Published:Updated:

ஐபேக் vs தி.மு.க சண்டையை விஞ்சும் சங்கையா vs மக்கள் நீதி மய்யம்! - என்ன நடக்கிறது ம.நீ.ம-வில்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்

எப்படி ஐபேக் நிறுவனம் தி.மு.க-வின் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் கணக்கிட்டு தாங்கள் விரும்பியவாறு செயல்படுத்த விரும்புகிறது என்ற குற்றச்சாட்டுகள் உள்ளனவோ, அதைவிட 100 மடங்கு சங்கையா சொல்யூஷன்ஸ் ம.நீ.ம கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் அவமானப்படுத்துவதாகப் புகார் எழுந்துள்ளது.

தேர்தல் நெருங்கும் வேலையில் அனைத்துக் கட்சிகளும் தங்களுக்கென சில பல வியூகங்களை வகுக்கும். சிறிய கட்சிகளாக இருந்தால் எப்படி அதிக சீட்டுகளைக் கூட்டணி கட்சியின் தலைமயிடம் கேட்டுப் பெறுவது என்பதற்கும் பெரிய கட்சிகளாக இருந்தால் அதிக இடங்களில் எப்படி தங்கள் கட்சியை வெற்றி பெறச் செய்வது என்பதற்கும் தங்களுக்குள்ளாக வியூகக் கணக்குகளை வகுக்கும். அதற்காக மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், நேரடியான மக்கள் சந்திப்பு, வாணவேடிக்கை எனத் தேர்தல் களம் திருவிழா களமாக மாறும்.

இவை எல்லாம் பழைய டெக்னிக். தற்போதை டிஜிட்டல் யுகத்தில் இவை மட்டுமே போதாது; இந்த வியூகங்களுக்கு டிஜிட்டல் சார்ந்த அரசியல் வல்லுநர்கள் உதவியும், பணியாற்ற ஒரு நிறுவனமும் தேவைப்படுகிறது. இதுதான் தற்போதைய அரசியல் சார்ந்த டிரெண்டிங் பிஸினஸ். அதுவும் பல கோடிகள் சுழற்சி ஆகும் துறையாக மாறிவருகிறது.

ஸ்டாலின், பிரஷாந்த் கிஷோர்
ஸ்டாலின், பிரஷாந்த் கிஷோர்

இதன் அடிப்படையில்தான் தி.மு.க-வுக்கு இந்தியாவிலேயே பிரபலமான அரசியல் வல்லுநராகக் கருதப்படும் பி.கே எனும் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஐபேக் நிறுவனமும் அ.இ.அ.தி.மு.க-வுக்கு சுனில் (கடந்த காலங்களில் தி.மு.க-வுக்காக வேலை பார்த்தவர்) தலைமையிலான குழுவும் எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க ஒப்பந்தம் போட்டது என்பது ஏற்கெனவே நாம் அறிந்ததுதான்.

இதேபோல புதிதாகக் கட்சி தொடங்கி நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற்ற கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துக்கும் ஒரு வல்லுநர் குழு இயங்கிக்கொண்டிருக்கிறது. அந்த நிறுவனத்தின் பெயர் `சங்கையா சொல்யூஷன்ஸ்'. இந்த நிறுவனத்துக்கு உரிமையாளர்களாக உள்ளவர்கள் விஜய் டிவி மகேந்திரன் என்பவரும் அதே விஜய் டிவியில் எப்போதோ வேலை பார்த்த சுரேஷ் ஐயர் என்பவரும்தான் என்கிறார்கள் ம.நீ.ம நலம் விரும்பிகள்.

சரி, இதில் என்ன பிரச்னை என்றால், எப்படி ஐபேக் என்ற நிறுவனம் தி.மு.க-வின் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் கணக்கிட்டுத் தாங்கள் விரும்பியவாறு செயல்படுத்த விரும்புகிறது என்ற குற்றச்சாட்டுகள் உள்ளனவோ, அதைவிட 100 மடங்கு சங்கையா சொல்யூஷன்ஸ் ம.நீ.ம கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் அவமானப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. இதைப்பற்றி பெயர் குறிப்பிட வேண்டாம் எனக் கூறிவிட்டு விஷயத்தை பகிர்ந்த ம.நீ.ம ஆதரவாளர் ஒருவர், `கட்சி தொடங்கியபோது சாதாரணத் தொண்டனும் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் அலுவலகத்தில் இருந்தால் சந்திக்க முடியும். நாம் சொல்லும் கருத்துகளைக் காது கொடுத்து கேட்பார், நல்லவற்றை ஏற்றுக்கொள்வார், செயல்படுத்துவார். அதற்கான அங்கீகாரத்தையும் உரியவர்களுக்கு அளிப்பார்.

ம.நீ.ம அலுவலகத்தில் கமல்ஹாசன்
ம.நீ.ம அலுவலகத்தில் கமல்ஹாசன்

ஆனால், இன்று நிலைமையே வேறாக உள்ளது. யார் யாரோ தொலைபேசியில் தொடர்பு கொள்கிறார்கள்; சங்கையா சொல்யூஷன்ஸில் இருந்து பேசுகிறோம் என்கிறார்கள். இந்தத் தகவல் சேகரிக்க வேண்டும், அந்தத் தகவல் சேகரிக்க வேண்டும் என்கிறார்கள். அதுவும் உடனே வேண்டும் என்கிறார்கள். இந்தக் கொரோனா பேரிடர் காலத்தில் எங்களின் வாழ்க்கை நிலை என்ன என்பதைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை. தகவல் கிடைக்கத் தாமதமானால் கடிந்துகொள்கிறார்கள். வயதுக்குக்கூட மரியாதை கொடுத்துப் பேச மறுக்கிறார்கள். இவை எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு கேட்ட தகவல்களை எங்கள் கை காசு போட்டு செலவு செய்து அனுப்பி வைத்தால், அது என்னவோ சங்கையாவே நேரடியாக வந்து தகவல் சேகரித்துவிட்டுச் சென்றது போல் ஒரு மாய பிம்பத்தைத் தலைவர் முன்னிலையில் உருவாக்கிவிடுகிறார்கள்.

அதேபோல் கட்சியின் தலைமை அலுவலத்துக்குள் கட்சியிலிருந்து யார் சென்றாலும் மரியாதையோடு நடத்துவார்கள். சங்கையா வந்த பின்பு, யார் உள்ளே சென்றாலும் கொஞ்சம் கூட மதிப்பே இல்லை. கட்சியின் வாட்ஸ்அப் குரூப், ஜூம் மீட்டிங் என அனைத்துமே சங்கையா கட்டுப்பாட்டில் உள்ளது. அனைத்து கட்சி மீட்டிங்குகளுக்கும் அவர்கள் தவறாமல் ஆஜாராகி விடுகின்றனர். கட்சி மீட்டிங்கில் இவர்கள் எதற்கு எனப் புரியவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதை விட உச்சக்கட்டமாகக் கட்சியின் பொருளாளர் பதவியைப் பிடித்து வைத்துள்ளனர். இவர்களுக்குத் தேவையான இடத்தில் கையெழுத்து இட மட்டும் ஒருவருக்குப் பொறுப்புக் கொடுத்து வைத்துள்ளனர். அவர்களிடம் கூறி தங்களுக்குத் தேவையான நிதியை வாங்கிக் கொள்கின்றனர். கேள்வி கேட்டால் அந்தப் பொறுப்பிலிருந்து மாற்றும் படலமும் நடக்கிறது. சில காலமாய் தலைவர் கமல்ஹாசன் அவர்களையே இவர்கள் டம்மியாகத்தான் வைத்துள்ளனர். இவர்கள் சொல்வதை மட்டுமே கேட்கக்கூடிய அளவுக்கு மாற்றி வைத்துள்ளனர். சங்கையா சொல்யூஷன்ஸை கமல் சார் தவிர யாருமே ஆதரிப்பது இல்லை அதற்குக் காரணம் அந்த நிறுவனத்தின் அகங்காரம்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

எங்களுக்குத் தலைவர் மீது மிகப்பெரிய மதிப்பு ஏற்பட முக்கிய காரணம், இதுவரை எந்த நிர்வாகியிடமும் கட்சிக்காக இவ்வளவு கொடுங்கள் என்று அவர் சொன்னதே கிடையாது. உங்களால் இயன்றதைக் கட்சிக்காகச் செய்யுங்கள், அதற்கு முன் உங்கள் குடும்பத்தைப் பாருங்கள். நான் கட்சியைப் பார்த்துக் கொள்கிறேன் என்றார். இதுநாள் வரை அவர் உழைப்பில் கிடைத்த பெரும் தொகையைக் கட்சிக்காக செலவு செய்கிறார்.

ஆனால், ஏதாவது ஒரு கணக்கைக் காட்டி தலைவரிடம் பெரும் தொகையை மாதா மாதம் பெற்று விடுகிறது இந்தக் கும்பல். தலைவரை இவர்கள் ஒரு பணம் கறக்கும் இயந்திரமாகப் பயன்படுத்துவதுதான் எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

ஓப்பனா சொல்லணும்னா சங்கையா சொல்யூஷன்ஸ் டீம் பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் மாதிரிதான். ஐபேக் நிறுவனத்துக்கு தலைமை பிரஷாந்த் கிஷோர். ஆனால், சங்கையா டீமோட தலைவர் கமல்ஹாசன்தான்.
ம.நீ.ம மாநிலச் செயலாளர் (ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு) முரளி அப்பாஸ்

முன்பெல்லாம் எந்தப் பிரச்னையாக இருந்தாலும் தலைமையிலிருந்து அறிக்கைகளும் தலைவரின் ட்வீட்டும் அதிரடியாக வரும். அவை கட்சியைப் பொது நீரோட்டத்தில் வைத்திருக்கும். செய்திகளிலும் கட்சியின் பெயரும் தலைவர் கமல்ஹாசன் பெயரும் அடிக்கடி வரும். கட்சித் தொண்டர்களை மென்மேலும் கட்சிப் பணி செய்திட அவை ஊக்கப்படுத்தும். ஆனால், இப்போது நிகழ்வு நடந்து பல மணி நேரம் கழித்து அல்லது சில நாள்கள் கழித்து அறிக்கை வருகிறது. சில நிகழ்வுகளுக்கு அறிக்கையே வருவதே இல்லை.

அப்படி வரும் அறிக்கைகள் கூட பல எழுத்துப் பிழைகளுடன் வருகிறது. குறிப்பாக, சமீபத்தில் தலைவர் கமல்ஹாசன் பெயரில் வெளியாகிய அறிக்கையை எடுத்துப் பாருங்கள். எவ்வளவு எழுத்துப் பிழைகள், எவ்வளவு வாக்கியப் பிழைகள்? ஒரு அறிக்கையைக் கூடத் தவறில்லாமல் தயாரிக்கத் தெரியாத, அரசியலில் ஆனா, ஆவன்னா கூடத் தெரியாத ஒரு குழுவை வைத்துக்கொண்டு எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் எம்.எல்.ஏ சீட் அல்ல, அடுத்த உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் வந்தாலும் ஒரு வார்டு கவுன்சிலராகக்கூட யாராலும் ஆக முடியாது என்பதே உண்மை.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

தலைவரிடம் மேல் மட்ட நிர்வாகிகள் உட்பட யாருமே தனியாகப் பேசமுடியாதபடி உருவாக்கி வைத்துள்ளதுதான் இந்தக் கும்பலின் தந்திரம். அதுமட்டுமல்லாமல் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரிடமே மற்ற நிர்வாகிகளைப் பற்றித் தவறாகக் கூறி கலகம் மூட்டும் வேலையும் அவ்வப்போது இந்தக் கும்பல் செய்துகொண்டு இருக்கிறது. உங்களைவிட அவருக்குக் கட்சியில் செல்வாக்கு உயர்கிறது, அவரிடம் பணபலமும் உள்ளது; உங்களை அவர் எளிதாக ஓரம் கட்டிவிடுவார் என்று கூறி சண்டை மூட்டும் வேலையையும் தெளிவாகச் செய்து வருகிறது.

இவை அனைத்தையும் சகித்துக்கொண்டு கட்சியில் பலர் நீடிக்க ஒரே காரணம் கமல்ஹாசன் என்கிற ஒற்றை மனிதர் மட்டுமே, அவர் முழுமையான ஒரு ஜனநாயகவாதி, காந்திய கொள்கையில் நடப்பவர், என்றாவது ஒரு நாள் இந்தக் கும்பலின் சுயரூபம் தெரியவரும் அப்போதுதான் நாங்கள் சொல்லும் `நாளை நமதே' என்ற சொல் உயிர் பெறும்" என்று முடித்துக்கொண்டார்.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச் செயலாளர் (ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு) முரளி அப்பாஸிடம் பேசினோம். ``சங்கையா சொல்யூஷன்ஸுக்கு இதுதான் முதல் புராஜக்ட். அந்த டீமில் திட்டமிடுதலுக்கான நபர்கள் இருக்கிறார்கள். தேர்தல் வியூகம் அமைப்பதுதான் அவர்களது பணி. எங்கள் கட்சி, தேர்தலுக்குப் புதுசு. கட்சியில் இருக்கும் சிலருக்கும் வருகிற தேர்தல்தான் முதல் தேர்தல் என்கிற அளவில் இருக்கிறது. கிட்டத்தட்ட பிரஷாந்த் கிஷோர் மற்ற கட்சிகளுக்குச் செய்யும் பணி போன்றுதான் சங்கையா சொல்யூஷன்ஸூம் மக்கள் நீதி மையத்துக்குச் செய்கிறது. அவர்களுக்கும் முன் அனுபவம் கிடையாது. ஆனால், திறமையானவர்கள். இந்த நிறுவனத்தை உருவாக்கினதே தலைவர் (கமல்ஹாசன்) தான்.

முரளி அப்பாஸ்
முரளி அப்பாஸ்

அவர்களின் திறமையைப் பார்த்துதான் தலைவர் அவர்களைப் பயன்படுத்துகிறார். தகவல்கள் திரட்டுவதில் அவர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும். அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றினால் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனப் பணியாற்றுகிறோம்” என்றவரிடம், கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் அவர்கள் மீது அதிருப்தியில் இருப்பதாக வெளியாகும் தகவல்கள் குறித்துக் கேள்வி எழுப்பினோம்.

`தேர்தல் வித்தகர் பிரசாந்தை ஏன் நீக்கினார் கமல்?!'- மக்கள் நீதி மய்யம் சொல்லும் அதிர்ச்சிக் கணக்கு

தொடர்ந்து பேசிய முரளி அப்பாஸ், ``முன்னரே குறிப்பிட்ட மாதிரி, இந்தக் கட்சியில் இருக்கும் பலருக்கு இது முதல் தேர்தல். இன்னும் சொல்லப்போனால் முதல் அரசியல் கட்சி. அப்போ திட்டமிடுதல் என்பது கட்டாயத் தேவை ஆகிறது. அப்படித்தான் பிரஷாந்த் கிஷோர் உள்ளே வந்தார். ஆனால் அவரின் திட்டமிடுதல் எல்லாமே வேறு மாதிரியாக இருந்தது. ஏற்கெனவே உள்கட்டமைப்போடு இருக்கும் பாரம்பர்யக் கட்சிகளுக்கு ஓகே... ஆனால், எங்கள் கட்சிக்குச் சரிவரவில்லை. அதனால்தான் அவர்களிடம் இருந்து விலகினோம். நமது தேவைக்கு ஏற்ப திட்டமிடுதலுக்காக தன் சங்கையா சொல்யூஷன்ஸ் உருவாக்கப்பட்டது.

கமல் - பிரஷாந்த் கிஷோர்
கமல் - பிரஷாந்த் கிஷோர்

சங்கையா சொல்யூஷன்ஸுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் ஆரம்பத்தில் சில சிக்கல்கள் எழுந்தது உண்மைதான். ஆனால், அது பிரச்னை என்று சொல்ல முடியாது. ஒரு கட்சி என்றால், தலைவர் சொல்வதைக் கேட்டு நிர்வாகிகள் செயல்படுவார்கள். தலைவர் எப்போதாவது மாவட்டத்தில் என்ன நடக்கிறது போன்ற கேள்விகளை எழுப்புவார். சில தகவல்களைக் கேட்பார்கள். ஆனால், இது போன்ற திட்டமிடுதல் அணி, தினமும் அவர்களிடம் பேசுகிறது. இன்றைக்கு என்ன செய்தோம் என அறிக்கை கேட்கிறது. இதனால் சில நிர்வாகிகள் அதிருப்தி அடைந்தார்கள், எரிச்சல் அடைந்தார்கள். ஆனால், இந்தத் திட்டத்துக்குப் பின்னால் இருப்பதே தலைவர் கமல்ஹாசன்தான் எனத் தெரிந்த பிறகு, பம்பரமாக வேலை செய்கிறார்கள். ஆரம்பகால பிரச்னைகள் எல்லாம் தற்போது சரி செய்யப்பட்டுவிட்டன.

வெளிப்படையா சொல்லணும்னா சங்கையா சொல்யூஷன்ஸ் டீம் பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் மாதிரிதான். ஐபேக் நிறுவனத்துக்கு தலைமை பிரஷாந்த் கிஷோர். ஆனால் சங்கையா டீமோட தலைவர், கமல்ஹாசன்தான். அவருடைய திட்டங்களைத் திட்டமிட்டுச் செயல்படுத்துவதுதான் அவர்கள் பணி. சங்கையா சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் அலுவலக முகவரி, நம்ம மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலக முகவரிதான். இதெல்லாம் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் தெரிந்த பின்னர், அவர்கள் இன்னும் வேகமாகச் செயல்படுகிறார்கள்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்
விகடன்

மற்றபடி அறிக்கையில் பிழை இருக்கிறது என்பதை நாங்களும் கவனித்தோம். அது இயல்பாக ஏற்படுவதுதான். கருத்தைப் பெற்று, டைப் செய்வதில் வந்த பிழைகள்தான். இதற்கும் பிரச்னைகளுக்கும் தொடர்பு இல்லை. இனி பிழை இல்லாதவாறு கவனமாகச் செயல்படச் சொல்லி இருக்கிறோம்” என்றார் விரிவாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு