Published:Updated:

`யாருக்காகவும் என் புரோகிராமை மாத்த முடியாது!'- எம்.எல்.ஏ பேச்சால் சீறிய அமைச்சர் விஜயபாஸ்கர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ராசியால்தான், இன்று கர்நாடகாவில் மழை பெய்கிறது. காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு வருகிறது.

அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு பேசினார், " உலகில் பஞ்சபூதங்கள் நிலைத்திருப்பது போன்று, அ.தி.மு.க எல்லா காலத்திலும் நிலைத்து நிற்கும். அரசியல் பயணம் என்பது ஆர்ப்பரித்து எழுகின்ற கடல் அலையிலே கப்பலைச் செலுத்துவது போன்றது. அ.தி.மு.க என்ற கப்பல் அப்படியான சூழலில்தான் பயணம் செய்கிறது. புயல் அடிச்சாலும், மழை பெய்தாலும் கவலையேபடாமல் போய் கொண்டே இருக்க வேண்டும். புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி என்ற கலங்கரை விளக்கம் நமக்கு வழிகாட்டிக்கொண்டே இருக்கிறது. ஆனாலும், போகிற போக்கில் சில நேரங்களில் சூறாவளி வரும், திமிங்கிலம்கூட வரும் அப்போது கப்பல் லேசாக ஆடும்.

அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
ஆர்.வெங்கடேஷ்

கப்பல் ஆடுகிறதே என்று கப்பலை விட்டுக் குதித்துவிடக் கூடாது. பயணிப்பவர்களிடம் குதிச்சிறாதே, குதிச்சிறாதே என்று நாமும் தொடர்ந்து சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோம். 90 சதவிகிதம் அ.தி.மு.க தொண்டர்கள் கப்பலில் இருந்து குதிக்காமல் பயணம் செய்கிறார்கள். ஆனாலும், ஒரு சிலரோ கப்பலை விட்டுக் குதித்துவிட்டனர். குதித்தவர்கள் கரையேறியதாக வரலாறே இல்லை. அப்படிக் கப்பலில் இருந்து குதித்தவர்களில் ஒருவர்தான் மணமேல்குடி கார்த்திகேயன். அவர் ஒரு படகை எடுத்துக் கொண்டு தன்னுடன் வருபவர்களைக் கப்பலுக்கு முன்னால் சேர்த்துவிடுவதாகச் சொல்லி நம்ப வைத்து ஏற்றிக்கொண்டு சென்றார்.

ஆனால், அவரை நம்பி ஏறிச் சென்றவர்களை இன்று நடுக்கடலில் தத்தளிக்க விட்டு, ஆதாயம் தேடிச் சென்றுவிட்டார். ஆனாலும், அ.தி.மு.க என்ற கப்பல், நடுக்கடலில் தத்தளிப்பவர்களைக் கரை சேர்க்க இப்போதும் தயாராக இருக்கிறது. மணமேல்குடி கார்த்திகேயனை அ.தி.மு.க-வில் இணைக்கக்கோரி 5 அமைச்சர்கள் கையெழுத்துப்போட்டு கொடுத்திருக்கிறோம். அவர் யாருக்கும் விசுவாசமாக இல்லை.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ராசியால்தான், இன்று கர்நாடகாவில் மழை பெய்கிறது. காவிரியில் தண்ணீர் கரை புரண்டு வருகிறது. மேட்டூர் அணை பலமுறை நிரம்பி கடைமடைவரை தண்ணீர் கிடைக்கிறது. மேட்டூரில் தண்ணீர் திறக்கப்பட்ட 22-வது நாளே கடைமடைப் பகுதியான நாகுடி, மணமேல்குடிக்கும் தண்ணீர் வந்துள்ளது.

நலத்திட்ட உதவி வழங்குதல்
நலத்திட்ட உதவி வழங்குதல்

ஆனால், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியிலோ மழையே வராது என்பது யாவரும் அறிந்ததே. அ.தி.மு.க ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

முன்னதாக, அறந்தாங்கியில் நடைபெற்ற 687 பயனாளிகளுக்கு ரூ.1.24 கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார். நலத்திட்டம் வழங்கும் விழா மற்றும் மணமேல்குடியில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி கலந்துகொள்ளவில்லை. ` உடல்நிலை சரியில்லாததால் இந்த விழாக்களை அடுத்த வாரம் வைத்துக்கொள்ளலாம்' என்று விஜயபாஸ்கரிடம் எம்.எல்.ஏ கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. ` யாருக்காவும் நிகழ்ச்சிகளை மாற்ற முடியாது' என்று அமைச்சர் கூறிவிட்டாராம். இதனால், எம்.எல்.ஏ கடுமையான அப்செட்டில் இருப்பதாகவும் அதனால்தான் விழாவில் கலந்துகொள்ளவில்லை என்று எம்.எல்.ஏ-வின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.