Published:Updated:

`தி.மு.க கொடியைக் கிழித்தெறிந்த நிர்வாகிகள்!’ -அடிதடியில் முடிந்த கருணாநிதி பிறந்தநாள் விழா

தி.மு.க கொடியைக் கிழித்தெறியும் நபர்
தி.மு.க கொடியைக் கிழித்தெறியும் நபர்

ஆம்பூர் அருகே கருணாநிதி படத்துக்கு மரியாதை செலுத்துவதில் ஏற்பட்ட மோதலில், தி.மு.க-வின் கொடியை தி.மு.க-வினரே கிழித்து எறிந்தனர்.

கருணாநிதியின் பிறந்தநாள் விழாவைத் தமிழகம் முழுவதும் தி.மு.க-வினர் இன்று கொண்டாடினர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த அரங்கல்துருகம் கிராமத்திலும் கருணாநிதியின் படத்தை வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர், கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றினர். அப்போது, தி.மு.க-வின் இரண்டுத் தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றிய நிலையில், இருத் தரப்பினரும் அடிதடியில் ஈடுபட்டனர். கிளைச் செயலாளர் பழனி என்பவருடைய மகன் பிரேம்குமாரை எதிர்த் தரப்பினரான மாவட்ட பிரதிநிதி முரளியின் தாய், மனைவி உள்ளிட்டோர் சேர்ந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.

காயமடைந்தவரை பார்வையிட்ட எம்.எல்.ஏ வில்வநாதன்
காயமடைந்தவரை பார்வையிட்ட எம்.எல்.ஏ வில்வநாதன்

மேலும், கொடிக் கம்பத்தில் ஏற்றப்பட்டிருந்த தி.மு.க-வின் கொடியை மாவட்ட பிரதிநிதியான முரளியின் தம்பி இளையராஜா என்பவர் கிழித்து எறிந்தார். கம்பத்துக்கு அடியில் இருந்த கருணாநிதியின் படத்தையும் அவர் தூக்கிச்சென்றார். மோதலில் காயம் ஏற்பட்டதாகக் கூறி இருத் தரப்பிலும் சிலர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் தொற்றிக் கொண்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை ஆம்பூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ வில்வநாதன் நேரில் சென்று பார்வையிட்டார்.

தகராறுக்கு காரணமான ஒருத் தரப்பினரை கடுமையாகக் கண்டித்தார் வில்வநாதன். இதுபற்றி, அரங்கல்துருகம் கிராமத்தைச் சேர்ந்த தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகியிடம் கேட்டபோது, ``கிளைச் செயலாளரும், மாவட்ட பிரதிநிதியும் எதிரெதிர் வீடுகளில் வசிக்கிறார்கள். அவர்களின் இரண்டு குடும்பத்திற்குள் உள்ள முன் விரோதம்தான் தலைவரின் பிறந்தநாளில் பிரச்னையாக உருவெடுத்தது. ஒருத் தரப்பினர் போட்டிருந்த பந்தலை இன்னொருத் தரப்பினர் பிரித்து எடுத்ததால், மோதல் ஏற்பட்டது’’ என்றார்.

காயமடைந்தவரை பார்வையிட்ட எம்.எல்.ஏ வில்வநாதன்
காயமடைந்தவரை பார்வையிட்ட எம்.எல்.ஏ வில்வநாதன்

ஆம்பூர் எம்.எல்.ஏ வில்வநாதனிடம் பேசினோம். ``இரண்டுத் தரப்பினரும் இணைந்து மரியாதை செலுத்துவதில் தகராறு ஏற்பட்டது. முதலில் கட்சி கொடியை ஏற்றிய மாவட்ட பிரதிநிதியின் மூக்கு உடையும் அளவுக்கு எதிர்த் தரப்பினர் தாக்கியுள்ளனர். இரண்டுத் தரப்பினரையும் நேரில் பார்த்து அறிவுறுத்தியிருக்கிறேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அங்கிருந்தே காவல் நிலையத்தில் பரஸ்பர புகாராகக் கொடுத்துள்ளதாக தெரிகிறது. பேசித் தீர்க்க வேண்டியதை, பெரிதுபடுத்தியிருக்கிறார்கள்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு