Election bannerElection banner
Published:Updated:

`முதல்வர் பழனிசாமி; பதவியேற்கும் நாள் மே 9’ - தேனியில் வைக்கப்பட்ட கல்வெட்டால் பரபரப்பு

கல்வெட்டு
கல்வெட்டு

எடப்பாடி பழனிசாமி முதல்வர் என்றும், ஓ.பி.எஸ் துணைமுதல்வர் என்றும், இவர்கள் பதவியேற்கும் நாள் மே- 9 2021 என்றும் குறிப்பிட்டு தேனியில் கல்வெட்டு வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ளது குச்சனூர் கிராமம். சுயம்பு சனீஸ்வரர் கோவில் உள்ள இக்கிராமத்தில், தனி நபரால் நிர்வாகிக்கப்படும் காசி ஸ்ரீ அன்னப்பூரணி கோவில் ஒன்று உள்ளது. இக்கோவிலில் வைக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று தேனி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகவும், சமூக வலைதளங்களில் வைரலாகவும் மாறியுள்ளது.

ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்.
ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்.

காசி ஸ்ரீ அன்னப்பூரணி கோவிலில், கடந்த ஏப்ரல் 30ம் தேதி கல்வெட்டு ஒன்று வைக்கப்பட்டது. அதில், ”2021 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அ.தி.மு.க மூன்றாவது முறையாக சிறப்பு மிக்க மகத்தான வெற்றிபெற்று தமிழ்நாடு முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமியும், துணைமுதல்வராக ஓ.பன்னீர்செல்வமும் பதவியேற்கும் நாள் 09.05.2021” என குறிப்பிடப்பட்டிருந்தது.

கல்வெட்டு
கல்வெட்டு
ஓ.பி.எஸ் ப்ளானுக்கு வெடிவைக்கும் தங்க தமிழ்ச்செல்வன் ! - போடிநாயக்கனூர் கள நிலவரம்

தற்போது தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், தி.மு.க தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைக்க உள்ள சூழலில், காசி ஸ்ரீ அன்னப்பூரணி கோவிலில் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டு குறித்து, சிலர் புகைப்படத்துடன் சமூக வலைதளத்தில் கிண்டலாக பதிவிட்டுள்ளனர். இதனை அறிந்த சின்னமனூர் காவல்துறையினர், இன்று கோவிலுக்குச் சென்று கல்வெட்டை எடுத்துச் சென்றனர். ஆனால், கல்வெட்டு குறித்த பதிவுகள், சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

சின்னமனூர் காவல்நிலையம்
சின்னமனூர் காவல்நிலையம்

காசி ஸ்ரீ அன்னப்பூரணி கோவில் கல்வெட்டு வைப்பதில் புகழ் பெற்றது என்று தான் சொல்ல வேண்டும். கோவிலை நிர்வகிக்கும் வேல்முருகன் என்பவர், தமிழ்நாடு காவல்துறையில் தலைமைக் காவலராக பணியாற்றியவர். அ.தி.மு.க மீதும், ஜெயலலிதா மீதும் அதீத பற்று கொண்ட வேல்முருகன், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது, காவல் சீருடையில் மொட்டை அடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஜெயலலிதாவை காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் விமர்சித்த போது, சீருடையில் போராட்டம் நடத்தினார். தொடர்ந்து காவல் சீருடையில் அ.தி.மு.க சார்பு சம்பவங்களை அரங்கேற்றிய வேல்முருகனுக்கு கட்டாய விருப்ப ஓய்வு கொடுத்து வீட்டிற்கு அனுப்பியது காவல்துறை.

தேனி எம்.பி’க்கு வைக்கப்பட்ட கல்வெட்டு
தேனி எம்.பி’க்கு வைக்கப்பட்ட கல்வெட்டு
Vikatan

இந்நிலையில், குச்சனூரில் உள்ள காசி ஸ்ரீ அன்னப்பூரணி கோவிலை நிர்வாகித்து வந்தார் வேல்முருகன். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, வாக்கு எண்ணும் முன்னரே, தேனி தொகுதியில் போட்டியிட்ட ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்குமாரை எம்.பி என குறிப்பிட்டு, இதே கோவிலில் கல்வெட்டு வைத்தார் வேல்முருகன். கல்வெட்டு அகற்றப்பட்டதுடன், அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்னரே, எடப்பாடி பழனிசாமி முதல்வர் என்றும், ஓ.பி.எஸ் துணைமுதல்வர் என்றும், 3வது முறையாக அ.தி.மு.க ஆட்சி அமைத்துள்ளது என்றும் கல்வெட்டு வைத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் வேல்முருகன். இது தொடர்பாக, காவல்துறை இதுவரை எந்த வழக்குப்பதிவும் செய்யவில்லை.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு