Published:Updated:

"கொரோனாவின்போது ஸ்டாலினுக்கு போன் செய்தேன்; மூன்றே மணி நேரத்தில்..." - முதல்வரின் ஆசிரியர் ஜெயராமன்

தமிழாசிரியர் ஜெயராமனுடன் முதல்வர் மு.க ஸ்டாலின்
News
தமிழாசிரியர் ஜெயராமனுடன் முதல்வர் மு.க ஸ்டாலின்

"என் மாணவர் மு.க ஸ்டாலின் தமிழ் பாடத்தில் 60 மதிப்பெண்களுக்குமேல் தான் எடுப்பார். ஸ்டாலினின் அண்ணன் மு.க முத்துவும் என்னிடம்தான் தமிழ் படித்தார். அப்போதே, அவர் சிறப்பாக..." - முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழாசிரியர் ஜெயராமன் பேட்டி

"கொரோனாவின்போது ஸ்டாலினுக்கு போன் செய்தேன்; மூன்றே மணி நேரத்தில்..." - முதல்வரின் ஆசிரியர் ஜெயராமன்

"என் மாணவர் மு.க ஸ்டாலின் தமிழ் பாடத்தில் 60 மதிப்பெண்களுக்குமேல் தான் எடுப்பார். ஸ்டாலினின் அண்ணன் மு.க முத்துவும் என்னிடம்தான் தமிழ் படித்தார். அப்போதே, அவர் சிறப்பாக..." - முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழாசிரியர் ஜெயராமன் பேட்டி

Published:Updated:
தமிழாசிரியர் ஜெயராமனுடன் முதல்வர் மு.க ஸ்டாலின்
News
தமிழாசிரியர் ஜெயராமனுடன் முதல்வர் மு.க ஸ்டாலின்
ஒரு முன்னாள் மாணவரின் நெகிழவைக்கும் பேச்சால் தமிழகத்தையே கவனம் ஈர்த்திருக்கிறார் தமிழாசிரியர் ஜெயராமன். காரணம், பேசிய முன்னாள் மாணவர், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

"தான் முதல்வராகக் காரணமாக இருந்தது இப்பள்ளியும்தான் என்று சேத்துப்பட்டிலுள்ள ‘சென்னை கிறிஸ்தவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி’யின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் சுட்டிக்காட்டிய முதல்வர் ஸ்டாலின், அத்தனை ஆசிரியர்கள் கூடியிருந்த கூட்டத்தில் பெருமையுடன் சுட்டிக்காட்டி பேசியது தமிழாசிரியர் ஜெயராமனைத்தான். அதுவும், “தமிழாசிரியர் ஜெயராமனை பார்க்கும்போது, 'ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே' பாடல்தான் ஞாபகம் வருகிறது. அப்பாடலைப் பாடவேண்டும் போல் ஆசையாக உள்ளது. தமிழ் பாடத்தை ஆசிரியர் ஜெயராமனிடம் படித்ததற்காகப் பெருமைப்படுகிறேன்" - என ஸ்டாலின் விழாவில் பேசியது ஒட்டுமொத்த பார்வாளர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதுகுறித்து, முதல்வர் மு.க ஸ்டாலினின் பெருமைக்குரிய தமிழாசிரியர் ஜெயராமனிடம் பேசினோம்…

மு.க ஸ்டாலின்
மு.க ஸ்டாலின்

"ஸ்டாலின் பள்ளிப் படிப்பை முடித்து 50 வருடங்களுக்கு மேலாகிவிட்டாலும், என்னை எப்படி நினைவு வைத்திருக்கிறாரோ அதேபோல்தான் ஸ்டாலினும் என்னால் மறக்க முடியாத அன்புக்குரிய மாணவராக இருந்திருக்கிறார். எத்தனையோ பிரபலங்களின் பிள்ளைகள் எங்கள் பள்ளியில் படித்திருக்கிறார்கள். ஸ்டாலின் படிக்கும்போது, கலைஞர் அமைச்சராக இருந்தார். ஆனால், ஸ்டாலின் எந்த பந்தாவும் காட்டமாட்டார். ஆசிரியர்களிடம் நல்ல பழக்க வழக்கமும் நண்பர்களுடன் நட்பு பாராட்டுவதிலும் சிறந்தவர். இப்படிப்பட்ட மாணவரை எந்த ஆசிரியரால் மறக்க முடியும்?அவரது நண்பனாக இருந்த இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இறந்துவிட்டார். அப்போதே, அந்த மாணவரின் வீட்டிற்குச் சென்று அங்கேயே இருந்து கூடுதல் கவனம் எடுத்துக்கொண்டு, ஆறுதல் எல்லாம் சொல்லிவிட்டு வந்தார்.

அந்தக் காலத்தில், தமிழ் பாடத்தில் 60 மதிப்பெண் எடுப்பதுவே சவாலானது என்பதால் பாராட்டுக்குரியது. ஸ்டாலின் எப்போதும் 60 மதிப்பெண்களுக்குமேல்தான் வாங்குவார். தமிழை உள்வாங்கிப் படிக்கக்கூடிய மாணவர். அப்போதே, கட்டுரை எல்லாம் எழுதுவார். "டேய் உங்கப்பா நல்லா பிரமாதமா கட்டுரை எழுதுறார். அதில், பாதியாவது இருக்கணும்" என்பேன். அமைதியாக தலையாட்டிவிட்டு சிரித்துக்கொண்டே சென்றுவிடுவார். ஆனால், நாம் சொன்னதை உள்வாங்கிக்கொண்டார் என்பதை அடுத்தடுத்து எழுதும் கட்டுரைகளிலேயே நிரூபித்துவிடுவார்.

ஆசிரியர் ஜெயராமன்
ஆசிரியர் ஜெயராமன்

எந்த ஆசிரியரும் ஸ்டாலினை குறை சொல்ல முடியாது. அந்தளவுக்கு நடந்துகொள்வார். அதேபோல, படிப்பு மட்டுமல்லாமல் கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களிலும் ஆர்வம் காட்டுவார். தலைமைப் பண்புடன் நடந்துகொள்வார். அவரது தலைமைப் பண்பால் நிச்சயம் பெரிய இடத்திற்கு வருவார் என்று நினைத்தேன். ஆனால், இவ்வளவு பெரிய இடத்திற்கு வருவார் என்று நினைக்கவில்லை. ஒரு ஆசிரியருக்கு இதைவிட என்ன பெருமை இருந்துவிடப் போகிறது?" என்று பெருமை பொங்க பேசுபவரிடம், "மேடைகளில் எல்லாம் ஒலிக்கும் அவரது தழிழுக்கும் வளர்ச்சிக்கும் நீங்களும் ஒரு காரணம் என்று எடுத்துக்கொள்ளலாமா?" என்று கேட்டால், தன்னடக்கத்தோடு பதில் வருகிறது அவரிடமிருந்து…

"இல்லவே இல்லை. எல்லாம் ஸ்டாலினின் சொந்த முயற்சிதான். என்னிடம் இரண்டாயிரம் மாணவர்கள் படித்தார்கள் என்றால் எல்லோருமேவா மேடைகளில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்? ஒவ்வொருவரும் பயிற்சியெடுத்து முன்னேறியுள்ளார்கள். ஸ்டாலின் முயற்சி எடுத்துள்ளார். அதற்கான பலன் கிடைத்துள்ளது. ஆரம்பத்திலிருந்து அவரது வளர்ச்சியை பார்த்துக்கொண்டு வருகிறேன். படிப்படியாக கடுமையாக உழைத்து இந்த இடத்திற்கு வந்துள்ளார். அவருக்கு யாரும் திடீரென்று முடிசூடவில்லை. மக்களால் தேந்தெடுக்கப்பட்ட மேயர்; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர். அவர் மேயரானபோதுகூட வீட்டிற்கு நேரில் சென்று மாலை போட்டு வாழ்த்திவிட்டு வந்தேன். என் மாணவனுக்கு நான் தான் சிறப்பு செய்யவேண்டும். அதனை விட்டுக்கொடுக்கமாட்டேன். எனக்கு 83 வயதாகிவிட்டது. வயதின் முதுமையில் உடல்நிலை சரியில்லை. இப்போதுகூட, என் மாணவர் ஸ்டாலினுக்காகத்தான் அந்த விழாவில் கலந்துகொண்டு வந்தேன்.

அதேபோல, ப.சிதம்பரம், `தி இந்து' ராம், மோகன் குமாரமங்கலம், ஜி.கே வாசன் என பலர் எங்கள் மாணவர்கள்தான். ஒரு பெரிய பட்டியலே உள்ளது. ஸ்டாலினின் அண்ணன் மு.க முத்துவும் மு.க அழகிரியும் எங்கள் பள்ளி மாணவர்கள்தான். இதில், மு.க முத்து என்னிடம்தான் தமிழ் படித்தார். அப்போதே சிறப்பாகப் பாடுவார். இப்போது, சந்திக்கும்போதெல்லாம் நலம் விசாரித்துக்கொள்வோம்" என்று முதல்வர் முதற்கொண்டு பிரபல மாணவர்களின் நினைவுகளில் மூழ்கிப்போனவரிடம், "உங்கள் மாணவர் முதல்வர் ஸ்டாலின் குறித்து நெகிழ்ந்த தருணம் எது?" என்றோம்,

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

"அவர் எல்லோரிடமும் எளிமையாக பழகும் பண்பை நினைத்து எப்போதும் நெகிழ்ந்துபோவேன். முன்னாள் மாணவராக எங்கள் பள்ளிக்கு கட்டிடம் கட்டித்தந்துள்ளார். கொரோனா பெருந்தொற்றின்போது முழு ஊரடங்கு போட்டிருந்தார்கள். அந்த நேரத்தில் எனக்கு சில பொருட்கள் கிடைக்கவில்லை. யாரையும் தொடர்புகொள்ளவும் முடியவில்லை. அப்போது, ஸ்டாலின் முதல்வராக எல்லாம் இல்லை. எதிர்கட்சித் தலைவராக இருந்தார். போன் செய்து "ப்பா... என்னால எதையும் வாங்க முடியல" என்றேன். அடுத்த மூன்று மணிநேரத்தில் எங்கள் வீட்டிற்கே ஆட்கள் வந்து மளிகைப் பொருட்கள், சிறுதானிய பொருட்களைக் கொடுத்துவிட்டுச் சென்றார்கள். கடந்த 1970 ஆம் ஆண்டு ஸ்டாலின் பள்ளி படிப்பை முடித்து சென்றார். அப்போது, படித்த மாணவர்கள் எல்லோரும் 50 ஆம் ஆண்டையொட்டி, 2020 ஆம் ஆண்டு சந்தித்து ஆசிரியர்களுக்கு மரியாதை செய்தார்கள். அப்போது, எதிர்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலினும் வந்து என் கையைப்பிடித்துக்கொண்டு நலம் விசாரித்து மரியாதை செய்தார். இப்போது, அவரை முதல்வராக சந்தித்தேன். மீண்டும் சொல்கிறேன். இதைவிட, ஒரு ஆசிரியருக்கு என்ன பெருமை இருந்துவிடப் போகிறது?" என்கிற தமிழாசிரியர் ஜெயராமனின் குரலில் அப்படியொரு பெருமகிழ்ச்சி.