Published:Updated:

திருச்சி: `வாரிசு’ வெல்லமண்டி Vs பரஞ்ஜோதி; அப்செட் மா.செ! -முதல்வர் விசிட்டும் கட்சி சச்சரவுகளும்!

முதல்வர் எடப்பாடி திருச்சி வருகை
முதல்வர் எடப்பாடி திருச்சி வருகை

`வெல்லமண்டி நடராஜனிடம் தலைமை கடுமையாக எச்சரித்தும், மீண்டும் தன் மகனை முன்னிலைப்படுத்திக்கொண்டிருக்கிறார்’ என்ற சச்சரவு எழுந்திருக்கிறது.

`அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கும், மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதிக்கும் இடையே வாக்குவாதம்’, `புறநகர் மாவட்டச் செயலாளர் குமார் கடும் அப்செட்’, `முதல்வரின் பார்வை தன்பக்கம் திரும்பிவிடாதா என்று காத்துக்கிடந்த என்.ஆர் சிவபதி’... என முதல்வரின் திருச்சி வருகை பல்வேறு சச்சரவுகளோடு முடிந்திருக்கிறது. அப்படி என்னதான் சச்சரவுகள் நடந்தன?

எடப்பாடி
எடப்பாடி

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கொரோனா தடுப்புப் பணிகள் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, சென்னையிலிருந்து திருச்சிக்கு (அக். 22-ம்தேதி) முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் வந்தார். பின்னர், அங்கிருந்து கார் மூலம் விராலிமலைக்குச் சென்றார்.

முதல்வர் எடப்பாடி
முதல்வர் எடப்பாடி

அங்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அங்கிருக்கும் ஐ.டி.சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த நுகர்வோர் பொருள்கள் தயாரிப்புப் பிரிவை முதல்வர் திறந்துவைத்தார்.

பின்னர், ஜல்லிக்கட்டுக் காளையை வீரர் ஒருவர் அடக்குவது போன்ற உலோகச் சிலையைத் திறந்துவைத்தார். புதுக்கோட்டை அருகே கவிநாடு கண்மாய்ப் பகுதிக்கு வந்த தமிழக முதல்வருக்கு, காவிரி - குண்டாறு திட்டத்துக்கு நிதி ஒதுக்கி, பணிகளைத் தொடங்கியிருப்பதற்கு நன்றி தெரிவிக்கும்விதமாக 250 மாட்டுவண்டிகள், முளைப்பாரிகளோடு விவசாயிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதல்வருடன் அமைச்சர்கள்
முதல்வருடன் அமைச்சர்கள்

பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிவிட்டு மீண்டும் திருச்சியிலிருந்து சென்னை கிளம்பினார் முதல்வர். இதில்தான் பல்வேறு அரசியல் விவகாரங்கள் நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள் அ.தி.மு.க தரப்பினர்.

என்ன நடந்தது என்று திருச்சி அ.தி.மு.க-வில் உள்விவகாரம் அறிந்தவர்கள் சிலரிடம் பேசினோம். ``சென்னையிலிருந்து வரும் முதல்வரை வரவேற்பதற்கு, திருச்சி விமானநிலையத்துக்குள் 15 பேர் மட்டுமே இருக்க வேண்டும் என்று முதல்வரின் பாதுகாப்புப் படையினர் அறிவுறுத்தியிருந்தனர். அதற்கு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

முதல்வருக்கு மருத்துவர் குழுவினர் வரவேற்பு
முதல்வருக்கு மருத்துவர் குழுவினர் வரவேற்பு

விமானநிலையத்துக்குள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், காமராஜ், வளர்மதி, ரத்தனவேல், புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி, புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் குமார் உள்ளிட்ட பலர் இருந்தார்கள். இந்தநிலையில், முதல்வர் வரும் நேரத்தில் பரஞ்ஜோதியின் ஆதரவாளர்கள் சிலர் வெளியில் நின்றுகொண்டிருந்தபோது அவர்களை பரஞ்ஜோதி உள்ளே வரச் சொல்லிக்கொண்டிருந்தார்.

அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்
அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

அதைப் பார்த்த சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி, `ஏப்பா, 15 பேர்தான் இருக்கணும்னு சொல்லியிருக்காங்க. அது தெரியுமா... தெரியாதா? நீ பாட்டுக்கு ஆட்களை அழைச்சிக்கிட்டு இருந்தா முதல்வர் டென்ஷன் ஆக மாட்டாரா?’ என்று சொல்ல, அதற்கு பரஞ்ஜோதி, `அவர்களும் நமது நிர்வாகிகள்தானே...’ என்று சொல்ல, இருவருக்கும் காரசாரமான விவாதங்கள் நடந்தன. அருகிலிருந்த அமைச்சர்கள், பிறகு பேசிக்கொள்ளலாம் என்று சமரசம் செய்திருக்கிறார்கள்.

இது ஒருபுறமிருக்க, புறநகர் மாவட்டச் செயலாளர் குமார், பெரிய அளவில் ஆட்களைத் திரட்ட முடியாமல் சோர்ந்துபோயிருந்ததாகவும், அவர் அடித்த போஸ்டர்களில் துணை முதல்வரின் படத்தைப் பெரிதாகப் போட்டதாகவும் தகவல் தலைமைக்குச் சென்றிருக்கிறது. முதல்வரின் தனி டீம் போலீஸார் வட்டாரத்தில் இது குறித்து தகவல் கேட்க, அவர்களும் விசாரித்துக்கொண்டிருக்கிறார்களாம். அதைத் தொடர்ந்து அமைச்சர் சிவபதி, முதல்வரின் பார்வை தன்பக்கம் விழுந்து விடாதா என்று முதல்வரைக் கவர்வதற்காகப் பல வேலைகளைச் செய்தார். ஆனால், முதல்வர் கொஞ்சம்கூட சட்டை செய்யவில்லை’’ என்கிறார்கள்.

மாவட்டச் செயலாளர்  குமார்
மாவட்டச் செயலாளர் குமார்

அதைத் தொடர்ந்து, வழக்கத்தைவிட இந்த முறை அமைச்சர் வெல்லமண்டியின் மகன் ஜவஹர்லால் நேரு புகைப்படம்தான் திருச்சி மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தது. இதற்குக் காரணம் அமைச்சருக்கு சீட் கொடுக்கவில்லையென்றாலும் பரவில்லை. தன் மகனுக்கு சீட் கொடுக்க வேண்டும் என தலைமையை நாடிக்கொண்டிருக்கிறார். அதற்காகத்தான் தொகுதி முழுவதும் மகனின் புகைப்படத்தை மக்கள் மத்தியில் பதியவைக்கும் வேலையில் அமைச்சரின் ஆதரவாளர்கள் இறங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

விமான நிலையத்தில் தொண்டர்கள்
விமான நிலையத்தில் தொண்டர்கள்

முன்பே, `வாரிசு அரசியலை ஏன் தூக்கிப் பிடிக்கிறீர்கள்?’ என்று வெல்லமண்டி நடராஜனிடம் தலைமை கடுமையாக எச்சரித்தும், மீண்டும் தன் மகனை முன்னிலைப்படுத்திக்கொண்டிருக்கிறார் என்ற சச்சரவும் எழுந்திருக்கிறது. இதுபோல பல்வேறு சச்சரவுகளுடன் முடிந்திருக்கிறது முதல்வரின் புதுக்கோட்டை விசிட் என்கின்றனர் அ.தி.மு.க-வினர்.

அடுத்த கட்டுரைக்கு