Published:Updated:

தூத்துக்குடி: முதல்வருக்கு உற்சாக வரவேற்பு... பனைமரங்களின் உச்சியில் பறந்த அ.தி.மு.க கொடிகள்!

முதல்வர் எடப்பாடி பழனிச்சமி
முதல்வர் எடப்பாடி பழனிச்சமி

முதல்வருடன் நெருக்கமாக இருப்பதாக, கட்சியினர் மத்தியில் அடிக்கடிக் கூறிக்கொள்ளும் ஆறுமுக நயினாரின் வாள் பரிசளிப்பை அமைச்சர் கடம்பூர் ராஜூவோ, சண்முகநாதனோ எதிர்பார்க்கவில்லை.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், நலத்திட்டங்கள் வழங்குதல் மற்றும் புதிய திட்டப்பணிகள் தொடக்கவிழா ஆகியவற்றில் கலந்துகொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, வருவாய்த்துறை அமைச்சர் உதயக்குமார், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி, எம்.எல்.ஏக்கள் சண்முகநாதன், ராஜவர்மன் ஆகியோர் முதல்வரை வரவேற்றனர். முக்கிய நிர்வாகிகள் மட்டுமே விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

முதல்வர், அமைச்சர் கடம்பூர் ராஜூ உருவம் பொறிக்கப்பட்ட மாஸ்குகள்
முதல்வர், அமைச்சர் கடம்பூர் ராஜூ உருவம் பொறிக்கப்பட்ட மாஸ்குகள்

தூத்துக்குடி மாவட்ட ஆவின் சேர்மன் சின்னத்துரை விமான நிலைய வளாகத்துக்குள் சென்றுவிட்டு, வெளியே வந்த பின்னர் மீண்டும் உள்ளே நுழைய முயன்றபோது போலீஸார் தடுத்தனர். ``அவர் யாரு தெரியுமா... மாவட்ட ஆவின் சேர்மன். அதுமட்டுமில்லாம கட்சியோட மாநில அமைப்புச் செயலாளர். அவரையே உள்ளே விட மாட்டேங்கிறீங்களா... முதல்வர் எடப்பாடி அண்ணாச்சிக்கிட்ட உன்னைச் சொல்லிக் கொடுக்கேன் பார்க்குறியா?” என அ.தி.மு.க தலைமைக்கழகப் பேச்சாளர் கருணாநிதி சத்தமாகப் பேசியதும், ஒரு நிமிடம் அந்த போலீஸ் அதிகாரி அதிர்ச்சிக்குள்ளாகி அமைதியானார். வேணும்னா உள்ளே போங்க சார். அதுக்காக இப்படியெல்லாம் பேசாதீங்க...’’ என அவர் அமைதியாகச் சொல்ல, ``ஒண்ணும் வேண்டாம்” எனச் சொல்லி சற்றுத் தள்ளி நின்றுகொண்டார்கள்.

விமான நிலைய வளாகத்தில் திரண்டிருந்த தொண்டர்கள், பெண்கள், முதல்வர் மற்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ உருவம் பொறிக்கப்பட்டிருந்த வெள்ளை நிற மாஸ்க்குகளை அணிந்திருந்தனர். நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயரான புவனேஸ்வரி, விமான நிலையத்துக்குள் செல்லாமல் வாசலில் ஓர் ஓரமாக தனியாகவே நின்றுகொண்டிருந்தார். நெல்லையைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் அனைவரும் புவனேஸ்வரியைப் பார்த்தபடியே உள்ளே சென்று வந்தனர். அதில் ஒரு பெண் நிர்வாகி, ``முதல்வரைப் பார்க்க உள்ளே வரலயாம்மா?” எனக் கேட்க, ``நான் வாசல்லேயே நின்னுக்கிறேன்” எனச் சொன்னார்.

கோஷம் எழுப்பிய முன்னாள் மேயர் புவனேஸ்வரி
கோஷம் எழுப்பிய முன்னாள் மேயர் புவனேஸ்வரி

முதல் கோஷத்தை புவனேஸ்வரி எழுப்பியதால், மற்ற நிர்வாகிகள் யாரும் கோஷம் எழுப்பவில்லை. கோஷம் எழுப்ப மற்ற நிர்வாகிகளுக்கு இடம் கொடுக்காத வகையில் இருந்தது புவனேஸ்வரியின் தொடர் கோஷம். இதே புவனேஸ்வரிதான், கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டத்தை முடித்துவிட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கிளம்பியபோது, யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென முதல்வரின் காலில் விழுந்து கும்பிட்டார். ``ச்சே... இது நமக்குத் தோணாமப் போச்சே...” எனக் கட்சி நிர்வாகிகளே முணுமுணுக்கும் அளவுக்கு இருந்தது அவரது சாஷ்டாங்கக் கும்பிடு வணக்கம். ``என்னை மேயர் ஆக்கினது அம்மாதான். கட்சியில எனக்கு எந்தப் பொறுப்புமே கொடுக்கலை. என்னைவிட ஜூனியர்கள் பலரும் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டிருக்கிறாங்க.

வாள் பரிசளித்த ஆறுமுக நயினார்
வாள் பரிசளித்த ஆறுமுக நயினார்

முன்னாள் மேயராக இருந்தபோதிலும், மகளிர் அணியில்கூட எந்தப் பொறுப்பும் கிடைக்காமல் இருக்கிறேன்” என புலம்பித் தள்ள, ``சரிம்மா... சீக்கிரம் நல்ல பொறுப்பு கொடுக்கிறேன்” எனச் சொல்லிவிட்டுக் கிளம்பினார் முதல்வர். ஆனால், நான்கு மாதங்களாகியும் புவனேஸ்வரிக்கு தற்போதுவரை எந்தப் பொறுப்பும் அளிக்கப்படவில்லை என்பது தனிக்கதை. முதல்வர் வெளியே வந்ததும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகம் சார்பில் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டு, முதல்வரின் கழுத்தில் ரோஜாப்பூ மாலை அணிவிக்கும் வரை அமைதியாக இருந்த புவனேஸ்வரி, முதல்வருக்கு பச்சைநிற சால்வையை சிவாச்சாரியார்கள் போட்டபோது, ``தமிழகத்தின் நிரந்தர முதல்வர் எடப்பாடியார்’’ என உரக்கச் சொல்ல சிரித்தபடியே புவனேஸ்வரியைப் பார்த்தார். முதல்வர் காரில் ஏறி விமான நிலையத்தைவிட்டுக் கிளம்பும் வரை தனியாக கோஷம் எழுப்பிக்கொண்டிருந்தார்.

தொடர்ந்து முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆறுமுக நயினார், தன் மகன் கிருஷ்ணகுமாருடன் வெள்ளி வாளைப் பரிசாக அளித்தார். முதல்வருடன் நெருக்கமாக இருப்பதாக, கட்சியினர் மத்தியில் அடிக்கடிக் கூறிக்கொள்ளும் ஆறுமுக நயினாரின் வாள் பரிசளிப்பை அமைச்சர் கடம்பூர் ராஜூவோ, சண்முகநாதனோ எதிர்பார்க்கவில்லை. ஆறுமுக நயினார் கட்சியின் எந்த பொறுப்பில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விமான நிலையத்திலிருந்து காரில் வெளியே வந்த முதல்வரின் கார் மீது ரோஜா இதழ்களைத் தூவி ``முதல்வர் வாழ்க” , ``விவசாயிகளின் காவலன் வாழ்க...” என கோஷங்களை கோரஸாக எழுப்பினார்கள். முதல்வரின் கவனத்தை ஈர்த்ததே விமான நிலைய வெளிப்பகுதியில் இருபுறமும் சூழ்ந்துள்ள பனைமரங்களின் உச்சியில் கட்டப்பட்டிருந்த கட்சிக் கொடிகள்தான்.

பனைமரங்களில் கட்டப்பட்ட கட்சிக் கொடிகள்
பனைமரங்களில் கட்டப்பட்ட கட்சிக் கொடிகள்

ஒவ்வொரு மரத்திலும் தலா இரண்டு கொடிகள் பறந்தன. ``அது என்னப்பா ரெண்டு கொடி பறக்குது?” என நெல்லையைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் கேட்ட கேள்விக்கு, ``அது ஒண்ணுமில்லண்ணே... எங்க மாவட்டத்துல வடக்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான கடம்பூராரும் (கடம்பூர் ராஜூ), தெற்கு மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏவுமான சண்முகநாதன் அண்ணாச்சியும் இரட்டைக்குழல் துப்பாக்கிபோல ஒற்றுமையா செயல்படுறதை சொல்லுறவிதமாத்தான் ரெண்டு கொடி பறக்குது” என ஒரு விளக்கத்தைச் சொல்ல, ``சரிதான்யா” எனச் சிரித்தபடியே காரியில் ஏறிக் கிளம்பினார்கள்.

அடுத்த கட்டுரைக்கு