்ளார். 2018-ம் ஆண்டு நிதி வழங்காமல் இருப்பதைப் பற்றிச் சந்தித்துப் பேசச் சென்றபோது அனுமதி மறுக்கப்பட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு இரண்டாவது முறையாக பினராயி விஜயனின் சந்திப்புக்கான அனுமதியை மீண்டும் பிரதமர் அலுவலகம் மறுத்து விட்டது. நடந்து முடிந்த நிதி ஆயோக் கூட்டத்திற்குச் சென்றபோதும் பினராயியைச் சந்திக்க மோடி மறுத்துவிட்டார்.

3
கேரள வெள்ளம்

நிவாரண நிதி மறுப்பு:

2018 -ம் ஆண்டு கேரளா வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இதில் 413 பேர் உயிரிழந்தனர். 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முகாமில் தங்கவைக்கப்பட்டனர். இறந்தவர்களுக்கும் காயமடைந்தவருக்கும் இழப்பீடு மற்றும் சீரமைப்புப் பணிகள் என அனைத்தையும் சரி செய்ய ரூ.600 கோடியை அரசு முன்பணமாகத் தந்தது. அதிலும் மக்களுக்கு மானிய விலையில் தரப்பட்ட அரிசி, எண்ணெய் போன்ற பொருள்கள் வழங்கியதற்கு ரூ.290 கோடியை இந்திய உணவு கழகத்துக்கும் வெள்ளத்தின் போது மீட்புப் பணியில் பயன்படுத்தப்பட்ட விமானங்களுக்கு ரூ.34 கோடியை கேரளா பாதுகாப்பு படைக்கும் தர வேண்டும் என்று உத்தரவு வெளியானது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பின்னர் அரசு தொடர்ந்து வலியுறுத்தியதால் ரூ.4,800 கோடி வழங்கக் கோரி கேரளா கோரிக்கை வைத்ததற்கு செவி சாய்க்காமல் ரூ.3,048 கோடி மட்டுமே மத்திய அரசால் வழங்கப்பட்டது. இது கேரள அரசுக்குப் பாதிப்புகளைச் சரி செய்யப் போதுமானதாக இல்லை. வெள்ள பாதிப்புகளைச் சரி செய்வதற்கு மேலும் நீதி தேவைப்படுவதாக அப்போது கேரள அரசு கூறியது. 2018-ம் ஆண்டில் மழையால் பாதிக்கப்பட்ட கேரளாவைப் பழைய நிலைமைக்குக் கொண்டுவர ரூ.31,000 கோடி தேவைப்படும் என ஐ.நா கூறியது குறிப்பிடத்தக்கது.

4
பினராயி - அமித் ஷா

இயற்கை பேரிடர் நிதி மறுப்பு:

2018 -ம் ஆண்டைத் தொடர்ந்து 2019 -ம் ஆண்டிலும் கேரளம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. கனமழை காரணமாக மண்சரிவு, வெள்ளம் என 14 கேரள மாவட்டங்களை வெளுத்து வாங்கியது கனமழை. இதில் 97 பேர் உயிரழந்ததாகவும், 80-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகவும் கேரள அரசு அறிவித்தது. அந்த ஆண்டு கேரளம் உட்பட இந்தியாவின் எட்டு மாநிலங்கள் கடும் மழையால் பாதிக்கப்பட்டன. ஆனாலும் கடந்த முறை போல இந்த முறையும் கேரளாவுக்குச் சரியாக நிவாரண நிதி வழங்கப்படவில்லை. தொடர்ந்து இரண்டு வருடங்களாக இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும் கேரளாவை மத்திய அரசு கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. இந்தச் சூழலில் இயற்கை பேரிடர் நிவாரண நிதியாக ரூ.5,908 கோடியை ஏழு மாநிலங்களுக்கு வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

ஆனால், இந்த மாநிலங்களின் பட்டியலில் கேரளாவின் பெயர் சேர்க்கப்படவில்லை. நிதி ஒதுக்கப்பட்டிருக்கும் மாநிலங்களில் உத்தரப்பிரதேசம், திரிபுரா, அசாம், கர்நாடக ஆகிய நான்கும் பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலம். இந்த மாநிலங்களுக்கு மட்டும் ரூ.3,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பைவிட கேரளாவில் பாதிப்புகள் அதிகம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், நிதிப் பங்களிப்பில் கேரளா சேர்க்கப்படாமல் இருப்பதில் அரசியல் தலையீடு உள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது, சவுதி அரேபியா நிவாரண நிதி வழங்க முன்வந்தது. ஆனால், மத்திய அரசு அனுமதி தராததால் அந்த நிவாரண நிதியை கேரள அரசால் பெற முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

5
IRCTC

மாநில உணவு வகைகள் மாற்றம்:

கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கேரள ரயில் நிலையத்தில் உணவுப் பட்டியலில் இந்திய ரயில்வே துறையின் கிளை நிறுவனமான ரயில்வே உணவகங்கள் (IRCTC) அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. அதில் கேரள உணவு வகைகளைத் தவிர்த்து, வட மாநில உணவு வகைகள் சேர்க்கப்பட்டிருந்தன. புட்டு, கடலைக் கறி, முட்டைக் குழம்பு, அப்பம், பரோட்டா ஆகியவை வழங்கப்பட்டு வந்த நிலையில் இதற்குப் பதிலாக ரஜ்மா சவால், சோலே பாதுரே, பாவ் பாஜி, கிச்சடி, பொங்கல் மற்றும் குல்ச்சா என்று பெரும்பாலான வடமாநில உணவு வகைகளைச் சேர்த்துள்ளதோடு, அசைவ உணவுகளைப் பட்டியலிலிருந்து எடுத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

உணவுகள் மட்டுமல்லாது, தின்பண்டங்களிலும் IRCTC மாற்றத்தைச் செய்துள்ளது. இதுவரை வழங்கப்பட்டு வந்த பழம்பொரி பஜ்ஜி, இலையடை, கொழுக்கட்டை, உன்னியப்பம், நெய்யப்பம் மற்றும் சுழியம் ஆகியவற்றுக்குப் பதிலாக சமோசா, கச்சோரி, உருளைக்கிழங்கு போண்டா மற்றும் பக்கோடா ஆகியவற்றைச் சேர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்குக் கடும் எதிர்ப்புகள் எழவே அந்த முடிவிலிருந்து பின்வாங்குவதாகப் பின்னர் IRCTC அறிவித்தது.

சிவசாமியும் அவர்தான், சின்னக்கவுண்டரும் அவர்தான்! - விக்டரி வெங்கடேஷ் ரீமேக்கிய தமிழ்ப் படங்கள்
6
குடியரசு தின அணிவகுப்பு

குடியரசு தின அணிவகுப்பில் கேரளா நீக்கம்:

குடியரசு தினத்தன்று தலைநகர் தில்லியில் நடைபெறும் அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாநிலங்களின் பட்டியலை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டது. அந்த அணிவகுப்பு பட்டியலில் கேரள மாநிலத்தின் பெயர் இடம்பெறாமல் இருந்தது. குடியுரிமைச் சட்டத்தைக் கேரள அரசு எதிர்த்ததன் விளைவாகத்தான் மத்திய அரசு இந்த முடிவை எடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அரசியல் உள்நோக்கத்துடன் எடுக்கப்பட்ட முடிவு எனப் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

பா.ஜ.க ஆட்சி நடைபெறும் மாநிலங்களைத் தவிர, மற்ற மாநிலங்களைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் மத்திய அரசின் போக்கு பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. தற்போது கேரளாவைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் ஆளும் மற்ற மாநிலங்களும் மத்திய அரசுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கத் தொடங்கியிருக்கின்றன. இதை மோதல் போக்குடன் அணுகாமல் மாற்றுக்கருத்துக்கு இடமளித்து மத்திய அரசு நடந்துகொள்ள வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- தனிமொழி

அடுத்த கட்டுரைக்கு