Published:Updated:

“தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு முழு ஒத்துழைப்பு!”

எட்டு வழிச் சாலை திட்டம்
பிரீமியம் ஸ்டோரி
எட்டு வழிச் சாலை திட்டம்

- உறுதிகொடுத்த முதல்வர்... பின்னணியில் எட்டு வழிச் சாலை திட்டம்?

“தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு முழு ஒத்துழைப்பு!”

- உறுதிகொடுத்த முதல்வர்... பின்னணியில் எட்டு வழிச் சாலை திட்டம்?

Published:Updated:
எட்டு வழிச் சாலை திட்டம்
பிரீமியம் ஸ்டோரி
எட்டு வழிச் சாலை திட்டம்

‘தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்குத் தமிழக அரசு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை’ என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் குற்றம்சாட்டினார். உடனே அதற்கு பதிலளிக்கும்விதமாக, ‘கண்டிப்பாக ஒத்துழைப்பு கொடுக்கப்படும்’ என்று கடிதம் எழுதினார் முதல்வர் ஸ்டாலின். ‘இருவரின் உரையாடலின் பின்னே, எட்டுவழிச் சாலைத் திட்டம்தான் இருக்கிறது’ என்று அச்சப்படுகிறார்கள் மக்கள்!

“தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு முழு ஒத்துழைப்பு!”

இது குறித்து நம்மிடம் பேசிய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், ‘‘சென்னை தாம்பரத்தை அடுத்த படப்பையிலிருந்து சேலத்துக்கு 276.5 கி.மீ நீளத்துக்கு எட்டுவழி பசுமைச் சாலை அமைக்கும் திட்டத்தை கடந்த 2018-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. அப்போது தமிழகத்தை ஆட்சிசெய்த அ.தி.மு.க அரசு, அத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் தீவிரம் காட்டியது. அதற்காகச் சுமார் 7,000 விவசாயிகளிடமிருந்து 6,978 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்தியது அரசு. விவசாயிகளை பாதிப்பதாகச் சொல்லி எட்டுவழிச் சாலைத் திட்டத்தை எதிர்த்து பல போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன. திட்டத்தை ரத்து செய்யக் கோரி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், திட்டத்துக்குத் தடைவிதித்து கடந்த 2019-ல் தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘எட்டுவழிச் சாலைத் திட்டத்தைச் செயல்படுத்தலாம்’ என்று உத்தரவிட்டதுடன், ‘திட்டத்துக்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட விதம் தவறானது என்பதால், கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும்’ என்றும் தனது உத்தரவில் குறிப்பிட்டது. அதன்படி நிலங்கள் ஒப்படைக்கப்பட்டுவிட்டன.

எட்டுவழிச் சாலையை மனதில் வைத்துத்தான்...

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, கொரோனா உள்ளிட்ட காரணங்களால் ஓராண்டுக் காலம் பொறுமையாக இருந்த மத்திய அரசு, இப்போது எட்டு வழிச்சாலை அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது. அதன் முதற்கட்டமாக பீகார் மாநிலம் தன்பாத் ஐ.ஐ.டி வல்லுநர் குழுவைக்கொண்டு சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையை தயாரிப்பதற்கு முன்பாகப் பொதுமக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டங்களை நடத்த, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டிருப்பதாகவும், அதற்கான அனுமதியைத் தமிழக அரசிடம் கோரியிருப்பதாகவும் செய்திகள் கசிகின்றன.

சென்னையிலிருந்து சேலம் செல்ல ஏற்கெனவே மூன்று தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. நான்காவதாக வாணியம்பாடியிலிருந்து திருப்பத்தூர், ஊத்தங்கரை, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மஞ்சவாடி, அயோத்திப்பட்டினம் வழியாக சேலத்துக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 179-ஏ பணிகளும் நிறைவடைந்துள்ளன. இத்தகைய சூழலில் ஐந்தாவதாக ஒரு பசுமைச்சாலை தேவையற்றது.

