Published:Updated:

’புகைப்படம், வீடியோ எடுக்க தடை?’ - 'Central Vista'- வில் என்ன நடக்கிறது?

புதிய நாடாளுமன்றக் கட்டட மாதிரிப் படம்
புதிய நாடாளுமன்றக் கட்டட மாதிரிப் படம்

மத்திய அரசாங்கம் இந்த இக்கட்டான சூழலிலும் நாட்டுக்கான புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைக் கட்டி நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவன்று அதற்கு திறப்புவிழா நடத்துவதற்கு முனைப்பாகச் செயல்பட்டுவருகிறது.

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்துவருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் மத்திய பா.ஜ.க அரசு சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லாமல் செயல்பட்டுவருகிறது. ஒருமுனையில், கொரோனா நோயாளிகளுக்குத் தேவையான அளவு ஆக்ஸிஜன் வசதிகளின்றி அல்லாடிவருகின்றனர். மறுமுனையில், கொரோனாவால் கொத்துக் கொத்தாக மடிந்துவருபவர்களை எரிப்பதற்கு இடமின்றி திணறிவருகின்றனர். நோயிலிருந்து தற்காத்துக்கொள்ளும் தடுப்பூசிகளுக்கும் தட்டுப்பாடு. இப்படிப் பல்வேறு இன்னல்களை சந்தித்துவரும் இந்தியா, அபாய நிலையில் உள்ளது என்பதே நிதர்சனம். குறிப்பாக, தலைநகர் டெல்லியை பொறுத்தவரையில், கொரோனாவால் உயிரிழப்போர் விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அவர்களுக்குத் தேவையான படுக்கை வசதிகளும் இல்லை. டெல்லி மாநில அரசாங்கம் அவசரகால நடவடிக்கையாக பல்வேறு பணிகளைச் செய்துவருகிறது. ஆனால், மத்திய அரசாங்கம் இந்த இக்கட்டான சூழலிலும் நாட்டுக்கான புதிய நாடாளுமன்ற கட்டடத்தைக் கட்டி (Central Vista Redevelopment Project) நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவன்று அதற்குத் திறப்பு விழா நடத்துவதற்கு முனைப்பாகச் செயல்பட்டுவருகிறது. இதற்கென மத்திய பட்ஜெட்டில் சுமார் ரூ.20,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைப்பின் கீழ் இதற்கான கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள ஷபூர்ஜி பல்லோன்ஜி கட்டுமான நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Central Vista Project
Central Vista Project
Twitter/GURKIRAT MAND

மொத்தம் 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படும் இந்தக் கட்டடத்துக்காக இந்தியா கேட் அருகே அமைந்திருக்கும் நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்படுவதாக சர்ச்சை எழுந்தது. பின்னர், அவை இடமாற்றம் செய்யப்போவதாக தெரிவித்தனர். அதன்பின், தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை டெல்லியில் நாளுக்கு நாள் வேகமெடுத்துவருவதால், அதைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அந்த மாநில அரசாங்கம் கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்தநிலையில், இந்த ஆண்டு மே மாதம், 7-ம் தேதி கொரோனாவின் தாக்கம் தலைவிரித்து ஆடி வருவதால். சூழ்நிலை இயல்புநிலைக்குத் திரும்பும் வரை புதிய நாடாளுமன்றத்தின் கட்டடப் பணிகளை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டுமென்று அன்யா மல்ஹோத்ரா என்பவரால் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதற்கு மத்திய அரசின் தரப்பிலிருந்து, ``நாங்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வரும் 400-க்கும் மேற்பட்ட பணியாளர்களையும் அங்கேயே, பணி நடைபெற்றுவரும் இடத்திலேயே தனியாகத் தங்கவைத்து கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றிச் செயல்படுத்திவருகிறோம். அதேபோல் அனைவருக்கும் கொரோனா பரிசோதனையும் அவ்வப்போது நடத்தப்பட்டுவருகிறது. மேலும், பணியாளர்களின் உடல்நிலையில் அக்கறைகொண்டு அவசரத் தேவைகளுக்காக சிறப்பு மருத்துவக்குழு ஒன்றையும் நியமித்துள்ளோம். இவ்வாறு அரசாங்கத்தின் அனைத்து விதிகளையும் கடைப்பிடித்து செயல்பட்டுவருகிறோம். அதனால், இதற்கு நீதிமன்றம் தடைவிதித்தால் அது சட்டத்துக்கு புறம்பான செயலாகும்’’ என்றும் ``மனுதாரரால் கோரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், அங்கே பணிபுரிந்துவரும் பணியாளர்களின் பெரும்பாலானோர் தினமும் வெளியிலிருந்து பயணித்து வந்து கட்டுமானப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். மிகவும் தொலைவிலிருந்து வரும் பணியாளர்களே இங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதுவும் கொரோனா விதிகள் காற்றில் பறந்துள்ளதாகவே கூறுகின்றனர் பணியாளர்கள். இந்த இக்கட்டான சூழலிலும் பணியாளர்களின் கைகளில் கணிசமான பணப்புழக்கம் உள்ளதால், அவர்களும் புதிய நாடாளுமன்றத்தின் கட்டடப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதையே விரும்புகின்றனர் என்பது ஆங்கிலச் செய்தி ஊடகம் ஒன்று சமீபத்தில் நடத்திய கள ஆய்வில் தெரியவந்துள்ளது. டெல்லி உயர் நீதிமன்றமும் மறு விசாரணையை வரும் மே 17-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. அதைத் தொடர்ந்து தற்போது கட்டுமானப் பணி நடைபெற்று வருமிடத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுப்பதற்கு அனுமதியில்லை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருப்பது மீண்டும் சர்ச்சை அலைகளைக் கிளப்பியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு