Published:Updated:

உடையும் கட்சி... உலுக்கும் ஜெகன்... தப்பிப்பாரா சந்திரபாபு நாயுடு?

என்.டி.ஆரின் குடும்பம், அவரைப் பழிதீர்க்க தருணம் கிடைத்துவிட்டதாகவே கருதிக்கொண்டிருக்கிறது. ஜெகன், அவரை நடுத்தெருவுக்குக் கொண்டுவர நாள்நேரம் பார்க்காமல் உழைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், `நான் மீண்டெழுவேன்’ என்று உறுதியாகச் சொல்லி வருகிறார், சந்திரபாபு.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அப்போது, திருப்பதியில் இருக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரியில் பொருளாதாரம் படித்துக்கொண்டிருந்தார், சந்திரபாபு நாயுடு. அன்று, அவருக்கு மிஞ்சிப் போனால் இருபத்தி இரண்டு வயதிருக்கலாம். ஏதோவொரு நல்ல நாளில், அந்தக் கல்லூரியில் மாணவர் தேர்தல் அறிவிக்கப்படுகிறது. அந்தப் பக்கம் நிற்பது அரசியல்பலம் வாய்ந்த பணக்கார மாணவர். இந்தப் பக்கம், `யாரை நிறுத்துவது’ என்று ஆலோசனை ஓடுகிறது. எல்லோருக்கும் அப்போது நினைவுக்கு வந்த பெயர், `நரா சந்திரபாபு நாயுடு’.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

உடனே, அவரை அணுகுகிறார்கள். ஆனால், பாபு மறுக்கிறார். `என் ஆதரவுடன் அவன் நிற்கட்டும்’ என்று இன்னொரு மாணவனைக் கைகாட்டுகிறார். அவர், கைகாட்டிய மாணவனே தேர்தலில் நிற்கிறான். தேர்தல் நாளும் நெருங்குகிறது. எதிரணியினர் பகல் நேரங்களில் பற்றவைத்த பட்டாசுபோல வேலை பார்க்கிறார்கள். ஒவ்வொரு வகுப்பறையாக ஏறியிறங்கி பிரசாரத்தைத் தீவிரப்படுத்துகிறார்கள். ஆனால், சந்திரபாபுவிடம் ஓர் அசைவும் இல்லை. அவரிடம் `நாம் என்ன செய்யப் போகிறோம்’ என்று நச்சரிக்கிறார்கள், அவரணியினர். அவர் `பொறுப்போம்’ என்றே பதிலளிக்கிறார்.

தேர்தலுக்கு முந்தைய நாள் இரவு அது. சரியாக 9 மணிக்கு ஆட்டத்தை ஆரம்பிக்கிறார், நாயுடு. மாணவர்களின் விடுதிகளுக்கும், அவர்களின் வீடுகளுக்குமே ஆள்களை அனுப்பி பிரசாரத்தை முடிக்கிறார். அடுத்த நாள், தேர்தல் நடக்கிறது. அன்று மாலையே முடிவுகளும் வெளியாகின்றன. சந்திரபாபு ஆதரித்த மாணவன், எண்ணியே பார்க்க முடியாத வாக்குவித்தியாசத்தில் வெல்கிறான். அவரணியினர் வாயடைத்துப் போகிறார்கள். `எப்படி...’ என்று நாயுடுவைச் சூழ்ந்துகொண்டு ஆச்சர்யமாகக் கேட்கிறார்கள். பாபு அவர்களைத் தீர்க்கமாகப் பார்த்து,`தேர்தல் ஒரு சூதாட்டம். நம் வெற்றியைத் தீர்மானிப்பது நாம் எடுக்கும் கடைசி கார்டுதான்’ என்கிறார்.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

இங்கே எந்தவித சந்தேகமும் இல்லாமல் சொல்லலாம்... ஆந்திரம் இதுவரை பார்த்ததிலேயே ஆகச்சிறந்த `அரசியல் சூழ்மதியாளர்’ சந்திரபாபு நாயுடு! அவருடன் ஒப்பிடும்போது, சகுனியும் சாணக்கியரும் அவருக்கு சட்டைபட்டன் போட்டுவிடும், பொடியர்கள் மட்டுமே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அடிப்படையில், அடுத்த நாள் சாப்பாட்டுக்கே வழியில்லாத குடும்பம்தான் நாயுடுவுடையது. சித்தூரில் ஓர் ஓரமாய் இருக்கும் நரவரப்பள்ளிதான் அவரது சொந்த ஊர். ஓர் இளையவர், இரண்டு இளையவள்கள் அவருக்கு. அதனால், படிப்பு ஒருபுறம்... வேலை மறுபுறமென ஓடவேண்டிய நிலையில் இருந்தார். ``காலையில் கரும்புக்கட்டோடு சந்தைக்குக் கிளம்பினால், இரவில் கைநிறைய காசோடுதான் வீட்டுக்கு வருவார்...’ என்று சொல்வார், அவரின் கடைசித்தங்கை ஹைமாவதி. ``இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் வீட்டுக்குச் சென்றுவிடுவான். கேட்டால், என் தம்பியும் தங்கைகளும் எனக்காகக் காத்திருப்பார்கள் என்று சொல்வான்” என்பார்கள், அவரின் நரவரப்பள்ளி நண்பர்கள். இப்போதும் சந்திரபாபு சங்கராந்தி கொண்டாடுவது அங்குதான், அவர்களுடன்தான்!

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

`இப்படிப்பட்ட எளிய பின்னணியில் இருந்து எழுந்துவந்த சந்திரபாபுவால் எப்படி ஆந்திரத்தை அத்தனை ஆண்டுகள் ஆளமுடிந்தது’ என்ற கேள்வி எழலாம். பதில் ஒரே வரிதான்... `அதுதான் பாபு’. அவர் முதன்முதலில் ஆந்திர சட்டமன்றத்தில் காலெடுத்துவைத்தபோது, `காலேஜ் அந்தப்பக்கம் தம்பி’ என்றே அவருக்கு வழிகாட்டினார்கள் காவலர்கள். அந்த அளவுக்கு அவர் சின்ன பையன். சந்திரபாபு, அவர்களைப் பார்த்து சிறிதாய்ச் சிரித்துவிட்டு, உள்ளே நுழைந்தார். இப்போதுவரை அவரை அங்கிருந்து வெளியே தள்ள எவராலும் முடியவில்லை.

தென்னிந்தியாவில் தி.மு.க-வுக்கு அடுத்தபடியாக அதிகம் அச்சுறுத்தலுக்கு ஆளான கட்சி தெலுங்கு தேசம்தான். ஆனால், அத்தனை தடைகளையும் தகர்த்து தெலுங்கு தேசத்தை கவசமென காத்தது, சந்திரபாபுவின் `மூணு பவுண்ட் மூளை’! ஆனால், இப்போது நிலைமை சந்திரபாபுவின் கைமீறி போய்க் கொண்டிருப்பதாகப்படுகிறது. அவரது கட்சியை கிட்கேட் சாக்லேட்போல உடைத்துத் தின்றுகொண்டிருக்கிறது, பா.ஜ.க. சந்திரபாபு செல்லும் இடமெல்லாம் செக் வைத்துவருகிறார், ஜெகன். ஆனாலும், `சிக்கல்களை மீறியெழும் குணம்கொண்டவர் சந்திரபாபு’ என்று நம்பிக்கையாக இருக்கிறார்கள், அவரின் ஆதரவாளர்கள். அது நல்நம்பிக்கைதான். `வரக்கூடிய சிக்கலை பாதிப்பாகப் பார்க்காதே, வாய்ப்பாகப் பார்’ என்பதுதான், சந்திரபாபு அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை. அவரின் 68 ஆண்டு வாழ்வெங்கும் அதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

அப்போது, `அனுராகா தேவதா’ படப்பிடிப்பில் இருந்தார் என்.டி.ராமாராவ். அவரை சந்திக்கவருகிறார், அவரின் இரண்டாவது மகன் ஜெயகிருஷ்ணா. வந்ததும் ஒரு தகவலைச் சொல்கிறார். `சந்திரபாபு என்றொருவரை அழைத்து வந்திருக்கிறேன். உங்களின் மிகப்பெரிய ரசிகர் அவர்’ என்கிறார். என்.டி.ஆர்`வரச்சொல்’ என்று சொல்லிவிட்டு நாற்காலியில் சாய்ந்து அமர்கிறார். சந்திரபாபு அப்போது காங்கிரஸ் கட்சியில் கலக்கிக்கொண்டிருந்தார். சந்திரகிரி தொகுதியில் அவர் பெற்ற வெற்றி ஆந்திரம் முழுவதும் பேசுபொருள் ஆகியிருந்தது. `அடுத்த அஞ்சையா வந்துட்டான்டா...’ என்று காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாடிக்கொண்டிருந்தனர்.

அது ஒரு வரலாற்று நாள். என்.டி.ஆர் இப்போது நிமிர்ந்து அமர்ந்திருக்கிறார். பின்னால் சலசலவென படப்பிடிப்பு சத்தம். ஜெயகிருஷ்ணாவுக்குப் பின்னால் தயங்கியபடியே வருகிறார், சந்திரபாபு. என்.டி.ஆர் விழிதூக்கிப் பார்க்கிறார். சந்திரபாபு அவரின் அருகணைந்து காலைத் தொட்டு ஆசி வாங்குகிறார். `வாழ்க... வளர்க...‘ என்று வாயாற வாழ்த்துகிறார், என்.டி.ஆர். பாவம்... இன்னும் பத்தாண்டுகள் கழித்து அதே காலை சந்திரபாபு வாரப்போகிறார் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. சந்திரபாபு அங்கிருந்து சென்றதும், ஜெயகிருஷ்ணாவை அருகே அழைக்கிறார், என்.டி.ஆர். `இவன் சாதாரணமானவனாக தெரியவில்லை...’ என்கிறார். ஜெயகிருஷ்ணா, `சரியான கணிப்பு’ என்று சிரிக்கிறார்.

என்.டி.ஆர், சந்திரபாபு நாயுடு
என்.டி.ஆர், சந்திரபாபு நாயுடு

அடுத்த சில நாள்களில், சந்திரபாபுவை அவரது வீட்டுக்கே வந்து சந்திக்கிறார், ஜெயகிருஷ்ணா. எடுத்த எடுப்பிலேயே `எங்கேனும் பெண் பார்த்துக்கொண்டிருக்கிறாயா...’ என்று கேட்கிறார். சந்திரபாபு, `அந்த எண்ணமே இதுவரை எனக்கு இல்லை’ என்கிறார். ஜெயகிருஷ்ணா `நல்லது’ என்று சிரித்துவிட்டு, `அப்படியென்றால் இனிமேல் எங்கேயும் பார்க்காதே... ‘ என்று சொல்கிறார். சந்திரபாபுவுக்கு ஒன்றும் புரியவில்லை. `ஏன்... என்ன விஷயம்’ என்று விசாரிக்கிறார். ஜெயகிருஷ்ணா மீண்டும் சிரித்து, `நீ அதிர்ஷ்டக்காரன் மச்சான்...’ என்று சொல்கிறார்.

அந்த `மச்சான்’ என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை அரைநிமிடம் கழித்தே நாயுடு புரிந்துகொள்கிறார். ஆனாலும் அவருக்குப் பெரிய மகிழ்ச்சி இல்லை. சில நிமிடம் அங்கும் இங்கும் நடக்கிறார். பிறகு திரும்பி, `எனக்கு ஒரு வாரம் நேரம் கொடுங்கள்’ என்கிறார். ஜெயகிருஷ்ணா, `எடுத்துக்கொள்...’ என்று சொல்லிவிட்டு வெளியே போகிறார். அப்புறம், அப்பாவிடமும் அம்மாவிடமும் அதைப்பற்றி ஆலோசிக்கிறார், பாபு. அவர்கள், `உனக்குப் பிடித்தால் செய்துகொள்’ என்கிறார்கள். `சரி... அவர்களுக்கு சம்மதம் சொல்லிவருகிறேன்’ என்று எழுந்த சந்திரபாபு, வெளியே செல்ல வாசற்கதவை திறந்தார். வரலாறு, அவரை `நல்வரவு நாயுடு’ என்று வரவேற்றது!

சந்திரபாபு நாயுடு, புவனேஸ்வரி
சந்திரபாபு நாயுடு, புவனேஸ்வரி

சந்திரபாபு நாயுடுவின் திருமணம் இங்கே சென்னையில்தான் நடந்தது. தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்கள், முக்கிய அரசியல்வாதிகள் என அன்றைக்கு சென்னையே குலுங்கியது. அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர்தான் சிறப்பு விருந்தினர். சந்திரபாபு கொஞ்சம் அசெளகர்யமாகவே மேடையில் நின்றுகொண்டிருந்தார். பெரிய வீட்டுக்கு மருமகனாகப்போகும் எளியவன் எல்லோருக்கும் இருக்கும் தயக்கம், அவரிடமும் இருந்தது. அப்போது, வாசலில் ஏதோ சத்தம் கேட்கிறது. சந்திரபாபு திரும்பிப் பார்க்கிறார். அவரின் அப்பாவை பிடித்துத் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள், பாதுகாவலர்கள் சிலர். சந்திரபாபு பாய்ந்திறங்கி வந்து அப்பாவை மீட்கிறார். கோபத்துடன், `இவர் என் அப்பா மடையர்களே...’ என்று எச்சரிக்கிறார். பாதுகாவலர்கள் பயந்து விலகுகிறார்கள். எந்த அப்பாவை அவர்கள் கீழே தள்ளினார்களோ, அதே அப்பாவை மேடையில் ஏற்றி அவர் முன்பே என்.டி.ஆர் மகள் புவனேஷ்வரிக்கு மாலையிட்டார் பாபு.

அதற்குப்பிறகு, சந்திரபாபு பார்த்த இடமெல்லாம் பளிங்கென பளபளத்தது, தொட்ட பொருளெல்லாம் தங்கமென மினுமினுத்தது.1984 சட்டமன்றத் தேர்தலில், சந்திரகிரி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார், அவர். ஆனால், தெலுங்கு தேசம் வேட்பாளரிடம் மிகமோசமான வாக்கு வித்தியாசத்தில் தோற்கிறார். அந்த வேட்பாளர் வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியே, `இப்படி ஆகிப்போச்சே பாபு... இனிமே என்ன செய்யப்போறே...’ என்று எகத்தாளம் பேசுகிறார். சந்திரபாபு `வாழ்த்துகள் சகோ...’ என்று மட்டும் சொல்லிவிட்டு, வீடு திரும்புகிறார்.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

அடுத்தநாள் ஒரு ட்விஸ்ட். எந்த தெலுங்கு தேசத்திடம் தோற்றாரோ, அதே தெலுங்கு தேசத்தில் இணைகிறார், சந்திரபாபு. கட்சியிலும் முக்கியப் பொறுப்பை அடைகிறார். அந்த சந்திரகிரி எம்.எல்.ஏ அன்று மாலையே சந்திரபாபுவைப் பார்த்து மன்னிப்பு கேட்கிறார். அவர் தோளைத்தட்டி, `கவலைப்படாதே. என் இலக்கு உன் இடமல்ல’ என்று சொல்லிவிட்டு சந்திரபாபு பார்த்த இடத்தில், என்.டி.ஆர் படம் தொங்கிக்கொண்டிருந்தது!

அதே 1984-ம் ஆண்டுதான் என்.டி.ஆரை கட்டம் கட்டினார் இந்திரா. அடுத்த சில நாள்களில், அறுவை சிகிச்சைக்காக என்.டி.ஆர் அமெரிக்கா போக, அவரின் நிதியமைச்சர் பாஸ்கர் ராவை பகடையாக உருட்ட ஆரம்பிக்கிறார். விஷயம் அமெரிக்காவில் இருந்த என்.டி.ஆர் காதுகளுக்குச் செல்கிறது. குடும்ப உறுப்பினர்கள் அவரைச் சுற்றி நின்று நிலையை எடுத்துச் சொல்கிறார்கள். `பாஸ்கர் ராவுக்குப் பின்னால் இந்திரா இருக்கிறார். இரவோடு இரவாக ஆளுநரை மாற்றி அவருக்கு பதவிப் பிரமாணம் நடந்திருக்கிறது’ என்கிறார்கள். என்.டி.ஆர் அலட்டிக்கொள்ளாமல் அவர்களைப் பார்க்கிறார். `என்ன நடந்தாலும் ஜெயம் நமக்கே’ என்கிறார். அவர்கள் புரியாமல், `எப்படி... ஆட்சியே அவர்கள் பக்கம் இருக்கிறதே’ என்று சொல்கிறார்கள். என்.டி.ஆர் அதே அலட்டல் பார்வையுடன், `நம் பக்கம் பாபு இருக்கிறான்...’ என்கிறார்.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

அடுத்தென்ன? களமிறங்கினார் சந்திரபாபு நாயுடு. கட்சியில் மிச்சமீதியிருந்த தலைவர்களை வரவழைத்தார். வந்தவர்களுக்கு கால்கள் நிலைகொள்ளவில்லை. `என்.டி.ஆர் ஆந்திரா வந்துசேர இன்னும் ஆறு நாள்கள்தான் இருக்கிறது. அதற்குள் எப்படி அத்தனை எம்.எல்.ஏ-க்களையும் நம் பக்கம் இழுப்பது...’ என்று கேட்கிறார்கள். பாபு, `ஆறு நாள்களே அதிகம்தான்... மூன்று நாளில் முடிக்கிறேன்’ என்று வாக்கு கொடுக்கிறார். அவர்கள் ஒருவரை ஒருவர் திரும்பிப் பார்த்துவிட்டு, `சரி’ என்று சொல்லிப் போகிறார்கள்.

அடுத்த இரண்டே நாள்களில் கிட்டத்தட்ட 160 எம்.எல்.ஏ-க்களை வைசிராய் ஹோட்டலில் பத்திரப்படுத்திவிட்டார் பாபு. ஆனாலும், கட்சித்தலைவர்கள் சிலருக்கு இன்னும் நம்பிக்கை இல்லை. `எப்படியோ வந்துவிட்டார்கள். ஆனால், இவர்கள் நமக்கு ஆதரவாகதான் வாக்களிப்பார்கள் என்று எப்படி நம்ப முடியும்’ என்று கேட்கிறார்கள். சந்திரபாபு `அளிப்பார்கள்’ என்று சொல்லிவிட்டு, சில நிர்வாகிகளை அருகே அழைக்கிறார். அவர்களிடம், `எம்.எல்.ஏ-க்கள் எல்லோரையும் அந்த திரையரங்கு அறைக்கு கூட்டிச் செல்லுங்கள். என்.டி.ஆர் நடித்த படங்களை அவர்களுக்கு விடாமல் போட்டுக் காட்டுங்கள். முக்கியமாக, மாயாபஜாரும் தானவீர சூர கர்ணாவும்...’ என்கிறார்.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

நான்காம் நாள், பாஸ்கர் ராவின் காவல்துறை வைசிராய் ஹோட்டலை சுத்திப் போட்டது. ’அங்கிருக்கும் எம்.எல்.ஏ-க்களை இழுத்து வரவேண்டும்’ என்பது அவர்களுக்கு பாஸ்கர் ராவ் கொடுத்த அசைன்மென்ட். அவர்களும் அங்கே வந்தார்கள். ஆனால், `எல்லோரும் அவர்கள் இஷ்டப்படியே இங்கே இருக்கிறார்கள். வேண்டுமானால் நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்’ என்று கை காண்பித்தார் பாபு. எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ஒரே குரலில், `ஆவுனன்டி... என்.டி.ஆர் மா தேவுடு...’ என்று உருகினர். அங்கே நடந்ததை அறிந்து பாஸ்கர் ராவுக்கு கண்ணீரே வந்துவிடுகிறது. `நான் புள்ளிவைக்க கோலப்பொடியைத் தேடினால், அவன் கோலத்தையே முடித்துவிட்டு பூப்பறிக்கப் போய் நிற்கிறானே...’ என்று புலம்புகிறார்.

செய்தி இந்திராவுக்கும் செல்கிறது. அவர் உடைந்து உட்காருகிறார். `இந்த நாடே என் கையில் இருக்கிறது. ஆனால், ஒரு மாநிலக்கட்சி எப்படி என்னை வீழ்த்துகிறது...’ என்று கேள்வி எழுப்புகிறார். அருகிருந்த அதிகாரிகள் எதுவும் சொல்லாமல் நிற்கிறார்கள். இந்திரா அவர்களைப் பார்த்து `சொல்லுங்கள்... ஒரு சாதாரண நடிகனால் எப்படி இப்படி அரசியல் செய்யமுடிகிறது’ என்று கேட்கிறார். அதிகாரிகள் தயக்கத்துடன், ‘ Madam, there is one backroom boy...' என்று ஆரம்பிக்கிறார்கள். இந்திரா தலைதூக்கி `who?' என்று ஆவேசமாக கத்துகிறார். அதிகாரிகள் அமைதியாகச் சொல்கிறார்கள், ’The name is Chandrababu Naidu'!

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

இதே மாயாஜாலத்தை பின்னொரு முறையும் நிறைவேற்றிக் காட்டினார், நாயுடு. லட்சுமி சிவபார்வதி தெலுங்கு தேசத்தை ஆட்டிப்படைக்க ஆரம்பித்திருந்த நேரத்தில் நடந்தது, அது. அப்போதும், எம்.எல்.ஏ-க்களை அதே வைசிராய் ஹோட்டலில் தான் பத்திரப்படுத்தினார் நாயுடு. என்.டி.ஆரே நேரில் வந்து பேசிப் பார்த்தும் எந்தப் பலனுமில்லை. ஆளுநரிடம் அவர் பெரும்பான்மையை நிரூபிக்க போய்நின்றபோது, அவர் பின்னால் வெறும் 28 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே நின்றிருந்தனர். விரக்தியில், `என்னை ஷாஜகானாக்கிவிட்டான் அந்த அவுரங்கசீப்’ என்று பேட்டிக்கொடுத்துவிட்டு அரசியலை விட்டே ஒதுங்கினார், என்.டி.ஆர். `இறுதியில் இலக்கை அடைந்தேவிட்டான் நாயுடு’ என்று, நரவரப்பள்ளியில் பட்டாசுகள் வெடித்தன. 1995 செப்டம்பர் 10-ம் தேதி, `நரா சந்திரபாபு நாயுடு அனே நேனு’ என்று சொல்லி, ஆந்திரத்தின் முதல்வராக முதன்முறையாக பதவியேற்றார் நாயுடு. அன்றிலிருந்து இன்றுவரை அவரைச் சுற்றியே ஆந்திர அரசியல் சுழல்கிறது.

சரி... நாயுடுவின் இன்றைய நிலைக்கு வருவோம். அவர் ஏன் தோற்றார் என்பதற்கு நிறைய காரணங்களை நிறைய பேர் சொல்லிவிட்டார்கள். அமராவதி உருவாக்கத்தில் நிகழ்ந்த தவறுகள், மாநிலமெங்கும் தெலுங்குதேச குண்டர்கள் நடத்திய ரவுடி ராஜ்ஜியம் என்று நிறைய சொல்லலாம். ஆனால், சந்திரபாபு வீழ்ந்ததற்கு ஒரு அடிப்படைக் காரணம் இருக்கிறது... நரவரப் பள்ளியில் `விநாயகா சங்கம்’ ஆரம்பித்த காலத்தில் அவரிடம் இருந்த சேவை மனப்பான்மை, அவரைவிட்டு முற்றிலும் விலகியதன் விளைவே அவரது வீழ்ச்சி.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

ஒரு காலத்தில், நாலு கட்டு கரும்பு விற்று நாலணா காசு பார்த்த சந்திரபாபுவின் இன்றைய சொத்து மதிப்பு என்ன தெரியுமா... 177 கோடி ரூபாய்! கருணாநிதி மூழ்கிய அதே ஆற்றின் கரையில்தான் அமர்ந்திருக்கிறார், சந்திரபாபு நாயுடுவும். அதே குடும்ப அரசியல், அதே அதிகார துஷ்பிரயோகம், அதே ஊழல் குற்றச்சாட்டுகள்! இதிலிருந்து சந்திரபாபு மீள வேண்டுமானால், மீண்டும் அதே சேவகன் சந்திரபாபுவாக அவர் எழுந்துவருவது மட்டுமே, ஒரே வழி.

உண்மையாகவே, சந்திரபாபு இதுவரை பார்த்தே இராத சங்கடங்களை இனிமேல் பார்க்க இருக்கிறார். என்.டி.ஆரின் குடும்பம் அவரை பழிதீர்க்க தருணம் கிடைத்துவிட்டதாகவே கருதிக்கொண்டிருக்கிறது. ஜெகன், அவரை நடுத்தெருவுக்கு கொண்டுவர நாள்நேரம் பார்க்காமல் உழைத்துக் கொண்டிருக்கிறார். `நாயுடு அரசியலின் நாள்கள் எண்ணப்படுகின்றன’ என்றே ஆந்திராவில் பேசிக்கொள்கிறார்கள். ஆனால், `நான் மீண்டெழுவேன்’ என்று உறுதியாகச் சொல்லிவருகிறார் நாயுடு. ஆம், அவர் மீண்டெழக் கூடியவர்தான். அவரைப் பற்றிய ஆங்கிலக்கட்டுரைகள் அனைத்திலும் ஒரு வார்த்தை மறக்காமல் சொல்லப்படும்... ‘Naidu is known to bounce back'!

Hope, he will do it again!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு