Published:Updated:

பா.ஜ.க-வின் ‘மிஷன் சௌத்’ திட்டம்... முதல் குறி தெலங்கானா! - சமாளிப்பாரா சந்திரசேகர் ராவ்?

சந்திரசேகர் ராவ்
பிரீமியம் ஸ்டோரி
சந்திரசேகர் ராவ்

தொகுதிவாரியாகச் சென்று மக்களைச் சந்தித்து, டி.ஆர்.எஸ் அரசின் சாதனைகளையும், பா.ஜ.க அரசின் சறுக்கல்களையும் பட்டியலிடுவதையும் திட்டமாக வைத்திருக்கிறார்

பா.ஜ.க-வின் ‘மிஷன் சௌத்’ திட்டம்... முதல் குறி தெலங்கானா! - சமாளிப்பாரா சந்திரசேகர் ராவ்?

தொகுதிவாரியாகச் சென்று மக்களைச் சந்தித்து, டி.ஆர்.எஸ் அரசின் சாதனைகளையும், பா.ஜ.க அரசின் சறுக்கல்களையும் பட்டியலிடுவதையும் திட்டமாக வைத்திருக்கிறார்

Published:Updated:
சந்திரசேகர் ராவ்
பிரீமியம் ஸ்டோரி
சந்திரசேகர் ராவ்

`மிஷன் செளத்’ என்ற பெயரில் தென்னிந்திய மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறது பா.ஜ.க. இதற்கான முதல் கூட்டம் கடந்த ஜூலை மாதத்தில், தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற்றது. கடந்த ஐந்து ஆண்டுகளில், டெல்லி அல்லாத வேறு இடத்தில் நடத்தப்பட்ட பா.ஜ.க தேசிய நிர்வாகிகள் கூட்டம் இதுதான். `மிஷன் செளத்’தின் முதல் கூட்டம் நடத்தப்பட்ட தெலங்கானா மாநிலம்தான், இந்தத் திட்டத்தில் பா.ஜ.க-வின் முதல் இலக்காக இருக்கிறது. தெலங்கானா சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் இருக்கும் நிலையில், இப்போதே அதிரடியாகக் களமிறங்கிவிட்டது பா.ஜ.க. இந்த அதிரடிகளை, ‘தெலங்கானா ராஷ்டிர சமிதி’ கட்சியின் தலைவரும், அந்த மாநிலத்தின் முதல்வருமான சந்திரசேகர் ராவ் எப்படிச் சமாளிக்கப்போகிறார்?

மிஷன் செளத்!

வட மாநிலங்கள், வட கிழக்கு மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க., தென் மாநிலங்களில் (கர்நாடகாவைத் தவிர) மட்டும் அரியணை ஏற முடியாமல் இருந்துவருகிறது. இதை மனதில்வைத்து பா.ஜ.க தொடங்கிய திட்டம்தான் `மிஷன் செளத்.’ இந்தத் திட்டம் தொடர்பான கூட்டத்தில், ``இந்தியாவில் அடுத்து 30, 40 ஆண்டுகள் பா.ஜ.க-வின் ராஜ்ஜியம்தான். நமது அடுத்த இலக்கு தென்னிந்தியாதான். குறிப்பாக, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவில் விரைவில் பா.ஜ.க ஆட்சிக்கு வரும்’’ என்று நிர்வாகி களிடையே முழங்கினார் அமித் ஷா. அந்தக் கூட்டம் முடிந்த மூன்று நாள்களில், தென் மாநிலத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு ராஜ்ய சபா நியமன எம்.பி பதவிகளை ஒதுக்கியது பா.ஜ.க. கேரளாவைச் சேர்ந்த வீராங்கனை பி.டி.உஷா, தமிழ்நாட்டைச் சேர்ந்த இசையமைப்பாளர் இளையராஜா, ஆந்திராவைச் சேர்ந்த திரைக்கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத், கர்நாடகாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வீரேந்திர ஹெக்டே ஆகியோர்தான் அந்த நால்வர்.

பா.ஜ.க-வின் ‘மிஷன் சௌத்’ திட்டம்... முதல் குறி தெலங்கானா! - சமாளிப்பாரா சந்திரசேகர் ராவ்?

நான்கு தென் மாநிலங்களில் முதல் இலக்காக, அடுத்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவிருக்கும் தெலங்கானாவைத் தேர்ந்தெடுத்திருக்கிறது பா.ஜ.க. தொடர்ச்சியாக இரண்டாவது முறை ஆட்சியில் அமர்ந்திருக்கும் கே.சி.ஆர் அரசு மீதான அதிருப்தியைப் பயன்படுத்தி, அங்கு ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற திட்டத்திலிருக்கிறது. மே, ஜூலை மாதங்களில் தெலங்கானா வந்த பிரதமர் மோடி, கே.சி.ஆர் தன் மகனுக்கும் மகளுக்கும் அரசியல் பதவிகளை வழங்கியிருப்பதைச் சுட்டிக்காட்டி, `தெலங்கானா வாரிசு அரசியலால் சீரழிந்துவருகிறது’ என்று விமர்சித்தார்.

சினிமாவும் அரசியலும்..!

தொடர்ந்து, ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத்துக்கு வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்-ஐ தனியாகச் சந்தித்துப் பேசினார். `ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் நடிப்பு குறித்து பாராட்டத்தான் இந்தச் சந்திப்பு என பா.ஜ.க தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால், ``தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும், முன்னாள் ஆந்திர முதல்வருமான என்.டி.ஆரின் பேரன்தான் ஜூனியர் என்.டி.ஆர். தற்போது தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராக இருக்கும் சந்திரபாபு நாயுடு, ஜூனியர் என்.டி.ஆரின் அத்தையைத்தான் திருமணம் செய்திருக்கிறார். எனவே, அந்தக் கட்சியோடு விட்டுப்போன கூட்டணியை அடுத்த தேர்தலுக்குள் சரிக்கட்டவே, இந்தச் சந்திப்பு நிகழ்ந்திருக்க வேண்டும். 2009-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சிக்காகத் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார் ஜூனியர் என்.டி.ஆர். அதன் பிறகு, அரசியலைவிட்டு விலகியிருக்கும் அவரைத் தற்போது அமித் ஷா சந்தித்ததன் மூலம், அவருடைய ரசிகர்களின் கவனத்தை பா.ஜ.க பக்கம் திருப்புவது ஒரு திட்டமாக இருந்திருக்கலாம்’’ என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

இதைத் தொடர்ந்து தெலுங்கு திரையுலகிலுள்ள இளம் நடிகரான நிதின், ஹைதராபாத்தில் வசிக்கும் கிரிக்கெட்டரான மிதாலி ராஜ் ஆகியோரைச் சந்தித்தார் பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா. தொடர்ந்து, தெலங்கானாவிலுள்ள நட்சத்திரங்களைச் சந்திக்கும் திட்டங்களை பா.ஜ.க-வினர் வைத்திருப்பதாகத் தெரிகிறது. இந்த நிலையில், ஹைதராபாத்தில் நடக்கவிருந்த பாலிவுட் படமான `பிரம்மாஸ்த்ரா’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்கு, விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களைக் காரணம் காட்டி, அரசு பாதுகாப்பு தர மறுக்க, அந்த நிகழ்ச்சி ரத்துசெய்யப்பட்டிருக்கிறது. ``இந்த நிகழ்ச்சியில், ஜூனியர் என்.டி.ஆர் கலந்துகொள்வதால்தான் கே.சி.ஆர் அரசு அனுமதி மறுத்துவிட்டது. இந்த நிகழ்வு ஊருக்கு வெளியில் நடக்கிறது; அதுவும் பத்திரிகை வைத்திருப்பவர்கள் மட்டுமே உள்ளே வர முடியும். இப்படியான நிகழ்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதில் நிச்சயம் அரசியல் இருக்கிறது’’ என்கின்றனர் பா.ஜ.க-வினர்.

சந்திரசேகர் ராவ்
சந்திரசேகர் ராவ்

சமாளிப்பாரா சந்திரசேகர் ராவ்!

2020 ஹைதராபாத் உள்ளாட்சித் தேர்தலில் டி.ஆர்.எஸ் கட்சிக்கு இணையாகக் கிடைத்த வெற்றி, 2021 ஹுஸுராபாத் (Huzurabad) இடைத்தேர்தல் வெற்றி உள்ளிட்டவற்றால் தெலங்கானாவில் உற்சாகத்துடன் வேலை செய்துவருகிறது பா.ஜ.க. அங்குள்ள 119 தொகுதிகளுக்கும் மத்திய அமைச்சர்கள், தேசிய நிர்வாகிகள் நேரில் சென்று ஆய்வுசெய்தது பா.ஜ.க-வின் மைலேஜை அதிகரித்திருக்கிறது. பா.ஜ.க-வைச் சமாளிக்க கே.சி.ஆர் என்னவெல்லாம் செய்கிறார் என்பது குறித்து தெலங்கானா அரசியல் நோக்கர்கள், ``இந்தியா முழுவதும் தனக்கு செல்வாக்கு இருப்பதாகக் காட்டிக்கொள்ளவும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வைத் தோல்வியடையச் செய்யவும்தான் தேசியத் தலைவர்களை அடிக்கடி நேரில் சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் கே.சி.ஆர். மேலும், தொகுதிவாரியாகச் சென்று மக்களைச் சந்தித்து, டி.ஆர்.எஸ் அரசின் சாதனைகளையும், பா.ஜ.க அரசின் சறுக்கல்களையும் பட்டியலிடுவதையும் திட்டமாக வைத்திருக்கிறார். மத்திய பா.ஜ.க அரசின் தோல்விகளையும், அதனால் தெலங்கானாவின் வளர்ச்சியில் ஏற்பட்ட பாதிப்புகளையும் தொகுத்து புத்தகமாக வெளியிடவும் திட்டமிட்டுவருகிறார். பா.ஜ.க-வை ஓரங்கட்ட, ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியுடன் நல்லுறவைப் பேணிவருகிறார். `2024-நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க அல்லாத அரசு ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்’ என்று அறிவித்து இலவசங்கள் பக்கமும் சாயத் தொடங்கியிருக்கிறார்’’ என்கின்றனர்.

மொத்தமுள்ள 119 தொகுதிகளில், 100 தொகுதிகளைக் கையில் வைத்திருக்கும் டி.ஆர்.எஸ் கட்சியை, தெலங்கானாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் பெற்ற வளர்ச்சியால் அச்சுறுத்தி வருகிறது பா.ஜ.க. இந்த அச்சுறுத்தலிலிருந்து சந்திரசேகர் ராவ், டி.ஆர்.எஸ்-ஸை எப்படி மீட்டெடுத்துக் கரை சேர்க்கப்போகிறார் என்பதை, அவரது அடுத்தடுத்த காய்நகர்த்தல்கள்தான் முடிவுசெய்யும்!