Published:Updated:

எம்.ஜி.ஆரை எதிர்த்த ஜெய்சங்கர்... கருணாநிதியுடன் கைகோத்த டி.ஆர்... அரசியல் அப்போ அப்படி - 5

அரசியல் அப்போ அப்படி
அரசியல் அப்போ அப்படி

வெறுமனே தலைவர்களின் இதயத்தில் மட்டுமே இடம்பிடித்து, அரசியலில் காணாமல்போன பல நட்சத்திரங்களையும் தமிழகம் கண்டிருக்கிறது!

தமிழக அரசியலுக்கும், சினிமா நட்சத்திரங்களுக்குமான பிணைப்பு ஐந்தாறு தசாப்தங்களுக்கும் மேலானதாக இருக்கிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, சிவாஜி கணேசன் உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்களை விட்டுவிடுவோம். அவர்களது அரசியல் பக்கத்தின் சாதனைகளும் சறுக்கல்களும் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

அதேசமயம், இந்தியாவிலேயே சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திரைப்பட நடிகரான எஸ்.எஸ்.ஆர் எனப்படும் எஸ்.எஸ்.ராஜேந்திரன் தொடங்கி, விஜயகுமார், ஜெய்சங்கர், டி.ராஜேந்தர், பாக்யராஜ் எனச் சில நட்சத்திரங்களின் அரசியல் என்ட்ரி பக்கங்களைப் புரட்டினால், அவை அலாதி சுவாரஸ்யங்களையும் சோகங்களையும்கொண்டதாக இருக்கின்றன.

எம்.எல்.ஏ-வான முதல் நடிகர்

திரையுலகில் திருப்பத்தை ஏற்படுத்திய கருணாநிதியின் `பராசக்தி’ திரைப்படம் மூலம் பிரபலமடைந்த எஸ்.எஸ்.ராஜேந்திரனின் தெளிவான உச்சரிப்பும் கணீர் குரலும் ரசிகர்களிடையே அவருக்கு தனி இடத்தைப் பெற்றுத் தந்தன. அண்ணா மீதான ஈர்ப்பால் அவரையே தனது அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டு தி.மு.க மேடைகளில் முழங்கினார்.

தி.மு.க-வுக்காக தமிழகமெங்கும் சென்று நாடகங்கள் நடத்தி நிதி திரட்டிக் கொடுத்திருக்கிறார். அவரது உழைப்புக்கேற்ற அங்கீகாரமாக, தி.மு.க முதன்முறையாக போட்டியிட்ட 1957 தேர்தலில், தேனி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது.

எம்.ஜி.ஆருடன் எஸ்.எஸ்.ஆர்
எம்.ஜி.ஆருடன் எஸ்.எஸ்.ஆர்

அந்தத் தேர்தலில் அவர் தோல்வியடைந்தாலும், பின்னர் 1962-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதன் மூலம், இந்தியாவிலேயே சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திரைப்பட நடிகர் என்ற புகழ் எஸ்.எஸ்.ஆருக்குக் கிடைத்தது.

1970-76 வரை தி.மு.க சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியிருக்கிறார். கருணாநிதி உடனான கருத்து வேறுபாட்டால், அ.தி.மு.க-வில் இணைந்து 1980-ம் ஆண்டு ஆண்டிபட்டி தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1989-ல் அ.தி.மு.க இரண்டு அணிகளாகப் பிரிந்தபோது, ஜெயலலிதா அணி சார்பில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

அண்ணா மீது கொண்டிருந்த அளவு கடந்த அன்பால், அவர் இறந்தபோது தற்கொலை செய்யும் அளவுக்குச் சென்றவர் எஸ்.எஸ்.ஆர். ``அண்ணா இறந்துவிட்டார். என்னால் அந்தத் துயரத்தைத் தாங்க முடியவில்லை. என் தலைவரே இறந்துவிட்டார். இனி நான் உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். எனக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. அதனால் அளவுக்கு அதிகமாக மது குடித்து செத்துவிடுவது என்று முடிவுசெய்து, அதுபோலவே குடித்து கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.

தந்தை பெரியார், என்னைப் பார்க்க மருத்துவமனைக்கு வந்தார். அவர் என்னிடம் ஒரு நிமிடம்கூட பேசவில்லை. கோபமும் கனிவுமாக என்னைப் பார்த்து, ``என் வயது என்ன... உங்கள் வயது என்ன? நான் மருத்துவமனையில் படுத்திருக்க வேண்டும். நீங்கள் என்னை வந்து பார்த்திருக்க வேண்டும்’’ என்று சொல்லிவிட்டு, வேகமாகக் கிளம்பிவிட்டார்.

எஸ்.எஸ்.ஆர்
எஸ்.எஸ்.ஆர்

என்னைச் செருப்பால் அடித்ததுபோல் உணர்ந்தேன். அதற்கு மேல் மருத்துவமனையில் இருக்கவும் என்னால் முடியவில்லை. யாரிடமும் சொல்லாமல் யாருக்கும் தெரியாமல் மருத்துவமனையிலிருந்து சுவர் ஏறி குதித்து வீடு வந்து சேர்ந்தேன். அன்று பெரியார் என்னை அப்படிப் பேசாமல் இருந்திருந்தால், நான் இப்போது உயிரோடு இருந்திருக்க மாட்டேன்“ என மேடை ஒன்றில் பேசும்போது தெரிவித்திருந்தார்.

பின்னாள்களில் அவர், தன்னை அரசியல் அடையாளத்திலிருந்து சாதி அடையாளத்துக்கு மாற்றிக்கொண்டது துரதிர்ஷ்டவசமானது என்றே சொல்லலாம். ஆனாலும், கடவுள் மறுப்பைத் தன் கடைசி மூச்சுவரை கடைப்பிடித்தவர்.

எம்.ஜி.ஆரை எதிர்த்த ஜெய்சங்கர்

நடிகர்கள் அரசியலில் ஈடுபடுவதில் எந்தத் தவறும் இல்லை என்ற கருத்துடன் வலம்வந்தவர்தான் ஜெய்சங்கர். ``வியாபாரிகள், தொழிலதிபர்கள் அரசியலில் ஈடுபடும்போது, கலைஞர்கள் ஈடுபடுவதில் தவறு இல்லை என்பது என் கருத்து. ஆனால், அதேநேரத்தில் நடிகர்களை நம்பி மட்டுமே அரசியல் இருந்துவிடக் கூடாது என்று நினைக்கிறேன்’’ என 1975-ம் ஆண்டு, பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

கூடவே, அரசியலில் தனக்கு அதிக ஆர்வம் இருந்தும், தன்னை யாருமே சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை எனத் தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசுகையில் நடிகர் ஜெய்சங்கர் வருத்தத்துடன் கூறியிருந்தாராம்.

ஜெய்சங்கர்
ஜெய்சங்கர்

எம்.ஜி.ஆ.ர், சிவாஜி கொடிகட்டிப் பறந்த காலத்திலேயே ஆக்‌ஷன் படங்களில் நடித்து, தனக்கென ஒரு பாணியை ஏற்படுத்திக்கொண்டவர் ஜெய்சங்கர். `மக்கள் கலைஞர்’, `தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்’ என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஜெய்சங்கருக்கு இப்படியான ஓர் அரசியல் ஆசை இருந்தாலும், அது வெளிப்பட்டது எம்.ஜி.ஆர் உடனான மோதல் ஒன்றால்தான்.

அப்போது எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகியிருந்தது. இதனால், அவர் நடிப்பதிலிருந்து சுத்தமாக விலகி இருந்தாலும், திரையுலகில் நடக்கும் விஷயங்களும் அவரது காதுகளுக்கு எட்டிக்கொண்டிருந்தன. இந்தநிலையில், ஜெய்சங்கர் திடீரென அன்றைய எதிர்க்கட்சித் தலைவரான கருணாநிதியைச் சந்தித்து தி.மு.க-வுக்கு நெருக்கமானவராக தன்னைக் காட்டிக்கொண்டார்.

தனிப்பட்ட ஒரு விஷயம் காரணமாக எம்.ஜி.ஆர் அவர் மீது கோபமுற்றார். இதனால் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளவும், பாதுகாப்பு கருதியுமே ஜெயசங்கர் இந்த முடிவை மேற்கொண்டதாக அப்போது பேசப்பட்டது. இது எந்த அளவுக்கு உண்மையோ தெரியாது.

எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர்

ஆனால், அடுத்தடுத்து வந்த நாள்களில் கருணாநிதி கதை வசனத்தில் ஜெய்சங்கர் கதாநாயகனாக நடித்த படங்கள் வெளியாகின. அப்படி, 1978-ம் ஆண்டு கருணாநிதி கதை வசனத்தில், அமிர்தம் இயக்கத்தில், ஜெய்சங்கர் கதாநாயகனாக நடித்து வெளியான `வண்டிக்காரன் மகன்' திரைப்படத்தில் எம்.ஜி.ஆரையும் அவரது ஆட்சியையும் விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருந்தது, அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. இதனால் ஜெய்சங்கர் மீது அழுத்தமாக தி.மு.க முத்திரை குத்தப்பட்டது.

தொடர்ந்து அவர் நடித்த படங்களில் தி.மு.க ஆதரவு வசனங்களும், தத்துவப் பாடல்களும் இடம்பெற்றபோதிலும், ஏனோ ஜெய்சங்கரால் அரசியலில் பெரிய அளவில் ஜொலிக்க முடியாமல் போனது. ஒருவேளை தி.மு.க தொடர்ந்து அப்போது எதிர்க்கட்சியாக இருந்ததும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். மேலும், எம்.ஜி.ஆரால் ஏற்பட்ட கசப்பான அனுபவம் போன்று இன்னொரு நடிகர் மூலம் தனக்கு நடந்துவிடக் கூடாது என கருணாநிதியுமே, ஜெய்சங்கருக்குத் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்காமல் தவிர்த்திருக்கலாம்.

அதேசமயம், ஜெய்சங்கருக்குமே எம்..ஜிஆரைப் போன்று அரசியலைத் தனது வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்ளும் சாமர்த்தியம் பிடிபடாமல் போனது. இதனால் ஒத்துவராத அரசியலிலிருந்து விலகிய அவர், பின்னர் சினிமாவில் வில்லன், குணச்சித்திர பாத்திரங்களில் நடித்து, மறைந்தும்போனார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எம்.ஜி.ஆர் புகழ்பாடிய விஜயகுமார்

ஜெய்சங்கரைப்போலவே திடீரென அரசியலில் குதித்தவர்தான் விஜயகுமார். ஜெய்சங்கருக்கு எம்.ஜி.ஆர் உடனான மோதல், தி.மு.க பக்கம் அவரைக் கொண்டு சென்றது என்றால், விஜயகுமாருக்கு ஆரம்பகாலம் தொட்டே எம்.ஜி.ஆருடன் நல்ல நெருக்கம் இருந்தது. மேலும், அவரது வாழ்க்கையின் மிகச் சோதனையான கட்டத்தில் எம்.ஜி.ஆர் செய்த ஓர் உதவியே, அவரை எம்.ஜி.ஆர் பக்கம் அதிகம் ஈர்த்து, அ.தி.மு.க-வில் இணையவைத்தது எனலாம்.

1980-ம் ஆண்டு வாக்கில் விஜயகுமாருக்கு சினிமா வாய்ப்புகள் சற்று குறைந்திருந்த நேரம். அப்போது `நெஞ்சங்கள்’ என்ற சொந்தப் படத்தைத் தயாரிக்கத் தொடங்கியவருக்கு, ஃபைனான்ஸ் பிரச்னையால் படம் பாதியிலேயே நின்றது. விஷயம் அறிந்த எம்.ஜி.ஆர், அப்போது ஒரு ஃபைனான்ஷியரை அனுப்பி அவருக்கு 10 லட்சம் ரூபாய் வரை கொடுக்கச் செய்து உதவினாராம். எம்.ஜி.ஆரின் இந்த உதவிதான் விஜயகுமாரை ரொம்பவே நெகிழவைத்தது.

ஒருகட்டத்தில் எம்.ஜி.ஆருக்கு ரொம்பவே நெருக்கமான அவர், திடீரென அ.தி.மு.க-வில் இணைந்தார். அப்போது ஆட்சியில் இருந்த எம்.ஜி.ஆர், ``அ.தி.மு.க-வில் உள்ளவர்கள் தங்களது கைகளில் இரட்டை இலைச் சின்னத்தை பச்சைக் குத்திக்கொள்ள வேண்டும்" என ஒரு பொதுக்கூட்டத்தில் அறிவித்தார்.

விஜயகுமார்
விஜயகுமார்

அந்தச் சமயம் நடிகர் வி.கே. ராமசாமி தயாரித்த `ருத்ரதாண்டவம்' படத்தின் ஷூட்டிங்கில் நடித்துக்கொண்டிருந்தார் விஜயகுமார். ஷூட்டிங்கின்போது சற்று வெளியே சென்றுவிட்டு சிறிது நேரத்தில் திரும்பி வந்துவிடுவதாக கூறிவிட்டுச் சென்றாராம். ஆனால், சில மணி நேரம் கழித்தும் அவர் வராத நிலையில், தயாரிப்பாளரான வி.கே.ராமசாமி, படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறார். ஷூட்டிங் ஸ்பாட்டே ஏக டென்ஷனில் இருந்தபோது, விஜயகுமார் கூலாக வந்தாராம்.

வந்தவரின் கைகளில் இரட்டை இலைச் சின்னம் பச்சை குத்தப்பட்டிருந்ததைப் பார்த்து அனைவருக்கும் ஆச்சர்யம். தயாரிப்பாளரான வி.கே.ராமசாமிக்கும் வேறு வழியில்லை. கோபத்தை விழுங்கிக்கொண்டு அமைதியாகிவிட்டார் என விஜயகுமாருடன் அப்போது உடன் நடித்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள். விஜயகுமார் இப்படி இரட்டை இலைச் சின்னத்தை பச்சைக் குத்திக்கொண்டது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்தநிலையில், எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்துவிட்டதால், அவருக்காக எழுதப்பட்ட கதைகளில், நடிக்கவிருந்த படங்களில் எம்.ஜி.ஆருக்கு பதிலாக, விஜயகுமார் கதாநாயகனாக நடித்ததாகச் சொல்லப்பட்டது.

அப்படி வெளியான படங்களில் ஒன்றுதான் `மாங்குடி மைனர்.’ விஜயகுமாருடன் மஞ்சுளா நாயகியாக நடித்த இந்தத் திரைப்படத்தில் விஜயகுமார் பாடுவதாக வரும்

`அண்ணா நீங்க நினைச்சபடி நடந்திருக்கு ...

புரட்சித்தலைவர் கையில் நாடிருக்கு...’ என்ற பாடல் அப்போது ஏக பாப்புலர்.

விஜயகுமார்
விஜயகுமார்

அதன் பின்னர் மஞ்சுளாவைத் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டிலான விஜயகுமார், அரசியலிலிருந்தும் ஒதுங்கினார். பின்னர் 80-களின் இறுதியில் மீண்டும் நடிக்கவந்த விஜயகுமார், சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வந்து, 2016-ல் பா.ஜ.க-வில் இணைந்தார். பா.ஜ.க-வில் இணைந்த மற்ற சினிமா பிரபலங்களின் நிலைதான் தற்போது அவருக்கும்!

எம்.ஜி.ஆரை எதிர்த்த டி.ராஜேந்தர்

அது 80-களின் தொடக்கம். `ஒரு தலை ராகம்’, `ரயில் பயணங்களில்’, `உயிருள்ளவரை உஷா’, `தங்கைக்கோர் கீதம்’... என காதல் சோகத்தை மையமாகவைத்து டி.ராஜேந்தர் எடுத்த படங்களெல்லாம் சூப்பர் ஹிட்டடித்தன. இளைஞர்கள் கூட்டம் ஒருபுறம் கொண்டாடித் தீர்த்தது என்றால், பெண்கள் மத்தியிலும் டி.ஆர் படத்துக்கு ஏக வரவேற்பு.

அப்படியான ஒரு காலகட்டத்தில், அதாவது 1984-ல் ஆளும் கட்சியை விமர்சிக்கும் வகையிலான காட்சிகளுடன் வெளியானது `உறவைக் காத்தக் கிளி' திரைப்படம். அப்போது ஆட்சியிலிருந்த எம்.ஜி.ஆருக்குத் தங்களை நெருக்கமானவர்களாக காட்டிக்கொள்ள தமிழ் நடிகர், நடிகைகள், இயக்குநர்களிடையே போட்டா போட்டி காணப்பட்டது. ஆனால், இந்தப் படத்தில் `குடி'யின் அவலத்தையும், மதுவிலக்குக்கு எதிரான அரசின் கொள்கைகளையும் விமர்சிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இது ஆளும்தரப்புக்கு எரிச்சலை ஏற்படுத்த, படம் வெளிவருவதற்கு முன்னரே டி.ஆருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

டி.ராஜேந்தர்
டி.ராஜேந்தர்

இன்னொருபுறம் அந்த படத்தின் தயாரிப்பாளருடனும் ஏதோ மோதல் என்றும், அவர் எம்.ஜி.ஆரிடம் சென்று முறையிட்டதாகவும்கூட ஒரு பேச்சு இருந்தது. எல்லாமும் சேர்ந்து டி.ஆருக்கு நெருக்கடியை அதிகரிக்க, திடீரென அவர் கருணாநிதியைச் சந்தித்து தன்னை தி.மு.க-வில் இணைத்துக்கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் நாள்தோறும் கருணாநிதியைப் புகழ்ந்து அளித்த பேட்டிகளெல்லாம் பத்திரிகைளின் தலைப்புச் செய்திகளாகின. இன்னொரு பக்கம், வழக்கமான ரசிகர்களுடன் சேர்ந்து, தி.மு.க-வினரும் டி.ஆர் படங்களுக்கு கூடுதல் ரசிகர்களாகினர்.

இதனால், டி.ஆரின் முந்தைய படங்களுடன் ஒப்பிடுகையில், சுமாராகவே எடுக்கப்பட்டிருந்த 'உறவைக் காத்த கிளி' திரையரங்குகளில் திருவிழாக் கூட்டத்தை வரவழைத்தது. பல ஊர்களில் இப்படம் ஓடிய திரையரங்குகள் இருந்த இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்குக் கூட்டம் அள்ளியது.

அதைத் தொடர்ந்து வந்த 1984 தேர்தலில் தி.மு.க-வுக்காக டி.ஆர் மேற்கொண்ட பிரசாரத்துக்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது. பல ஊர்களிலும் தி.மு.க வேட்பாளர்களிடையே, அவரைத் தங்களது தொகுதிக்கு பிரசாரம் செய்யவைக்கக் கடும் போட்டி.

இருப்பினும், அந்தத் தேர்தலில், எம்.ஜி.ஆரின் உடல்நலம் பாதிக்கப்பட்டதில் ஏற்பட்ட அனுதாப அலை, அ.தி.மு.க-வுக்கே சாதகமாக அமைந்தது. அதன் பின்னர் வந்த தனது படங்களிலும் உதயசூரியன் மற்றும் கருணாநிதியை மறைமுகமாகப் புகழும் காட்சிகளை இடம்பெறச் செய்தார் ராஜேந்தர்.

டி.ஆர்
டி.ஆர்

அவரது உழைப்புக்குப் பரிசாக, தி.மு.க-வில் கொள்கைபரப்புச் செயலாளர் பதவி கிடைத்தது. 1991-ம் ஆண்டு, தி.மு.க-விலிருந்து விலகி, `தாயக மறுமலர்ச்சி கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கிய டி.ராஜேந்தர், அப்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பர்கூர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1996-ல் கட்சியைக் கலைத்துவிட்டு, மீண்டும் தி.மு.க-வில் இணைந்து, சென்னை பூங்காநகர் தொகுதியில் போட்டியிட்டு தமிழக சட்டமன்ற உறுப்பினரானார். தமிழக சிறுசேமிப்பு திட்ட ஆலோசனைக்குழு துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.

பின்னர் தி.மு.க-வில் தனக்கு மரியாதை இல்லை என்று கூறி, அங்கிருந்து வெளியேறி, மீண்டும் 2004-ம் ஆண்டு `அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கினார். இந்தக் கட்சி இப்போது இருக்கிறதா இல்லையா என்பதை ராஜேந்தரே சொன்னால்தான் உண்டு.

பாக்கியம் இல்லாத பாக்யராஜ்

திரையுலகில் சக்கைப்போடு போட்ட இயக்குநர், நடிகர் கே.பாக்யராஜை தனது கலையுலக வாரிசாக அறிவித்தார் எம்.ஜி.ஆர். 1983-ல் வெளியாகி சில்வர் ஜூப்ளி கொண்டாடிய பாக்யராஜின் `முந்தானை முடிச்சு' படத்தின் வெற்றிவிழா மேடையில்தான் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். அந்தப் படத்தில் எம்.ஜி.ஆர் கொண்டு வந்த சத்துணவு திட்டத்தைப் புகழும் வகையிலான காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. எம்.ஜி.ஆரின் இந்த அறிவிப்புக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்திருக்கலாம்.

பாக்யராஜ்
பாக்யராஜ்

ஆனால் அதற்கு முன்பிருந்தே எம்.ஜி.ஆர் மீது மிகுந்த அபிமானம் கொண்டிருந்த பாக்யராஜ், `கலையுலக வாரிசு’ அறிவிப்புக்குப் பின்னர் அவரைத் தனது அரசியல் குருவாகவும் வரித்துக்கொண்டார். அதற்கு பின்னர் அவர் எடுத்த `தாவணி கனவுகள்' படத்தில் இடம்பெற்ற `ஒரு நாயகன் உதயமாகிறான்...' என்று தொடங்கும் பாடலில் இடம்பெற்ற

`நினைத்ததை யார் முடிப்பவன் சொல்

அவனிடம் நான் படித்தவன்தான்’

என்ற வரியும்,

`எங்க வீட்டுப் பிள்ளை என்று

தாய்ல்குலம்தான் உன்னைக் கண்டு

எந்த நாளும் சொல்லும் வண்ணம்

வள்ளல்போல வாழ வேண்டும்

உள்ளங்களை ஆள வேண்டும்’ என்ற வரிகளும் எம்.ஜி.ஆர் புகழ் பாடின.

இந்தநிலையில், எம்.ஜி.ஆர். ஆட்சியிலிருந்தபோதே அ.தி.மு.க-வில் இணைந்த அவர், எம்.ஜி.ஆர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோது வந்த 1984 சட்டசபைத் தேர்தலில், தி.மு.க-வுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்த டி.ராஜேந்தருக்கு டஃப் கொடுக்கும் வகையில் களமிறங்கினார்.

எம்.ஜி.ஆரின் மரணத்துக்குப் பிறகு `எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற தனிக்கட்சி தொடங்கினார். ஆனால் அதற்குப் போதிய ஆதரவு கிடைக்காத காரணத்தால், அதைக் கலைத்துவிட்டு தி.மு.க-வில் இணைந்தார். ஆனால், தி.மு.க அவருக்கு ஒத்துவரவில்லை. மீண்டும் அ.தி.மு.க-வில் இணைந்தும் சரிப்பட்டு வராத நிலையில், அப்படியே அரசியலைவிட்டு ஒதுங்கிக்கொண்டார். அரசியல் வாழ்க்கையைப் பொறுத்தவரை பாக்யராஜுக்கு பாக்கியம் இல்லாமலேயே அமைந்துவிட்டது.

இதே போன்று அ.தி.மு.க-வில் சேர்ந்த ராமராஜன், எஸ்.எஸ்.சந்திரன் எம்.பி-ஆகவும், ராதாரவி எம்.எல்.ஏ-ஆகவும், தி.மு.க-வில் சேர்ந்த நெப்போலியன் மத்திய இணையமைச்சராகவும், எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ-ஆகவும் வர முடிந்தது அவர்களைப் பொறுத்தவரை அதிர்ஷ்டமான ஒன்றுதான்.

வெறுமனே தலைவர்களின் இதயத்தில் மட்டுமே இடம்பிடித்து, அரசியலில் காணாமல்போன பல நட்சத்திரங்களையும் தமிழகம் கண்டிருக்கிறது!

பகுதி 4: செல்ல க்ளிக் செய்க...

பாடம் கற்ற ஜெயலலிதா... பரிதாப வைகோ... பலே ராமதாஸ்! - அரசியல் அப்போ அப்படி - 4
அடுத்த கட்டுரைக்கு