சமீபத்தில், ‘தேசிய நெடுஞ்சாலை ஆணையப் பணிகளுக்குத் தமிழக அரசு சரியான ஒத்துழைப்பைக் கொடுப்பதில்லை’ என்று மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி குற்றம்சாட்டினார். அதையொட்டி ஜனவரி 24-ம் தேதி, அவருக்குக் கடிதம் எழுதியிருக்கும் முதல்வர் ஸ்டாலின், ‘கண்டிப்பாக ஒத்துழைப்பு கொடுக்கப்படும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இருவரும் எட்டுவழிச் சாலையை மனதில் வைத்துத்தான் பேசியிருக்கிறார்கள் என விவசாயிகள் அச்சம்கொள்கிறார்கள். எதிர்க்கட்சியாக இருந்தபோது இந்தத் திட்டத்தை எதிர்த்து கருத்து தெரிவித்த ஸ்டாலின், தற்போது திட்டத்தை நிராகரிக்கும் அதிகாரமுள்ள இடத்தில் இருப்பதால், திட்டத்துக்கு அவர் அனுமதியளிக்கக் கூடாது!’’ என்றார்கள்.

“தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு முழு ஒத்துழைப்பு!”

“ஸ்டாலின் நிச்சயம் இதைத் தடுக்கலாம்!”

மத்திய அரசை மீறி, மாநில அரசு இதில் முடிவெடுக்க முடியுமா? பா.ம.க செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான பாலுவிடம் கேள்வியை முன்வைத்தோம். ‘‘எட்டுவழி பசுமைச்சாலைத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமென கோரிக்கைவைத்ததே முன்னாள் முதல்வர் எடப்பாடிதான். ஒருமுறை பிரதமரைச் சந்தித்தபோது, இந்தக் கோரிக்கையைக் கடிதம் வாயிலாகக் கொடுத்தார் எடப்பாடி. அடுத்த மூன்று நாள்களில் திட்டம் குறித்த அறிவிப்பு வெளிவந்தது. ஏற்கெனவே நான்கு சாலைகள் இருக்கும்போது இது தேவையற்றது என்பதால், முதல்வர் ஸ்டாலின் பிரதமரிடம் இதற்கு பதிலாக வேறொரு திட்டத்தை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கோரிக்கைவைக்கலாம். ஏனெனில், நிலம் கையகப்படுத்தும் பணிகளைத் தமிழக அரசுதான் செய்து கொடுத்தாக வேண்டும். தமிழக அரசின் ஒப்புதலோ, ஒத்துழைப்போ இன்றி மத்திய அரசால் நிச்சயம் திட்டத்தைச் செயல்படுத்த முடியாது. தடுக்கும் இடத்தில் ஸ்டாலின் இருப்பதால் நிச்சயம் தடுக்கலாம்’’ என்றார்.

கடந்த முறை ஆட்சியிலிருந்தபோது எட்டுவழிச் சாலைத் திட்டத்துக்கு அ.தி.மு.க ஆதரவு கொடுத்தது. அக்கட்சியின் தற்போதைய கருத்தை அறிய செய்தித் தொடர்பாளர்களைத் தொடர்புகொண்டோம். கோரஸாக எல்லோருமே ‘‘இவ்விஷயத்தில் ‘எந்தக் கருத்தையும் தெரிவிக்க வேண்டாம்’ எனத் தலைமை உத்தரவிட்டிருக்கிறது’’ என்று எஸ்கேப் ஆனார்கள்.

தமிழக அரசின் முடிவு என்ன? பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் பேசினோம். ‘‘இது முழுக்க முழுக்க மத்திய அரசின் திட்டம். தேசிய நெடுஞ்சாலை ஆணையம்தான் திட்டத்தைச் செயல்படுத்தும். இது குறித்த வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனினும், இதில் தமிழக அரசின் ஒப்புதலும் தேவை என்பதால், திட்டம் குறித்துக் கொள்கை முடிவெடுக்கவேண்டிய தேவை இருக்கிறது. மத்திய அரசிடமிருந்து திட்டத்தைச் செயல்படுத்தப்போவதாக எந்தக் கடிதமும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. கடிதம் கிடைத்த பிறகு, முதல்வருடன் கலந்து பேசிய பின்னர்தான் தமிழக அரசின் முடிவை அறிவிக்க முடியும்’’ என்றார்.

மக்களின் குரலை கவனத்தில்கொள்ளுமா அரசு?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism