மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க சிவசேனாவை உடைக்கும் வேலையில் பாஜக ஈடுபட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு பல காலமாக வைக்கப்பட்டு வருகிறது. சிவசேனாவை சேர்ந்த 22-க்கும் அதிகமான எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் குஜராத்தில் உள்ள சூரத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் சிவசேனா உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உத்தவ் தாக்கரே தனது கட்சி தலைவர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். சூரத் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ள சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஏக்நாத் ஷிண்டேயுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டிருப்பதாக சிவசேனா செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். அதோடு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சிவசேனா குழு ஒன்று சூரத்துக்கு விரைந்திருக்கிறது.

சிவசேனா குழுவினரிடம் உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை ஏக்நாத் ஷிண்டேவுக்காக விட்டுக்கொடுக்க தயாராக இருப்பதாகவும், இது குறித்து ஷிண்டேயிடம் தெரிவிக்கும் படி கூறி அனுப்பி இருக்கிறாராம். ஏற்கனவே ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருந்திருக்கிறார். சூரத் ஓட்டலில் தங்கி இருக்கும் சிவசேனா எம்.எல்.ஏ.க்களை குஜராத் பாஜக தலைவர் சி.ஆர் பாட்டீல் சந்தித்து பேசினார். இந்நிலையில் சிவசேனாவும் சட்டமன்றத்தின் சிவசேனா அணித்தலைவர் மற்றும் சட்டமன்ற கொறடா பதவியில் இருந்து ஏக்நாத் ஷிண்டேயை நீக்கி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே ஏக்நாத் ஷிண்டே எம்.எல்.ஏ.க்களுடன் சென்ற விவகாரத்தில் தங்களுக்கு தொடர்பு இல்லை என்று மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார். மேலும், `ஏக்நாத் ஷிண்டே எங்களுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது தொடர்பான திட்டம் எதையாவது முன் வைத்தால் நாங்கள் நிச்சயம் அதனை பரிசீலிப்போம். சிவசேனா, பாஜக இடையே கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கு சஞ்சய் ராவத்தான் காரணம்’ என்று தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் இப்போது தங்களுக்கு 135 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக பாஜக தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் கர்நாடகா முறையை பின்பற்றி மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இப்பிரச்னை குறித்து உத்தவ் தாக்கரே அரசு உருவாக முக்கிய காரணமாக இருந்த சரத் பவார் டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ``தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு தீர்வு காணப்படும். இப்பிரச்னைக்கு உத்தவ்தாக்கரே தீர்வு காண்பார்” என்று தெரிவித்தார்.