Published:Updated:

திருச்சி: `20 சீட்.. இல்லைன்னா 234 தொகுதிகளில் தனித்துப் போட்டி!'- தே.செ.பேரவை

மாநில மகளிரணி மாநாடு
மாநில மகளிரணி மாநாடு

`அரசு மற்றும் அரசியலில் செட்டியார்கள் மைனாரிட்டியாக இருக்கிறார்கள் என்று சொல்லிச் சொல்லி பிரித்து வைத்துக்கொண்டிருக்கிறார்கள்’ - தே.செ.பேரவைத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா.

`இனி நாங்கள் ஒண்ணும் மைனாரிட்டி சமூகம் கிடையாது. எங்களை இப்படியே சொல்லி அரசியல் கட்சியினர் பிரித்துவைத்திருக்கிறார்கள். வருகிற சட்டமன்றத் தேர்தலில் எங்களுக்கு 20 இடங்களைக் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுக்கவில்லையென்றால் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம்’ என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார் ஜெகநாத் மிஸ்ரா.

மகளிர் மாநாடு
மகளிர் மாநாடு

தேசிய செட்டியார்கள் பேரவையின் மாநில மகளிர் அணி மாநாடு திருச்சியில் நடைபெற்றது. பத்திரிகையாளர் சந்திப்பின்போது தேசிய செட்டியார்கள் பேரவையின் நிறுவனத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா பேசுகையில், ``தமிழகம் முழுவதும் 23 தொகுதிகளில் செட்டியார் சமுதாய மக்கள் பரவலாக வாழ்ந்துவருகின்றனர்.

மகளிரணி
மகளிரணி

`அரசு மற்றும் அரசியலில் செட்டியார்கள் மைனாரிட்டியாக இருக்கிறார்கள்’ என்று சொல்லிச் சொல்லி பிரித்து வைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஏறக்குறைய 85 வகையான உட்பிரிவுகளைக்கொண்ட செட்டியார் சமுதாயம் ஒட்டுமொத்த தமிழக மக்கள் தொகையில் 2.5 கோடி பேர் இருக்கிறார்கள்.

இந்த எண்ணிக்கையிலிருக்கும் செட்டியார் இன மக்கள் தமிழகத்தில் 120 தொகுதிகளில் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கிறார்கள். இந்த அமைப்பில் இதுவரை ஆன்லைனில் மட்டும் 25 லட்சம் பேர் உறுப்பினராக இணைந்திருக்கிறார்கள்.

மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள்
மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள்

இருப்பினும் இதுவரை அரசியலில் ஒட்டுமொத்த செட்டியார்களும் பிரித்தாளும் நிலையிலேயே இருக்கிறார்கள். எங்களுக்குக் கிடைக்க வேண்டிய அரசியல் முக்கியத்துவம் எங்களுக்கு தொடர்ந்து மறுக்கப்பட்டுவருகிறது. இனியும் நாங்கள் விட மாட்டோம். எனவே, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எங்களுக்கு 20 தொகுதிகளை ஒதுக்கும் கட்சிகளுடன்தான் கூட்டணிவைப்போம். இல்லையென்றால் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம்.

விவசாய மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் முக்கியத்துவம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்குத் தனி நலவாரியம் அமைக்க வேண்டும். தமிழக எல்லைப்புற பகுதிகளில் புதிய அணைகளை தமிழக அரசு கட்ட வேண்டும்.

தேசிய செட்டியார்கள் பேரவையின் நிறுவன தலைவர் ஜெகநாத் மிஸ்ரா
தேசிய செட்டியார்கள் பேரவையின் நிறுவன தலைவர் ஜெகநாத் மிஸ்ரா

வங்கிகளில் வியாபாரக் கடன் வழங்குவதில் 50 சதவிகிதம் பெண்களுக்கு கடன் வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கும் நலத்திட்டங்களில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு மானிய கடன்கள் ஒதுக்க வேண்டும். சிறு வியாபாரிகள் நல வாரியத்தை அமைக்க வேண்டும். ஆன்லைன் வணிகத்தை மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும் என்பவை உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படவிருக்கின்றன" என்றார்.

தொண்டர்கள்
தொண்டர்கள்

அதைத் தொடர்ந்து, ``இம்மாநாட்டை தொடர்ந்து பிப்ரவரி 21-ம் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மாநில மாநாடு நடத்தவிருக்கிறோம். நாங்கள் பல ஆண்டுகளாக அ.தி.மு.க கூட்டணியில்தான் இருந்துவருகிறோம்., முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் பன்னீர்செல்வத்திடமும் எங்களது கோரிக்கையைச் சொல்லியிருக்கிறோம். அவர்களும் நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு