Published:Updated:

2024 தேர்தல்: பாஜக-வை வீழ்த்த பிரசாந்த் கிஷோருடன் இணைந்த சந்திரசேகர் ராவ்! - 300 கோடிக்கு ஒப்பந்தமா?

சந்திரசேகர் ராவ்

வரும் 2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜக-வை வீழ்த்த பிரசாந்த் கிஷோருடன் தெலங்கானா முதல்வர் ஒப்பந்தம் செய்துகொண்டிருப்பதாகச் செய்தி வெளியாகியிருக்கிறது.

2024 தேர்தல்: பாஜக-வை வீழ்த்த பிரசாந்த் கிஷோருடன் இணைந்த சந்திரசேகர் ராவ்! - 300 கோடிக்கு ஒப்பந்தமா?

வரும் 2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜக-வை வீழ்த்த பிரசாந்த் கிஷோருடன் தெலங்கானா முதல்வர் ஒப்பந்தம் செய்துகொண்டிருப்பதாகச் செய்தி வெளியாகியிருக்கிறது.

Published:Updated:
சந்திரசேகர் ராவ்

2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜக-வுக்கு எதிராக மாற்று அணியை உருவாக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆகியோர் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். இருவருமே தங்களை மாற்றுத் தலைவராக முன்னிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கின்றனர். மம்தா பானர்ஜி காங்கிரஸ் இல்லாத மாற்று அணியை உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதற்காக மம்தா பானர்ஜி, சரத் பவார் உட்பட எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து பேசியுள்ளார். இதே போன்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவும் மும்பை வந்து மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, சரத் பவார் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். அதோடு மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்களை ஹைதராபாத்துக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்திவரும் சந்திரசேகர் ராவ் தனது திட்டத்தைச் செயல்படுத்த அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை நியமித்திருப்பதாகத் தெரிகிறது. கடந்த மாதம் பிரசாந்த் கிஷோர் ஹைதராபாத் வந்து சந்திரசேகர் ராவின் பண்ணை வீட்டில் அவரைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது தேசிய அரசியலில் மாற்றத்தைக் கொண்டுவருவது குறித்து இருவரும் பேசியதாகத் தெரிகிறது. அதோடு 2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜக-வை எதிர்த்து மாற்று அணியை ஏற்படுத்த சந்திரசேகர் ராவ் பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. மொத்தம் ரூ.300 கோடி அளவுக்கு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஆனால் இதை சந்திரசேகர் ராவ் மறுத்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து சந்திரசேகர் ராவ் கூறுகையில், ``தேசிய அளவில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக பிரசாந்த் கிஷோருடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறேன். பிரசாந்த் கிஷோர் என்னுடன் சேர்ந்து பணியாற்றிவருகிறார். இதில் யாருக்குப் பிரச்னை... பிரசாந்த் கிஷோரை ஏன் வெடிகுண்டாகப் பார்க்கிறார்கள்... அவர்கள் ஏன் கூச்சலிடுகின்றனர்?” என்றார்.

பிரசாந்த் கிஷோருடன் ரூ.300 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறதா என்று சந்திரசேகர் ராவிடம் கேட்டதற்கு, ``பிரசாந்த் கிஷோர் எனது ஏழு ஆண்டுக்கால நண்பர். அவர் பணத்துக்காக வேலை செய்யக்கூடியவர் கிடையாது. பணம் கொடுத்து வேலை வாங்கும் தொழிலாளியும் அவர் கிடையாது. நாட்டுக்காக பிரசாந்த் கிஷோர் அளித்திருக்கும் பங்களிப்பை யாரும் புரிந்துகொள்ளவில்லை” என்று தெரிவித்திருந்தார்.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

பிரதமர் மோடியுடன் ஆரம்பத்தில் இணக்கமாக இருந்த சந்திரசேகர் ராவ், சமீபகாலமாக கடுமையான மோதல் போக்கைக் கடைப்பிடித்துவருகிறார். சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஹைதராபாத் வந்திருந்தபோது உடல்நலம் சரியில்லை என்று கூறி அவரின் நிகழ்ச்சியில் பங்கேற்க மறுத்துவிட்டார். அதோடு பிரதமர் நரேந்திர மோடியை ராவ் கடுமையாகச் சாடியிருந்தார்.

``தேர்தல் என்றால் ரவீந்திரநாத் தாகூர் போன்று தாடி வைத்துக்கொள்கிறார். தமிழ்நாடு சென்றால் லுங்கி கட்டிக்கொள்கிறார். பஞ்சாப் தேர்தல் என்றால் சீக்கியர்கள் போன்று தலைப்பாகை அணிந்துகொள்கிறார். மணிப்பூருக்குச் சென்றால் அங்குள்ள தொப்பியும், உத்தரகாண்ட் சென்றால் அங்கு மற்றொரு தொப்பியும் அணிந்துகொள்கிறார். இதைப் போன்று எத்தனை தொப்பிகள். இது போன்ற செயல்களால் நாடு என்ன பெற்றது?” என்று கேட்டார். தெலங்கானாவுக்கு அடுத்த ஆண்டு, டிசம்பர் மாதம் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலுக்காக பிரசாந்த் கிஷோருடன் சந்திரசேகர் ராவ் ஹைதராபாத் சந்திப்பின்போது ஒப்பந்தம் செய்துகொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism