Published:Updated:

இல்லத்தில் புகுந்தது வெள்ளம்!- வீட்டைக் காலி செய்ய சந்திரபாபு நாயுடுக்கு ஆந்திர அரசு உத்தரவு

துரை.நாகராஜன்

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தான் பதவியேற்றபோதே கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கரையோரம் உள்ள வீடுகள் பாதிக்கப்படும் என்று அறிவித்து, சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட அனைவரையும் வெளியேறுமாறு உத்தரவிட்டார்.

chandrababu naidu house
chandrababu naidu house ( indiatoday )

மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கிருஷ்ணா நதியில் அதிகமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஸ்ரீசைலம் மற்றும் நாகர்ஜூனா சாகர் ஆகிய அணைகள் நிரம்பி வழிகின்றன.

chandrababu naidu
chandrababu naidu

இதன் காரணமாக கிருஷ்ணா நதியின் இரு கரைகளிலும் வெள்ளம் வழிந்தோடுகிறது. விஜயவாடாவில் உள்ள பிரகாசம் பேரேஜ் அணையிலிருந்து தண்ணீர் அதிக அளவு வெளியேற்றப்படுகிறது. அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் இல்லத்துக்குள் புகுந்தது. முன்னரே வெள்ள எச்சரிக்கை காரணமாக கார்கள் அனைத்தும் மங்களகிரிக்குக் கொண்டு செல்லப்பட்டன.

`அன்றே எச்சரித்த ஜெகன்மோகன் ரெட்டி!' - சந்திரபாபு நாயுடுவின் வீட்டுக்குள் புகுந்த வெள்ளம்?

வீட்டின் கீழ்தளத்தில் இருந்த பொருள்கள் எல்லாம் மாடிக்குக் கொண்டு செல்லப்பட்டன. ஆனால், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வெள்ளம் வருவதற்கு முன்னரே தனது குடும்பத்தினருடன் ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

Y. S. Jaganmohan Reddy
Y. S. Jaganmohan Reddy

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தான் பதவியேற்றபோதே கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கரையோரம் உள்ள வீடுகள் பாதிக்கப்படும் என்று அறிவித்து, சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட அனைவரையும் வெளியேறுமாறு உத்தரவிட்டார். ஆனால், அதை ஏற்காத சந்திரபாபு நாயுடு, அங்கேயே தங்கியிருந்தார். தற்போது, கிருஷ்ணா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வீட்டுக்கு மாவட்ட நிர்வாகம் வீட்டைக் காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. 

உடையும் கட்சி... உலுக்கும் ஜெகன்... தப்பிப்பாரா சந்திரபாபு நாயுடு?