அரசியல்
சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

புதிய அரசு: காத்திருக்கும் கடமைகள்... சந்திக்கும் சவால்கள்!

நிபுணர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
நிபுணர்கள்

புதிதாகப் பொறுப்பேற்கும் அரசு முதலில் சேவை பெறும் உரிமைச் சட்டத்தைக் கொண்டுவரவேண்டும். அதன்மூலம் மக்கள் நம்பிக்கையோடு அரசு அலுவலகங்களுக்குச் செல்வார்கள்

கடந்த ஐந்தாண்டுகளில் தமிழக அரசு செய்யத்தவறிய விஷயங்கள் என்னென்ன; அடுத்து பொறுப்பேற்கும் புதிய அரசு செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன? - இந்தக் கேள்வியைத் தமிழக வளர்ச்சியில் அக்கறையுள்ள நிபுணர்களிடம் முன்வைத்தோம். மாநிலத்தின் வளர்ச்சியையும் மக்களின் நல்வாழ்வையும் தீர்மானிக்கும் எட்டுக் காரணிகள் குறித்து இங்கே அலசுகிறார்கள் அந்தந்தத் துறைகளில் இயங்கிக்கொண்டிருக்கும் இவர்கள்.
ஜெயராம் வெங்கடேசன்
ஜெயராம் வெங்கடேசன்

“வெளிப்படைத் தன்மையே ஊழலை ஒழிக்கும்!” - ஜெயராம் வெங்கடேசன், ஒருங்கிணைப்பாளர், அறப்போர் இயக்கம்

ஊழல்

“மிகவும் இக்கட்டான சூழலில் இருக்கிறது தமிழகம். கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் ஊழல் அசுர வளர்ச்சி அடைத்துள்ளது. அமைச்சர்கள் பலர் சிறிதும் அச்சமின்றி ஊழல் செய்திருக்கிறார்கள். பல ஊழல்களை நாங்கள் வெளிக்கொண்டு வந்திருக்கிறோம். மின்துறையில், ரூ. 1 லட்சம் கோடி ஊழல் நடந்திருக்கிறது. சீர்குலைந்த அந்தத் துறை சுமார் ரூ.1.7 லட்சம் கோடிக் கடனில் தள்ளாடுகிறது. தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்தது மட்டுமன்றி, சந்தை மதிப்பைவிட அதிக விலைக்கு வாங்கி

ரூ. 6,000 கோடி ஊழல் செய்துள்ளார்கள். நியாயவிலைக் கடைகளுக்கு சர்க்கரை, பாமாயில், பருப்பு கொள்முதல் செய்ததில் சந்தை மதிப்பைவிட கிலோவுக்கு 10 முதல் 30 ரூபாய் வரை அதிகம் தந்துள்ளார்கள். அதனால் ஏற்பட்ட இழப்பு சுமார் 1,500 கோடி ரூபாய். இதுமாதிரி நாம் கண்டறிந்து வெளியிட்ட ஊழல்கள் மட்டுமே சுமார் 1.14 லட்சம் கோடி ரூபாய்.

ஊழல் என்பது நேரடியாக மக்களை பாதிப்பது. ஊழல் செய்த பணம், நம் வியர்வையில் விளைந்த வரிப்பணம். ஊழலைத் தடுக்க மூன்று செயல்பாடுகள் முக்கியம். வெளிப்படைத்தன்மையும் பொறுப்புடைமையும் அரசுக்கு வேண்டும். ஊழலை விசாரிக்கும் அமைப்புகள் தன்னிச்சையாகச் செயல்படவேண்டும்.

புதிதாகப் பொறுப்பேற்கும் அரசு முதலில் சேவை பெறும் உரிமைச் சட்டத்தைக் கொண்டுவரவேண்டும். அதன்மூலம் மக்கள் நம்பிக்கையோடு அரசு அலுவலகங்களுக்குச் செல்வார்கள். லோக் அயுக்தா, இப்போது வெறுமனே உண்மை அறியும் குழு போல எந்த அதிகாரமும் இல்லாமல் இருக்கிறது. தன்னிச்சையாகவும் அதிகாரத்தோடும் இயங்கும் வகையில் அந்தச் சட்டத்தில் மாற்றங்கள் செய்யவேண்டும். லஞ்ச ஒழிப்புத்துறையை லோக் அயுக்தாவுக்குக் கீழ் கொண்டுவரவேண்டும். டெண்டர்களை முழுமையாக ஆன்லைன் வழியாக நடத்தவேண்டும். மக்கள் பங்களிப்பை அதிகப்படுத்தவேண்டும். கலெக்டர் நினைத்தால் கிராமசபைக் கூட்டத்தை ரத்து செய்யலாம் என்ற நிலை இருக்கிறது. அதை மாற்றவேண்டும். கடந்த பத்தாண்டு ஆட்சிக்காலத்தைப் பேரனுபவமாக எடுத்துக்கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும்.”

கண்ணபிரான் ரவிசங்கர்
கண்ணபிரான் ரவிசங்கர்

“மொழித் திணிப்பை எதிர்க்கும் துணிவு வேண்டும்!” - கண்ணபிரான் ரவிசங்கர், இணைப் பேராசிரியர், பாரீஸ் பல்கலைக்கழகம்

மொழி

“ஓர் இனம் காத்துக்கொள்ளவேண்டிய முதன்மைச் சொத்துகள், மொழியும் சமூகநீதியும்தான். ஒரு மொழி அரசியலற்றுத் தனித்து இயங்கவே முடியாது. மொழி என்பது வெறுமனே தொடர்புக் கருவியோ, இலக்கிய-இலக்கண ஆராய்ச்சிப் பொருளோ மட்டுமல்ல; மொழி, ஓர் இனத்தின் வழிவழி வாழ்வியல்!

தமிழ்ச் சமூகம், அரசியல் மூலமான திணிப்புகளைப் பல காலமாக எதிர்த்தும், மாற்று ஏற்பாடுகளைச் செய்துகொண்டும்தான் வந்துள்ளது. அது இன்றும் பொருந்துகிறது. கடந்த 2014 முதல் இன்று வரை, மத்திய அரசாலும், மாநில அரசாலும், பல்வேறு சட்டங்களும் திட்டங்களும் இயற்றப்பட்டுள்ளன.

புதிய கல்விக் கொள்கை வழியே, தமிழ்நாட்டில் கட்டாயமும் மொழிக் கொள்கையைப் புகுத்துவது, உள்துறை அமைச்சக ராஜ்ய பாஷா திட்டம் மூலமாக, அரசு அலுவலகங்களில் கட்டாய இந்தி ஆவணமாக்கம், அரசுத் திட்டங்கள் யாவும் இந்திப் பெயரிலேயே அமைவது, அரசு ஊழியர்களின் மேல் கட்டாய இந்தித் தேர்வைத் திணிப்பது, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், மருத்துவ, தொழில்நுட்பக் கருத்தரங்குகளில் பங்கேற்கும் அரசு அலுவலர்கள் என்று பலருக்கும் தொடர்பேயின்றி இந்தியிலேயே ஆவணங்கள் அனுப்புவது எனத் தொடர்கிறது நெருக்கடி.

சம்ஸ்கிருத வளர்ச்சிக்கு 643 கோடியும், பிற எல்லா மாநில மொழிகளுக்கும் வெறுமனே 29 கோடியும் வழங்குகிறது மத்திய அரசு. 60% இந்தி பேசாத மக்கள், 99.9% சம்ஸ்கிருதம் பேசாத மக்களின் வரிப் பணத்தை எடுத்து, ஒரு மொழிக்கு மட்டும் தந்து அதீத ஓரவஞ்சனை காட்டுவது அநீதி.

தமிழக அரசின் பாடப் புத்தகத்திலேயே, ‘தமிழைவிடவும் மிக மூத்த மொழி சம்ஸ்கிருதம்’ என்று நம் பாடநூல் கழகமே அச்சிட்டு வெளியிடுகிறது. மாநிலத் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சரே சம்ஸ்கிருத, இந்தி மொழிகளுக்கு ஆதரவாகப் பேசுகிறார். குடியரசுத் தலைவரின் சம்ஸ்கிருத மொழி விருதோடு 5 லட்சம் பணப்பரிசும் வழங்கப்படுகிறது. அதுதவிர ஆயுள்காலம் முழுவதும் ஆண்டுதோறும் 50,000 ரூபாய் வழங்கப்படுகிறது. தமிழ் உள்ளிட்ட வேறெந்த மொழிக்கும் அவ்வாறு வழங்கப்படுவதில்லை.

இவற்றையெல்லாம் யார் செய்கிறார்கள், எவர் தூண்டுதலால் நிகழ்கின்றன என்று நமக்குத் தெரியும். இந்த இழிநிலை மாறவேண்டும்... மாற்ற வேண்டும். யார் துணிந்து மாற்றுவார்களோ அவர்களை நாம் ஆதரிக்க வேண்டும்!

இந்தத் தேர்தலில் பல கட்சிகள், மொழிசார்ந்த சில வாக்குறுதிகளையும் தங்களின் தேர்தல் அறிக்கைகளில் தந்துள்ளன. ஆனால், வாக்குறுதி தருவது மட்டுமே பெரிதல்ல; அதைத் துணிந்து ஆற்றக்கூடிய ஆற்றல் யாருக்கு உண்டு என்பதையும் கருதியே வாக்களிக்க வேண்டும்.

