Published:Updated:

மகாராஷ்டிரா: 100 கோடி லஞ்சம்; முன்னாள் அமைச்சர்மீது 7,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!

அனில் தேஷ்முக்
News
அனில் தேஷ்முக்

மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்குக்கு எதிராக அமலாக்கப் பிரிவு 7,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது.

மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் லஞ்சப் புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக பரம்பீர் சிங் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்குக் கடிதம் எழுதினார். அனில் தேஷ்முக் போலீஸ் அதிகாரிகளிடம் மும்பையிலுள்ள பீர் பார்கள் மற்றும் ஹோட்டல்களில் ஒவ்வொரு மாதமும் ரூ.100 கோடி அளவுக்கு மாமூல் வசூலித்துக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். போலீஸ் அதிகாரி சச்சின் வாஸ் என்பவர் மூலம் இந்த மாமூல் பணத்தை அனில் தேஷ்முக் வசூலித்ததாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகார் குறித்து சி.பி.ஐ-யும் அமலாக்கப் பிரிவும் தனித்தனியாக விசாரணை நடத்திவந்தன். இதில் விசாரணைக்கு ஆஜராகும்படி கூறி அமலாக்கப் பிரிவு அனில் தேஷ்முக்குக்குப் பலமுறை சம்மன் அனுப்பியது. இறுதியாக அவர் விசாரணைக்கு ஆஜராக வந்த நவம்பர் ஒன்றாம் தேதி அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அனில் தேஷ்முக்கைக் கைதுசெய்தனர்.

அனில் தேஷ்முக்
அனில் தேஷ்முக்

இதுவரை ஜாமீன்கூட கேட்காமல் தொடர்ந்து சிறையில் இருந்துவருகிறார். இந்த நிலையில் அமலாக்கப் பிரிவு, அனில் தேஷ்முக்குக்கு எதிராக நடத்திவரும் பணமோசடி வழக்கில் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. 7,000 பக்கங்கள்கொண்ட இந்தக் குற்றப்பத்திரிகையில் அனில் தேஷ்முக்கும், அவர் மகன்களும் பண மோசடிக்காக 27 கம்பெனிகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் என்றும், லஞ்சப் பணத்தை ஹவாலா முறையில் டெல்லியிலுள்ள கம்பெனிக்கு அனுப்பி அங்கிருந்து நன்கொடையாக தங்கள் தொண்டு நிறுவனத்துக்குப் பெற்றிருக்கின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதில் அனில் தேஷ்முக் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். அனில் தேஷ்முக்கின் உதவியாளர்கள் சஞ்சீவ் பாலண்டே, குந்தன் ஷிண்டே உட்பட 14 பேர் கைதுசெய்யப்பட்டு அவர்கள் மீது ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz