Published:Updated:

சென்னை மழை வெள்ள பாதிப்பு: சிறப்பாகச் செயல்பட்டது திமுக-வா... அதிமுக-வா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி
ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

`எங்களது அரசின் பணிகளால்தான் சேதங்கள் குறைந்திருக்கின்றன' என்கிறது அதிமுக. `ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்டவற்றில் ஊழல் மட்டுமே செய்தனர்' என்கிறது திமுக.

வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்திருக்கும் நிலையில், இந்த வாரம் முழுவதும் மாநிலத்தில் பரவலாக நல்ல மழை பெய்துவருகிறது. குறிப்பாக, சென்னையில் மழை வெள்ளம் தேங்கி நிற்கவும், அதிமுக-வும் திமுக-வும் மாறி மாறி குற்றம்சாட்ட தொடங்கின.

10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக செய்யத் தவறியதும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த ஊழலுமே தண்ணீர் தேங்கி நிற்கக் காரணம் என திமுக-வும், உரிய நேரத்தில் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்காததுதான் மழைநீர் தேங்கக் காரணம் என்று அதிமுக-வும் குற்றம்சாட்ட தொடங்கின.

அதிமுக கடந்த 10 ஆண்டுகளாக என்ன செய்தது என்பது குறித்து அந்தக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேலிடம் பேசினோம். ``2015-ல் 28 சென்டிமீட்டர் மழை பெய்தது. இப்போது 21 சென்டிமீட்டர் மழைதான் பெய்திருக்கிறது. 2015 பெருமழைக்குப் பிறகு அதிமுக அரசு, குடிமராமத்துப் பணிகளை மேற்கொண்டோம், கால்வாய்களைத் தூர்வாரினோம், மழைநீர் வடிகால்களை அமைத்தோம், சாலைகளைச் சீர்படுத்தினோம், ஆற்றுக்கரைகளை பலப்படுத்தினோம், ஆற்றங்கரையோரம் இருந்த ஆக்கிரமிப்புகளை 80 சதவிகிதம் கிளியர் செய்து சென்னைக்கு வெளியே குடியமர்த்தினோம்.

ஆர்.எம்.பாபு முருகவேல்
ஆர்.எம்.பாபு முருகவேல்

அடையாறு, கூவம் ஆறு, கொசஸ்தலை ஆறு, பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளை ஆழப்படுத்தியதோடு, முகத்துவாரத்தையும் தூர்வாரியிருக்கிறோம்.  நாங்க எந்த வேலையுமே செய்யாமல் இருந்திருந்தால் இந்நேரம் சென்னை மூழ்கியிருக்கும். 2015-ல் சென்னையில் 3,137 இடங்களில் தண்ணீர் தேங்கியது. அதுவே, 2018-ல் 67 இடங்களில்தான் தண்ணீர் தேங்கியது. அ.தி.மு.க அரசு செய்த பணிகள்தான் இந்த அளவுக்குக் குறையக் காரணம்.

அதுபோல, 2018 மழையின்போதே அமுதா ஐ.ஏ.எஸ் போன்ற சிறப்பு அதிகாரிகளை நியமித்தோம். சமரசமின்றி நீர்வழிப் பாதை ஆக்கிரமிப்புகளை இடித்தோம். அ.தி.மு.க அரசு எதுவுமே செய்யவில்லை என்றால் நிலைமை மோசமாகியிருக்கும். மேலும், மாம்பலம் கால்வாயைத் தூர்வாராதது, ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் ஊழல் போன்றவற்றால்தான் தி.நகரில் தண்ணீர் தேங்கியதாகவும், அதுபற்றி விசாரணை நடத்துவோம் என்றும் முதல்வர் ஸ்டாலின் சொல்லியிருக்கிறார்.

சென்னை கனமழை
சென்னை கனமழை

ஆனால், உண்மை நிலவரம் என்னவென்றால், தி.மு.க அரசுப் பொறுப்பேற்ற பின்னர் இரு மாதங்களுக்கு முன்பு கால்வாய் தூர்வார டெண்டர் விட்டனர். இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்கு ஒருவர் என கட்சியினருக்கு டெண்டர் கொடுத்திருக்கின்ரனர். டெண்டர் எடுத்தவர்கள், கால்வாய்க்குள் ஜே.சி.பி இறங்க வழியில்லாததால் கட்டடக் கழிவு, ரப்பீஸ் எல்லாவற்றையும் கொட்டி நிரப்பி, ஜே.சி.பி-யை இறக்கி கழிவுகளை எடுத்துத் தூர்வாரினர். வாரி முடித்த பின்னர் ஜே.சி.பி-க்காக நிரப்பப்பட்ட ரப்பீஸ்களை அள்ளவேயில்லை. அப்படியே போட்டதன் விளைவுதான் மாம்பலம் கால்வாய் அடைத்து தி.நகரில் தண்ணீர் தேங்கியது. எனவே, நீர் தேங்கியதற்கும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கும் சம்பந்தமில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் பல விஷயங்களைச் செய்திருக்கிறோம். இன்றும் பாண்டி பஜார் சென்றால் சிங்கப்பூர்போலக் காட்சியளிக்கும்.

ஸ்மார்ட் கிட்டி நடைபாதை
ஸ்மார்ட் கிட்டி நடைபாதை

10 நிமிடங்களில் 200 எம்.எல்.டி தண்ணீரை உறிஞ்சக்கூடிய நவீன எந்திரத்தை ஃபின்லாந்திலிருந்து இறக்குமதி செய்து பணிகளை மேற்கொண்டோம். அந்த எந்திரத்தை என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. மழைக்காலம் வருவதற்கு முன்பாக ஆகஸ்ட் மாதத்திலேயே, ஆறு கடலுடன் கலக்கும் முகத்துவாரப் பகுதியை தூர்வார வேண்டும். அதைச் செய்யாதது தி.மு.க அரசின் தவறு! எனவே, நல்லது நடத்தால் அது தன்னால்தான் என்று பெருமைபட்டுக்கொள்வது; அதுவே, தீமை நடந்தால் அ.தி.மு.க-வை கைகாட்டுவதுதான் தி.மு.க-வின் வேலை. நல்லதைப்போல கெட்டதையும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.

`தி.மு.க மேற்கொண்ட பணிகள் என்ன?’ என்பது குறித்து அக்கட்சி செய்தித் தொடர்பாளர் அரசகுமாரிடம் பேசினோம். ``மழைநீர் தேங்காமல் காப்பதுதான் அரசின் நோக்கம். ஆனால், ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள்தான் ஆகின்றன. ஒவ்வொரு துறையாக முறைப்படுத்திக்கொண்டு வருவதற்கே நேரம் போதவில்லை. 2015 வெள்ளத்துக்குப் பிறகு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை செலவு செய்து பணிகளை முடித்துவிட்டோம் என்று சொன்னது அ.தி.மு.க அரசு. ஆனால், அவர்கள் அப்படி ஏதாவது செய்திருந்தால், முறையான வடிகால் அமைப்புகளை ஏற்படுத்தி இருந்தால் இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

பி.டி.அரசகுமார்
பி.டி.அரசகுமார்
நீச்சல்குளமான சுரங்கப்பாதை; மருத்துவமனையில் புகுந்த வெள்ளம்! - சென்னை மழை வெள்ளத்தில் ஒரு நாள்!

அ.தி.மு.க அரசுதான் வடிகால் பணிகளை மேற்கொண்டு இருக்கிறதே, அத்தனை பாதிப்பு ஏற்படாது. சிறிய பாதிப்புகளைச் சரிசெய்துகொள்ளலாம் என்றுதான் அரசு பொறுமை காத்தது. ஆனால் நிலைமை மோசமானபோதுதான் தெரிந்தது, எல்லா திட்டங்களிலும்போல இதிலும் அ.தி.மு.க ஊழல் செய்திருக்கிறது என்பது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

அதுமட்டுமின்றி, தி.மு.க அரசுபோல, முதல்வர் ஸ்டாலின்போல, சென்ற ஆட்சி இவ்வளவு வேகமாக களப்பணிகளை மேற்கொள்ளவில்லை. முதல்வர் தொடங்கி அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், சுகாதாரம், உள்ளாட்சித்துறை அதிகாரிகள் என ஒட்டுமொத்த அரசு நிர்வாகமே களத்தில் இறங்கியிருக்கிறது. வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் உலைவைக்க முடியாமல் மக்கள் பரிதவிக்கிறார்கள். அதனால், முதலில் பசியைப் போக்க வேண்டும் என்பதற்காக அம்மா உணவகத்தில் இலவச உணவு அறிவித்தது மட்டுமின்றி வீடு தேடி உணவுகளைக் கொடுத்துவருகிறோம்.

மழை அரசியல் வேண்டாமே..!

அடுத்ததாக, பக்கத்து வீட்டு மொட்டைமாடியில் தங்குவதாக இருந்தாலும் தேவைப்படும் என்பதால் பாய்களைக் கொடுத்தார் முதல்வர். நான்கைந்து நாள்களுக்கு சமைத்துக் சாப்பிடுவதற்குத் தேவை என்பதால் அரிசி கொடுத்தார். இது போன்ற உதவிகள் தொடரும். மேலும் தி.நகரில் தேங்கிய நீரை ராட்சத மோட்டார் கொண்டு பள்ளத்தில்விட்டு, கால்வாய்க்கு அனுப்பும் பணி நடக்கிறது. 50 சதவிகிதம் தேங்கிய தண்ணீர் அகற்றப்பட்டிருக்கிறது. மழை தொடரவில்லை எனில் இரண்டொரு நாளில் டோட்டல் க்ளியர் ஆகிவிடும்.

நிவாரண பொருள்கள் வழங்கும் முதல்வர் ஸ்டாலின்
நிவாரண பொருள்கள் வழங்கும் முதல்வர் ஸ்டாலின்

ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் மெட்ரோ வாட்டர் செல்லும் வழியில் நடைபாதை போட்டிருக்கிறார்கள். ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. நடைபாதை அமைப்பதற்கு முன்பாக மழைநீர் செல்வதற்கு வடிகாலை உண்டாக்கிவிட்டுத்தான் அமைக்க வேண்டும். ஆக, அ.தி.மு.க அரசு மழைநீர் வடிகால் அமைப்பதாகச் சொல்லி ஏமாற்றிவிட்டது, ஊழல் செய்திருக்கிறது என்பது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது. எனவே, இனி வரும் காலங்களில் சென்னையில் ஒரு சொட்டு மழைநீர் தேங்கக் கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார். கண்டிப்பாக அதற்கான பணிகளை துரிதமாக மேற்கொள்வோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு