Published:Updated:

"ராணுவ ஆட்சிபோல பிரதமர் செயல்படுகிறார்…" - மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

 மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

`பிரதமர் தடுப்பூசிகள், படுக்கைகள், ஆக்ஸிஜன் தட்டுப்பாடு குறித்தோ கரும்பூஞ்சை பரவல் குறித்தோ எதுவும் கேட்கவில்லை. நாங்கள் அவமானப்படுகிறோம், வெட்கப்படுகிறோம்.’

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் இந்தியா திணறிவருவதுடன், அதை மிகவும் மோசமாக கையாண்ட பிரதமர்கள் பட்டியலில் நரேந்திர மோடி முதல் இடத்தைப் பிடித்திருப்பதும் நாம் அறிந்ததே. இந்தநிலையில், பிரதமருடனான ஆன்லைன் கூட்டத்தில் பிரதமரின் செயல்பாடுகளைக் குறிப்பிட்டு விமர்சித்துள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. “பிரதமர் மாநிலங்களுக்குத் தகுந்த நிதி தருவதும் இல்லை, எந்த முதல்வரையும் பேசவிடுவதும் இல்லை” என மம்தா கூறியுள்ளார். பிரதமருடனான கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு மம்தா பானர்ஜி பேசும்போது, “இது ஒருவழித் தொடர்பு அல்ல, ஒருவழி அவமானம். ஒரே தேசம், எல்லா அவமானங்களும்” எனக் கூறினார். தனக்கும் பிரதமருக்குமான நேரடியான போரில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்திருக்கும் மம்தா, “பிரதமர், முதலமைச்சர்களுக்கு செவி சாய்கா ஏன் மறுக்கிறார், ஏன் இவ்வளவு அஞ்சுகிறார், முதல்வர்கள் கூறுவதைக் கேட்க விரும்பவில்லையென்றால் ஏன் எங்களை அழைக்க வேண்டும், முதல்வர்களைப் பேச அனுமதிக்காமல் சில மாவட்ட நீதிபதிகளை மட்டும் அனுமதித்து எங்களை அவமதிக்கிறார்” என மம்தா கூறினார்.

மோடி
மோடி

``பிரதமர் தடுப்பூசிகள், படுக்கைகள், ஆக்ஸிஜன் தட்டுப்பாடு குறித்தோ, கரும்பூஞ்சை பரவல் குறித்தோ எதுவும் கேட்கவில்லை. நாங்கள் அவமானப்படுகிறோம், வெட்கப்படுகிறோம். பல மாநிலங்கள் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டுள்ள கூட்டத்தில் யாரும் பேச அனுமதிக்கப்படவில்லை. என்ன நினைக்கிறார்கள்... நாங்கள் அவர்களின் தொழிலாளர்களா அல்லது பொம்மைகள் என்றா... அவர்கள் மட்டும் முக்கியமானவர்களா? அவர்கள் கூட்டாச்சி கட்டமைப்பை முற்றிலுமாகச் சிதைக்கின்றனர்” எனக் கூறியுள்ளார். மேலும், “ நான் அனைத்து முதல்வர்களின் சார்பாகப் பேசவில்லை, ஆனால் என்ன நடந்துகொண்டிருக்கிறது… ராணுவ ஆட்சி நடப்பதுபோல சர்வாதிகாரம் நடக்கிறது” நாரதா லஞ்ச வழக்கில் மேற்கு வங்க அமைச்சர்கள் இருவரை சி.பி.ஐ கைதுசெய்ததைச் சுட்டிக்காட்டிய மம்தா, “எங்கள் மாநில விவகாரங்களுக்கு மத்திய அரசின் குழுக்களை அனுப்பியிருக்கும் பிரதமர், உத்தரபிரதேசத்துக்கு எத்தனை குழுக்களை அனுப்பியிருக்கிறார்?” எனக் கேள்வி எழுப்பினார்.

``உத்தரப்பிரதேசத்தில் பிணங்கள் நதியில் மிதக்கின்றன… மிகவும் மோசமான நிலை நிலவுகிறது. கொரோனா மரணப் பதிவுகளை மறைப்பதற்காக பிணங்களை ஆற்றில் மிதக்கவிட்டு கங்கையை மாசுபடுத்துகின்றனர். ஆனால் எதுவும் நடக்கவில்லை என வெளியில் கூறுகின்றனர். இயற்கை இவர்களை மன்னிக்காது” என மம்தா கூறினார். இத்துடன் 'Central Vista' திட்டத்தையும் விமர்சித்தார்.

மம்தா பானர்ஜி.
மம்தா பானர்ஜி.

மம்தாவின் பேச்சை விமர்சித்த பிஜேபி சட்டமன்ற உறுப்பினர் சுவேந்து அதிகாரி (Suvendu Adhikari) , ``மம்தா பிரதமரின் சில கூட்டங்களில் பங்கேற்காமல் பேச வாய்ப்பு தரவில்லை எனக் கூறுகிறார். கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது குறித்து நடைபெற்ற கூட்டத்தைவைத்து அரசியல் செய்கிறார். டிஎம்சி கட்சி இன்னும் வெற்றிக் களிப்பிலிருந்து வெளியே வரவில்லைபோலும்” என ட்விட்டரில் விமர்சித்தார்.

அடுத்த கட்டுரைக்கு