Published:Updated:

`லிஸ்ட் ரெடி; ஆனால், கொரோனாவால் லேட்!’ - அ.தி.மு.க மா.செ-க்கள் கலக்கம்

அதிமுக தலைமை அலுவலகம்
அதிமுக தலைமை அலுவலகம்

சட்டசபை, உள்ளாட்சித் தேர்தலை கருத்தில் கொண்டு அ.தி.மு.க-வில் மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகின்றன. அதற்கான லிஸ்ட் ரெடியான நேரத்தில் கொரோனா பாதிப்பால் பட்டியலை வெளியிட காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு கட்சியையும் ஆட்சியையும் ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து செயல்பட்டுவருகின்றனர். ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அடிக்கடி அமைச்சரவை மாற்றங்கள் நடக்கும். குறிப்பாக அமாவாசையில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதனால் கட்சி நிர்வாகிகள் முதல் அமைச்சர்கள் வரை ஒருவித கலக்கத்திலேயே இருப்பார்கள்.

ஜெயலலிதா
ஜெயலலிதா
``அமைச்சர்கள் முதல் மாவட்டச் செயலாளர்கள் வரை...'' - எடப்பாடி எடுக்கப் போகும் பிரம்மாஸ்திரம்!

நிர்வாகிகள் முதல் அமைச்சர்கள்வரை செய்த தவறுகள் குறித்த ரகசிய கோப்புகள் போயஸ் கார்டனுக்குச் சென்ற வண்ணம் இருக்கும். தமிழக காவல்துறையின் உளவுத்துறையும் உடனுக்குடன் ரிப்போர்ட்களைக் கொடுத்துக்கொண்டே இருக்கும். புகார்கள், உளவுத்துறை ரிப்போர்ட் அடிப்படையில் ஜெயலலிதா அதிரடி நடவடிக்கைகளை எடுப்பதுண்டு. ஆனால், இன்று நிலைமை அப்படியல்ல. அமைச்சரவையில் அடிக்கடி மாற்றங்கள் இல்லை. நிர்வாகிகள் பெரியளவில் மாற்றப்படுவதில்லை. கட்சிக்குள் கோஷ்டி பூசல் நிலவினாலும் ஜெயலலிதா பாணியில் கட்சியையும் ஆட்சியையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் நடத்திவருகின்றனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஜெயலலிதாவைப் போல முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய அமைச்சரவையிலிருந்து 2019-ல் அமைச்சர் மணிகண்டனை அதிரடியாக நீக்கினார். அதோடு சில நிர்வாகிகளின் பதவிகளும் பறிக்கப்பட்டன. அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் மாவட்டச் செயலாளர் பதவி சமீபத்தில் பறிக்கப்பட்டது. அப்போதெல்லாம் கட்சியில் ஏற்பட்ட சலசலப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமாளித்தார். ஜெயலலிதாவின் தைரியம் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வந்துவிட்டதாக கட்சியினர் கருதினர். இரட்டை தலைமையில் கட்சி செயல்படுவதால் எந்த நடவடிக்கையையும் உடனடியாக எடுக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அந்த விமர்சனத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து வேட்பாளர்கள் தேர்வு முதல் கட்சி ரீதியான நடவடிக்கைகள் வரை அதிரடி காட்டிவருகின்றனர்.

`சந்தோஷமாகத்தான் தாலி கட்டினான்... ஆனால்?' - மணமகளுக்கு நேர்ந்த கொடூரம்; விபரீத முடிவெடுத்த மணமகன்

அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி அ.தி.மு.க-வுக்கு கிடைக்கவில்லை. மாநகராட்சிகளுக்கும் நகராட்சிகளுக்கும் பேரூராட்சிகளுக்கும் இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை. சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தலுக்கான வியூகத்தை அ.தி.மு.க சில மாதங்களுக்கு முன்பே தொடங்கியிருந்தது. உள்ளாட்சித் தேர்தலின் தோல்விக்கு என்ன காரணம் என ஆலோசித்தபோது சில மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் மீது கடும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அதனால் கட்சியை வலுப்படுத்தவும் தேர்தலுக்கு ஆயத்தமாகவும் மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கட்சித் தலைமை முடிவு செய்தது. மேலும், சில மாவட்டச் செயலாளர்களிடமிருந்து பதவியைப் பறிக்கவும் கட்சித் தலைமை ஆலோசித்தது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தலைமைக் கழக நிர்வாகி ஒருவர், ``கட்சியின் நிர்வாக வசதிக்காக மாவட்டங்களைப் பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் கூடுதலாக மாவட்டச் செயலாளர் பதவி உருவாகும். அதன்மூலம் கட்சியினருக்குப் பதவிகளை வழங்க முடியும். இன்னும் சிலர் நீண்ட காலமாக மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்துவருகின்றனர். இளைஞர்களுக்கும் சிறுபான்மைப் பிரிவினருக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதியவர்களுக்கு பதவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உளவுத்துறை கொடுத்துள்ள ரிப்போர்ட் அடிப்படையில் கட்சிக்காக உழைத்த தொண்டனுக்கு வாய்ப்பளிக்க கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது.

 முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சில மாவட்டச் செயலாளர்களின் பதவி பறிக்கப்படுவதாக வெளியான தகவலால் சம்பந்தப்பட்டவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் கலக்கத்தில் உள்ளனர். மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் தயாரான நேரத்தில்தான் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் ஏற்பட்டது. அதனால் அந்தப் பட்டியலை வெளியிடவில்லை" என்றார்.

பட்டியல் எப்போது வெளியிடப்படும் என்ற ஆவலில் அ.தி.மு.க தொண்டர்கள், நிர்வாகிகள் உள்ளார்களாம்!

அடுத்த கட்டுரைக்கு