மத்திய அரசின் அப்பட்டமான அத்துமீறல்களைத் துணிவுடன் எதிர்கொண்டு, இருப்பதைக் காத்தும், புதிதாக ஆற்றியும் தமிழ்ப்பணி செய்ய வேண்டிய காலத்தில் உள்ளோம். புதிய அரசிடமிருந்து நாம் இதைத்தான் எதிர்பார்க்க வேண்டும்.”

ச.பாலமுருகன்
ச.பாலமுருகன்

“மனித உரிமைகளை மதிப்பது முக்கியம்!” - ச.பாலமுருகன், தேசியச் செயலாளர், மக்கள் சிவில் உரிமைக்கழகம்

மனித உரிமை

“கடந்த பத்தாண்டுகளில் காவல்துறையின் வன்முறை அதிகரித்துள்ளது. சாத்தான்குளம் சம்பவம் ஓர் உதாரணம். பொதுமக்களின் எழுச்சியும் நீதிமன்றத்தின் கண்டிப்பும் அழுத்தம் கொடுக்க, அதில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டார்கள். பல வழக்குகளில் நகர்வும் இல்லை.

கைது செய்யப்படுபவர்களைக் கையை உடைத்துச் சிறைப்படுத்துவதை ஒரு கலாசாரமாகவே மாற்றியிருக்கிறது காவல்துறை. இதுகுறித்து நீதித்துறையும் கேள்வியெழுப்பவில்லை. புதிதாகப் பொறுப்பேற்கும் அரசு காவல் துறையை முழுமையாகச் சீரமைத்து அதைக் கண்காணிக்க மாவட்ட மனித உரிமை நீதிபதி தலைமையில் ஒரு குழுவை அமைக்கவேண்டும்.

இப்போதிருக்கும் அளவுக்கு எப்போதும் கருத்துரிமைக்கு சவால் எழுந்ததில்லை. சமூக வலைத்தளப் பதிவுகள், புத்தகங்கள், கதைகள், கவிதைகள், பாடல்கள், நாடகம் என எதன்வழியாகக் கருத்தைப் பகிர்ந்தாலும் அச்சுறுத்தல் எழுகிறது. 2016-ல் பெருமாள் முருகன் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் ஒரு வழிகாட்டு நெறிமுறையைத் தந்தது. மாவட்ட அளவில் எழுத்தாளர்கள், சட்ட வல்லுநர்கள் அடங்கிய குழுக்களை அமைத்து, அவர்களிடம் கருத்து கேட்டே கருத்துரிமை சார்ந்த வழக்குகளைப் பதிவுசெய்யவேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளில் அந்தக்குழு அமைக்கப்படவேயில்லை.

சட்டவிரோதச் செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் (UAPA), கடந்த ஆட்சியில் விருப்பத்துக்குப் பயன்படுத்தப்பட்டு 270 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இறப்பு நிகழ்வுகளுக்குப் போய் அஞ்சலியுரை நிகழ்த்தியவர்கள், கவிதை பாடியவர்கள்மீதுகூட அந்த வழக்கைப் போட்டிருக்கிறார்கள். புதிய அரசு, உபா சட்டத்தைக் கைவிடவேண்டும்.

எல்லா அதிகாரங்களையும் கைப்பற்றுவதுபோலவே மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு உரிமையையும் கையகப்படுத்தப் பார்க்கிறது மத்திய அரசு. தேசியப் புலனாய்வு அமைப்புச் சட்டம் மூலம் மாநில அரசின் பட்டியல் குற்றங்களில் உள்ள எந்த வழக்கையும் மத்திய அரசு தானாக எடுத்துக்கொள்ள முடியும். உதாரணத்துக்கு, ஒருவர் மேல் தேச துரோக வழக்கு போட்டு மாநில அரசு விசாரித்துக்கொண்டிருக்கிறது என்றால், இந்தச் சட்டப்படி மத்திய அரசு அந்த வழக்கைத் தானே எடுத்து விசாரிக்கலாம். புதிய அரசு இதை அனுமதிக்கக்கூடாது.

ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டவர்களை 10 முதல் 14 ஆண்டுகளில் விடுதலை செய்யலாம் என்று 1962-ல் கோட்சே வழக்கில் கூறியிருக்கிறது உச்ச நீதிமன்றம். வீரபாரதி வழக்கிலும் இதை உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால், வீரப்பன் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 32 ஆண்டுகளாகக் கோவைச் சிறையில் வாடுகிறார்கள். நெடுங்காலம் சிறையில் இருப்பவர்களைப் புதிய அரசு சட்டபூர்வமாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்தியாவில் 25 ஆண்டுகளில் மலக்குழிகளால் 634 பேர் இறந்திருக்கிறார்கள். தமிழகத்தில்தான் இது அதிகம். மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை முற்றிலுமாக நீக்கப்படவேண்டும். அதிகாரிகள் யாரும் மலக்குழிக்குள் மனிதர்கள் இறங்க வலியுறுத்தினால், அவர்கள்மீது குற்ற வழக்கு பதிவுசெய்யவேண்டும்.

ஈழ அகதிகளின் குழந்தைகளுக்கு உயர்கல்வி மறுக்கப்படுகிறது. மத்திய அரசுக்காகக் காத்திருக்காமல் ஜெனீவா மாநாட்டு வரைவின் அடிப்படையில் தமிழக அரசு, ஈழ அகதிகளுக்காகச் சிறப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அவர்களுக்கும் சம உரிமை வழங்கவேண்டும்.”

கருணானந்தன்
கருணானந்தன்

“கல்வியில் கார்ப்பரேட் மயமும் காவிமயமும் கூடாது!” - பேராசிரியர் கருணானந்தன், கல்வியாளர்

கல்வி

“எடப்பாடி பழனிசாமி அரசு கல்வியில் தனது பொறுப்பை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. கல்வி என்பது, கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் பணியாளர்களை உருவாக்கிக் கொடுப்பதற்கானதல்ல. தற்போதைய அரசு கல்வியைச் சந்தைச் சரக்காக மாற்றிவிட்டது. கல்வித்துறையில் தனியாரின் ஆதிக்கம் மேலோங்கிவிட்டது.

புதிய கல்விக்கொள்கை தேசத்துக்கே பெரும் அச்சுறுத்தலாக வந்திருக்கிறது. தமிழக அரசு இந்த விவகாரத்தைச் சரியாகக் கையாளவில்லை. அதிலுள்ள பிரச்னைகளைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவில்லை. புதிய கல்விக்கொள்கையில் மாநில அரசின் கையிலிருந்து மத்திய அரசின் பிடிக்குள் கல்விக்கட்டமைப்பே கைமாறுகிறது. தமிழ்நாடு அரசுக்கு தனக்கான கல்விக்கொள்கையை வகுப்பதற்கான உரிமையே இல்லை என்றாகிவிடும். இதுபற்றி எந்தக் கவலையும் படவில்லை தற்போதைய ஆட்சியாளர்கள்.

எவ்வளவு கல்வி நிறுவனங்கள் இங்கே இருக்கின்றன என்பது முக்கியமில்லை. எவ்வளவு மாணவர்கள் பொருளாதார, சமூகத் தளைகளை மீறி கல்விக்கூடங்களுக்குச் செல்கிறார்கள் என்பதுதான் முக்கியம். கல்வியைப் பரவலாக்குவது ஓர் அடிப்படை. இதற்கு முன்பு தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் அதைச் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். ஆனால், அது எல்லோரையும் சென்றடைந்ததா என்பது முழுமையாக ஆய்வுசெய்யப்பட வேண்டிய கேள்வி.

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சமூக மேம்பாட்டுக்கான கல்வித்திட்டங்களைக் கையில் எடுக்கிற கொள்கைப்பிடிப்பும் துணிச்சலும் இருக்க வேண்டும். இன்றைய கல்விச்சூழலைப் பற்றி ஆய்வுசெய்ய தகுதிவாய்ந்த தேர்ந்த வல்லுநர் குழு ஒன்றை நியமிக்க வேண்டும். அந்தக்குழு பரிந்துரைக்கும் விஷயங்களை நடைமுறைப்படுத்தும் துணிவு இருக்கவேண்டும். அண்ணாவில் தொடங்கி ஜெயலலிதா வரை இந்தத் துணிவு இருந்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமி அரசோ, மத்திய அரசின் எல்லா அழுத்தத்துக்கும் பணிந்துவிட்டது.

நீட் தேர்வு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இதை எதிர்க்கவும் மாற்றுத்தீர்வு தேடவும் வலிமையும் திடமும் புதிய அரசுக்குத் தேவை. கருத்தோடு உடன்படும் பிற மாநிலங்களையும் ஒருங்கிணைத்து இந்தப் பிரச்னையை அணுகவேண்டும்.

ஆளுநரின் தலையீடு தமிழகப் பல்கலைக்கழகங்களைச் சீரழிக்கிறது. மாநிலக் கல்வி நிறுவனங்களை முழுமையாக மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும். அரசு நிறுவனங்கள், அரசு உதவிபெறும் நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்யவேண்டும். தொடர்ந்த புறக்கணிப்புகளால் இந்த நிறுவனங்கள் மக்களிடம் செல்வாக்கிழந்துவிட்டன. சாமானிய மக்களின் நம்பிக்கையாக உள்ள இந்த நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி, காலிப்பணியிடங்களை நிரப்பி, கண்காணிப்பை பலப்படுத்தவேண்டும். தற்காலிக ஆசிரியர் நியமனத்தைத் தவிர்க்க வேண்டும். அரசுப்பள்ளிகளை மேம்படுத்தி மாணவர்களை ஈர்க்கவேண்டும். கல்வியை கார்ப்பரேட்மயம் ஆக்குவதையும் மதமயப்படுத்துவதையும் தடுக்க வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்களைத் தவிர்க்கமுடியாது. ஆனால், அவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவேண்டும். லாப நோக்கத்தில் இயங்கும் அந்நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள் தரக்கூடாது. லாபநோக்கமில்லாமல் சேவையாக இயங்கும் நிறுவனங்களைக் கண்டறிந்து ஊக்கப்படுத்தலாம்.”

நக்கீரன்
நக்கீரன்

“வளங்களை அழிக்கும் ‘வளர்ச்சி’ வேண்டாம்!” - நக்கீரன், எழுத்தாளர்

சூழலியல்

“சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மக்களிடம் அதிகமாகியிருக்கிறது. சூழலியலுக்காக அரசியல் கட்சிகள் மட்டுமே போராட்டம் நடத்திய நிலைமாறி, இப்போது மக்களே களத்துக்கு வந்து போராடத் தொடங்கியிருக்கிறார்கள். அதனால்தான் அரசியல் கட்சிகள் சுற்றுச்சூழல் அணிகளை உருவாக்க வேண்டிய நிர்பந்தம் உருவாகியிருக்கிறது. நீர்நிலைகள்மீது மக்களுக்கு அக்கறை அதிகரித்திருக்கிறது. மக்கள் ஏற்படுத்திய எழுச்சியால்தான் குடிமராமத்து போன்ற திட்டங்களை அரசு கொண்டு வந்தது.

பிற நாடுகளாலும், பிற மாநிலங்களாலும் விரட்டப்பட்ட பல திட்டங்களையும் தொழிற்சாலைகளையும் தமிழகத்தில் அனுமதித்துள்ளார்கள். வாழ்வாதாரங்களை அழிக்கும் தொழிற்சாலைகளை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்களை எடப்பாடி பழனிசாமி அரசு கடுமையாக ஒடுக்கியது. ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டங்களை எதிர்த்து மக்கள் பல மாதங்கள் போராடினார்கள். காவல்துறையைக் கொண்டு மிரட்டி ஒடுக்க முனைந்தது அரசு. மக்கள் அஞ்சாமல் போராடியபிறகு வேறு வழியில்லாமல் காவிரிப்படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார்கள். போராடினால்தான் மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளை அரசு காதுகொடுத்துக் கேட்கும் என்ற நிலை மிகவும் மோசமானது. முன்பெல்லாம் மக்கள் போராட்டம் நடத்தினால் சம்பந்தப்பட்ட துறையினர் வந்து பேச்சு நடத்துவார்கள். இப்போது காவல்துறைதான் முதலில் வருகிறது.

கடந்த ஐந்தாண்டுகளில் மத்திய அரசு சூழலியலை பாதிக்கும் பல திட்டங்களைத் தமிழகத்தின் மீது திணித்திருக்கிறது. தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள், அதை வலுவாக எதிர்த்துக் குரல்கொடுக்கவில்லை. குறைந்தபட்சம் மக்களின் கருத்தைக்கூடப் பிரதிபலிக்கவில்லை. ஏதோவொரு விதத்தில் சமரசம் செய்துகொண்டு அமைதி காத்தார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் அரசு காலநிலை மாற்றத்தை முக்கியப் பிரச்னையாகக் கருதவேண்டும். காலநிலை மாற்றத்தால் பெரிதும் பாதிக்கப்படப்போவது, விவசாயம்தான். விவசாயிகளுக்கு அதன் பாதிப்புகளைப் புரியவைக்கவேண்டும். இன்னும் நாம் பாரம்பர்ய அறிவின்படியே விவசாயம் செய்துகொண்டிருக்கிறோம். ஆனால் பருவநிலை மாறிக்கொண்டேயிருக்கிறது. அதைப் புரிந்துகொள்ளாமல் விவசாயம் செய்வதால் இழப்பைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. தேர்ந்த நிபுணர் குழுவை நியமித்து காலநிலை மாற்றம் குறித்து விவசாயிகளுக்குத் தேவையான தகவல்களைச் சேகரித்து வழங்கவேண்டும்.

தமிழகத்தின் நிதிநிலை மோசமாக இருக்கிறது. வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்திருக்கிறது. புதிய அரசு இது இரண்டுக்கும் தீர்வாக பெருந்தொழில்களை ஆதரிக்க நேரலாம். அந்தச்சூழலில் சூழலியல் பாதிப்புகளையும் முக்கியக் காரணியாகக் கருத்தில்கொண்டு முடிவெடுக்கவேண்டும். இயற்கை வளங்களை மொத்தமாகச் சுரண்டும் வகையிலான திட்டங்களைத் தவிர்க்கவேண்டும். மத்திய அரசு திணித்தாலும் தடுக்கவேண்டும்.”

செல்வி மனோ
செல்வி மனோ

“பெண்களுக்கு தனி அமைச்சகம் வேண்டும்!” - செல்வி மனோ, ஒருங்கிணைப்பாளர், ‘மனிதி’

பெண்கள் பிரச்னைகள்

“எல்லாத் தேர்தல்களிலும் பெண் வாக்காளர்களே வெற்றியைத் தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கிறார்கள். அதனால்தான் பெண்களின் வாக்குகளைக் குறிவைத்து வாக்குறுதிகளை வழங்குகின்றன அரசியல் கட்சிகள். இலவசங்கள், பரிசுகள் மூலமாகவே பெண்களைக் கவர்ந்துவிடலாம் என்று அரசியல் கட்சிகள் கருதுகின்றன. அதற்குப் பெண் வாக்காளர்கள் இரையாகிவிடக்கூடாது. சுயமரியாதையையும் கண்ணியத்தையும் கௌரவத்தையும் காக்கும் கட்சிகளைத்தான் தேர்வு செய்யவேண்டும்.

தமிழகத்தில் மது மிகப்பெரும் அச்சுறுத்தலாகப் பெருகிக்கொண்டே போகிறது. அ.தி.மு.க அரசு வெளிப்படையாகவே மது விற்பனையை ஊக்குவித்தது. இந்தத் தேர்தலிலும்கூட மதுவிலக்கை பிரதான வாக்குறுதியாக எந்தக் கட்சியும் சேர்க்கவில்லை. இது ஏமாற்றமாகத்தான் இருக்கிறது.

தமிழகத்தில் பல குற்றங்களுக்கு மதுவே காரணமாக இருக்கிறது. மதுநோயாளிகள் அதிகரித்துக்கொண்டே போகிறார்கள். ஒரு பக்கம் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் பெருகுகின்றன. பொள்ளாச்சியில், நாகர்கோவிலில் எனத் தொடரும் வன்முறைகளில் கைது செய்யப்பட்டவர்கள் மீது காட்டப்படும் கனிவு, மிகுந்த சோர்வை ஏற்படுத்துகிறது. அரசியல் செல்வாக்கு இருந்தால் எந்தப் பெண்ணையும் பலவந்தப்படுத்தலாம் என்ற தைரியத்தை ஆட்சியாளர்கள் வளர்த்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் அச்சுறுத்தப்பட்டு முடக்கப்படுகிறார்கள்.

ஆணவப் படுகொலைகளைத் துடைத்தெறியும் வகையில் அழுத்தமான ஒரு சட்டம் இயற்றிச் செயல்படுத்தவேண்டும். பெரும்பாலான ஆணவக் கொலை வழக்குகளில் இதுவரை நீதி கிடைக்கவில்லை. ஒரு வழக்கில் வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரியே தற்கொலை செய்துகொண்டார். அந்த அளவுக்கு அவருக்கு நெருக்கடி தரப்பட்டது. புதிய அரசு ஆணவக்கொலை வழக்குகளை விரைந்து முடித்து நீதி வழங்கவேண்டும்.

காவல்துறையில் உயர் பொறுப்பிலிருக்கும் ஒரு பெண் அதிகாரி, இன்னொரு உயரதிகாரியால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்படும் அவலமும் தமிழகத்தில் நடந்துள்ளது. அந்த அதிகாரியைப் புகாரளிக்கக்கூட வரவிடாமல் சுங்கச்சாவடியில் முடக்க முயன்றார்கள். தவறிழைத்த அதிகாரிமேல் அரசு கடும் நடவடிக்கை எடுக்காமல் கனிவு காட்டியது. பெரிய பதவியில் இருக்கும் பெண்களுக்கே நீதி கிடைக்காத நிலையில், சாமானியர்களுக்கு எப்படிக் கிடைக்கும்?

புதிதாகப் பொறுப்பேற்கும் அரசு படிப்படியாகவாவது மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். பெண்கள்மீதான வன்முறை வழக்குகளை விரைந்து முடித்து தண்டனை பெற்றுத்தரவேண்டும். பணியிடப் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். பெண்களுக்கு சொத்தில் சமபங்கு தர சட்டங்கள் இருந்தாலும் நடைமுறையில் பெரும்பாலான பெண்கள் சொத்துரிமை அற்றவர்களாக, பொருளாதார சுயச்சார்பு அற்றவர்களாகவே இருக்கிறார்கள். பெண்கள் பெயரில் சொத்துகள் மாற்றப்படும்போது, குறிப்பிட்ட வரம்பு வரை முத்திரைக்கட்டண விலக்கு அளிக்கவேண்டும். அதனால் குடும்பத்தினரே பெண்கள் பெயரில் சொத்துகளை ஆவணப்படுத்த விரும்புவார்கள். இது நம்பிக்கையை உருவாக்கும்.

சமூக நலத்துறையுடன் இணைக்காமல், பெண்களுக்கென்று தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் தனித்தனியாக பட்ஜெட் போடவேண்டும்.”

பேராசிரியர் ஜோதி சிவஞானம்
பேராசிரியர் ஜோதி சிவஞானம்

“பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும்!” - பேராசிரியர் ஜோதி சிவஞானம், பொருளாதார நிபுணர்

பொருளாதாரம்

“வழக்கமாக தேர்தல்களில் விலைவாசியும் வளர்ச்சியும்தான் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும் காரணிகளாக இருக்கும். இந்தத் தேர்தலிலும் அவையே முக்கியத்துவம் பெறுகின்றன. கடந்த ஏழு ஆண்டுகளில் மத்திய அரசு எடுத்த பல முடிவுகள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற நடவடிக்கைகள் வளர்ச்சியைக் கீழ்நோக்கிக் கொண்டுபோய்க்கொண்டிருக்கின்றன. இந்த நடவடிக்கைகளால் இந்தியாவின் பிரதான பொருளாதார கேந்திரங்களாக இருக்கும் முறைசாராத் தொழில்கள் நசிந்து பெரும்பின்னடவைச் சந்தித்துள்ளன.

பட்ஜெட்டில் வரிச்சலுகை கொடுத்து, நேரடி வரியை அதிகரிக்காமல் மறைமுக வரியை அதிகப்படுத்தியிருக்கிறார்கள். கடந்த ஆறு ஆண்டுகளில், பெட்ரோல் மூலம் அரசுக்குக் கிடைக்கும் வரி 300 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. மற்ற அனைத்து வரிகளும் சரிந்திருக்கின்றன. வளர்ச்சி குறைந்தால் வரிவருவாயும் குறைந்துவிடும்.

கோவிட் காரணமாக வேலையிழப்பு, வேலையில்லாத் திண்டாட்டம் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. லாக்டௌன் என்ற தீர்வைத் தேர்வுசெய்த அரசு, அதனால் ஏற்படும் பாதிப்புகளைக் கணக்கிடவில்லை. மக்கள் நிலைகுலைந்துவிட்டார்கள். மத்திய, மாநில அரசுகள் இரண்டுக்கும் இது மிகப்பெரும் தோல்வி.

தேசிய அளவில் பொருளாதார வளர்ச்சி விகிதம் மைனஸ் 8 முதல் மைனஸ் 10 சதவிகிதமாக இருக்கிறது. பொருளாதார சுருக்கம் 30 லட்சம் கோடியாக இருக்கிறது. வேலையிழப்பு காரணமாக வறுமை அதிகரித்திருக்கிறது. 2011 கணக்கெடுப்புப்படி, இந்தியாவில் வறுமைக்கோட்டுக்குக் கீழிருப்பவர்கள் 22%; ஒட்டுமொத்த வருமானத்தில் கால்பங்கு குறைந்தாலும்கூட இந்த அளவு 47% ஆக உயர்ந்துவிடும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரை புதிய முதலீடுகள் ஏதும் வரவில்லை. நடைமுறைகள் கடினமாக இருப்பதால், தமிழகத்துக்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள், கல்வி சார்ந்த முதலீடுகள் ஆந்திராவின் ஸ்ரீசிட்டிக்குச் சென்றுவிட்டன. சிறு, குறு தொழில்களில் ஈடுபட்டிருந்தவர்கள் மீண்டெழ முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இன்று தமிழகத்தின் கடன், பட்ஜெட் கணக்குப்படி 5.7 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது; இது பட்ஜெட்டுக்கு உள்ளே வாங்கியிருக்கும் கடன். பொதுத்துறை நிறுவனங்களின் மூலம் வாங்கியிருக்கும் கடன்களைச் சேர்த்தால், ஒட்டுமொத்த மதிப்பு சுமார் 9 லட்சம் கோடி.

இந்தச்சூழலில் தமிழகத்தை மீட்டுக் கொண்டுவருவதே அமையவிருக்கும் அரசின் முன்னிருக்கும் முதன்மையான சவால். வரியை மட்டுமே உயர்த்தி வருவாய் எடுக்கமுடியாது; வருமானத்தை உயர்த்த வேண்டும்.

வளர்ச்சி குன்றியிருக்கிறது. அதனால் வருவாய் குறைந்திருக்கிறது; கடன் உயர்ந்திருக்கிறது. வளர்ச்சியை அதிகப்படுத்த வேண்டும். அதன்மூலம் வரியை உயர்த்தாமலேயே வருவாய் தானாக உயரும். மத்திய அரசிடம் இருந்து நமக்கு வரவேண்டிய பங்கை போராட்ட குணத்தோடு கேட்டுப்பெறவேண்டும்!”

ஆழி செந்தில்நாதன்
ஆழி செந்தில்நாதன்

“மாநில உரிமைகளை அடகு வைக்கக் கூடாது!” - ஆழி செந்தில்நாதன், ஒருங்கிணைப்பாளர், தன்னாட்சி தமிழகம் அமைப்பு

மாநில உரிமை

“இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம். கல்வி, சுகாதாரம், சட்டம் ஒழுங்கு உட்பட மாநிலங்களுக்கென்று நிறைவான உரிமைகள் இருக்கின்றன. நூறாண்டுகளாக நாம் போராடிப் பெற்ற உரிமைகளை கடந்த நான்கே ஆண்டுகளில் இழந்திருக்கிறோம்.

மாநில உரிமை என்பது சாமானிய மக்களுக்குத் தொடர்பில்லாத விஷயமென்று பலரும் நினைக்கிறார்கள். விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு, சுகாதாரம், உள்கட்டமைப்பு பற்றியெல்லாம் பேசுபவர்கள் மாநில உரிமைகள் குறித்து விவாதிப்பதில்லை. ஆனால், இந்தத் தேர்தலில் அதுதான் முக்கியப் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

ஏற்கெனவே மத்தியில் இருக்கும் அரசுகள் மாநிலங்களின் உரிமைகளை மெல்ல மெல்ல மத்தியில் குவித்துக்கொண்டிருந்தன. பா.ஜ.க அரசு பொறுப்பேற்றதும் அது வேகமெடுத்தது. வசதியாக, அதற்கு இசைவளிக்கும் எடப்பாடி ஆட்சி தமிழகத்தில் அமைந்தது. தமிழகத்தின் தொழிற்கொள்கை, சுற்றுச்சூழல் கொள்கை, தகவல் தொழில்நுட்பக் கொள்கை எப்படியிருக்க வேண்டும் என்பதை டெல்லி தீர்மானிக்கிறது. நீட், எழுவர் விடுதலை போன்ற பிரச்னைகளிலும் தமிழக அரசு செயலற்று நிற்கிறது. தமிழக வரலாற்றில் இப்படியொரு உரிமைப் பறிப்புக் காலம் வந்ததில்லை.

தமிழ்நாட்டுக்கென்று 69 சதவிகித இடஒதுக்கீட்டுக்குத் தனியே அரசியல் சாசன அங்கீகாரத்தை நாம் பெற்றிருந்தோம். தம் மக்களின் சமூகநிலையறிந்து இடஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநிலங்களுக்குத்தான் இருக்கவேண்டும். அதையும் மத்திய அரசு அபகரிக்க நினைக்கிறது.

ராணுவம், ஆட்சிப்பணி தவிர பிற மத்திய, மாநில அரசுப் பணியிடங்கள், அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கே பெரும்பாலும் வழங்கப்படும். இப்போது மத்திய அரசுப்பணிகளில் 90% வட இந்தியர்கள். ‘மாநில அரசுப்பணியிடங்களுக்கு அகில இந்திய அளவில் Common Eligibility Test ஒன்றைக் கொண்டு வருவோம்’ என்கிறார் உள்துறை அமைச்சர். அதன்மூலம் நம் டி.என்.பி.எஸ்.சி அமைப்பையே காலி செய்யப் பார்க்கிறார்கள். இந்தியா முழுவதும் இருந்து யார் வேண்டுமானாலும் தமிழக அரசுப்பணிக்கு வரலாம் என்கிற நிலை வரவிருக்கிறது.

கல்வி, நுழைவுத்தேர்வு, வேலைவாய்ப்பு, நிர்வாகம், தொழிலென எல்லாவற்றிலும் மாநிலங்களின் உரிமையைப் பறிக்கிறது மத்திய அரசு. உலகமே பாராட்டும் நமது சுகாதாரத்துறையைச் சிதைக்க ‘நீட்’ என்கிற தேர்வைத் திணிக்கிறது மத்திய அரசு. கல்வி, பொருளாதாரம், தொழில், சில்லறை வர்த்தகம், தகவல் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல், டெக்ஸ்டைல் என எல்லாத்துறைகளிலும் மத்திய அரசின் தவறான கொள்கைகளால் தமிழகம் பல இழப்புகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. எடப்பாடி அரசு, மத்திய அரசுக்கு அடிபணிந்து எதிர்க்கேள்வி கேட்காமல் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டதன் விளைவை நாம் அனுபவிக்கிறோம்.

மாநில அரசின் உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் புதிய அரசு துணிவுடன் போராட வேண்டும். மக்களின் நலனுக்கு விரோதமான மத்திய அரசின் செயல்பாடுகளை வலிமையாக எதிர்க்கவேண்டும். மக்கள், தங்களின் உரிமையையும் மாநிலத்தின் உரிமையையும் காக்கும் வலுவுள்ள வேட்பாளரைத் தேர்வு செய்து வாக்களிக்க வேண்டும்.”