Published:Updated:

85,000 கோடி கடன்; மாவோயிஸ்ட் அச்சுறுத்தல்... ஹேமந்த் சோரனுக்கு முன் நிற்கும் சவால்கள்!

ஹேமந்த் சோரன்
News
ஹேமந்த் சோரன்

பா.ஜ.க அரசை வீழ்த்திய ஹேமந்த் சோரனுக்கு, வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பது உள்பட பல சவால்கள் காத்திருக்கின்றன.

ஜார்க்கண்ட் மாநிலத்தில், மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 47 தொகுதிகளை ஜே.எம்.எம் – காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி கைப்பற்றியது. பழங்குடியினர் வாக்குகளும் கிராமப்புற வாக்குகளும் நகர்ப்புறங்களில் ஒரு பகுதி வாக்குகளும் கிடைத்ததால், மிகப்பெரிய வெற்றியை ஜே.எ.ம்.எம் கூட்டணி பெற்றுள்ளது.

ரகுபர் தாஸ் தலைமையிலான பா.ஜ.க அரசு மக்களின் அதிருப்தியை சம்பாதித்ததால், அந்த ஆட்சியை மக்கள் அகற்றியுள்ளனர். குறிப்பாக, குத்தகை மற்றும் நிலம் தொடர்பான சட்டங்களை மாற்றுவதற்கு பா.ஜ.க அரசு செய்த முயற்சி, பழங்குடி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. அதுதான் பா.ஜ.க-வின் தோல்விக்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாக அமைந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பா.ஜ.க ஆட்சி அகற்றப்பட்டு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்.) ஆட்சியமைத்துள்ளது. ஜே.எம்.எம் செயல் தலைவரான ஹேமந்த் சோரன் முதல்வராகப் பதவியேற்ற நிகழ்ச்சியில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சி.பி.எம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, சி.பி.ஐ பொதுச்செயலாளர் டி.ராஜா, தி.மு.க தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தேசிய அளவிலான எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

ஹேமந்த் சோரன் பதவியேற்பு நிகழ்ச்சியில்...
ஹேமந்த் சோரன் பதவியேற்பு நிகழ்ச்சியில்...

நீர், நிலம், வனம் எல்லாம் பழங்குடிகளுக்கே சொந்தம் என்ற முழக்கத்துடன் பதல்காடி இயக்கத்தை ஜார்க்கண்ட் பழங்குடி மக்கள் ஆரம்பித்தனர். அந்த முழக்கத்தை முன்வைத்து போராட்டங்களையும் அவர்கள் நடத்தினர். அதைத் தொடர்ந்து, அவர்கள்மீது பா.ஜ.க ஆட்சியில் பல தேசத்துரோக வழக்குகள் போடப்பட்டன. முதல்வராகப் பொறுப்பேற்ற சில மணி நேரத்தில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய ஹேமந்த் சோரன், பழங்குடி மக்கள்மீது பா.ஜ.க ஆட்சியில் போடப்பட்ட தேசத்துரோக வழக்குகளை ரத்துசெய்வதாக அறிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெரும் வெற்றியைப் பெற்றுள்ளபோதிலும், ஹேமந்த் சோரனுக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் மோசமான நிலையில் இருக்கின்றன. சமூக, பொருளாதாரப் பிரச்னைகளைச் சரிசெய்யவேண்டிய கடினமான பணிகள், புதிய முதல்வர் முன்பாக இருக்கின்றன.

பதல்காடி
பதல்காடி

ஜார்க்கண்ட் மாநிலத்தில், 2014-ம் ஆண்டு ரகுபர் தாஸ் முதல்வராகப் பொறுப்பேற்றபோது, அந்த மாநில அரசுக்கு ரூ. 37,593 கோடி கடன் இருந்தது. அந்தக் கடன், கடந்த ஐந்தாண்டுகளில் ரூ.85,234 கோடியாக உயந்துள்ளது. 2014-க்கு முன், 14 ஆண்டுகளில் இருந்த அனைத்து அரசுகளும் வாங்கியிருந்த மொத்தக் கடன்களைக் காட்டிலும் அதிகமான கடன்களை பா.ஜ.க அரசு வாங்கிக்குவித்துவிட்டது. இந்தக் கடனைக் குறைப்பது ஹேமந்த் சோரனுக்கு மிகப்பெரிய சவால்தான்.மேலும், ஜார்க்கண்டில் ரூ.6,000 கோடிக்கு மேல் விவசாயிகள் கடன் வாங்கியுள்ளனர். தங்களை இந்தக் கடனிலிருந்து புதிய அரசு விடுவிக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள். இதைச் சமாளிப்பதும் ஹேமந்த் சோரனுக்கு பெரிய பிரச்னையாக இருக்கும்.

2000-ம் ஆண்டில் பீகாரிலிருந்து ஜார்க்கண்ட் பிரிந்தது. இது ஓர் ‘ஏழை மாநிலம்’ என்றே பார்க்கப்படுகிறது. அங்கு, 36 சதவிகிதத்துக்கும் அதிகமான மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்கிறார்கள். மாநிலத்தின் வறுமையைப் போக்குவது ஹேமந்த் சோரனுக்குப் பெரும் சவால்.

கடந்த காலத்தில், பட்டினிச்சாவுகள் தொடர்பான செய்திகள் ஜார்க்கண்டிலிருந்து அடிக்கடி வந்தன. 2017-ம் ஆண்டு, சிம்டேகா மாநிலத்தில் சந்தோஷி என்ற 11 வயது சிறுமி பட்டினியால் மரணமடைந்தார். ஒவ்வோர் ஆண்டும் 50 லட்சம் மெட்ரிக் டன் உணவுதானியங்கள் ஜார்க்கண்ட் மாநிலத்துக்குத் தேவை. ஆனால், 40 லட்சம் மெட்ரிக் டன் உணவுதானியம்தான் அங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. மீதி 10 லட்சம் மெட்ரிக் டன் உணவுதானியப் பற்றாக்குறையைத் தீர்ப்பது, புதிய முதல்வருக்கு முன் இருக்கும் மிகப்பெரிய சவால்.

மாவோயிஸ்ட்
மாவோயிஸ்ட்

ஜார்க்கண்ட் மாநிலத்திலும் பல மாவட்டங்களில் மாவோயிஸ்ட்டுகளின் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்றாலும், இன்னும் 13 மாவட்டங்களில் மாவோயிஸ்ட்டுகளின் அச்சுறுத்தல் உள்ளது. அந்தப் பிரச்னையை எதிர்கொள்வது புதிய முதல்வருக்கு பெரும் சவாலாக இருக்கும். அதேபோல, ஜார்க்கண்ட் மாநிலத்தில் கும்பல் கொலைகளும் நடைபெற்றுள்ளன. அந்தக் கொலைகளைத் தடுத்துநிறுத்துவதும் ஹேமந்த் சோரன் அரசுக்கு முக்கியக் கடமையாக இருக்கும்.

இந்தியாவில் வேலையின்மைப் பிரச்னை மிகவும் அதிகமாக இருக்கும் 11 மாநிலங்களில் ஜார்க்கண்ட்டும் ஒன்று. வேலையின்மை அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் 5-ம் இடத்தில் இந்த மாநிலம் உள்ளது. அங்கு, ஐந்து இளைஞர்களில் ஒருவர் வேலையில்லாதவராக இருக்கிறார் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் பிரசாரத்தின்போது, “நான் ஆட்சிக்கு வந்தால், வேலையில்லா இளைஞர்கள் அனைவருக்கும் வேலை வழங்கப்படும். வேலையில்லாத இளைஞர்கள் அனைவருக்கும், வேலை கிடைக்கும் வரை வேலையில்லா கால நிவாரணம் வழங்கப்படும்” என்று வாக்குறுதி அளித்தார், ஹேமந்த் சோரன். அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவது மிகப்பெரிய சவாலாக இருக்கப்போகிறது ஹேமந்த் சோரனுக்கு.