Published:Updated:

கோவை: `பெருமை பேசறேன்னு தவறா பேசாதீங்க..!' - காட்டமான முதல்வர்

நீட் தேர்வு மற்றும் மருத்துவப் படிப்பு தொடர்பாக கோவை செய்தியாளர்களின் கேள்விகளால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோபமடைந்தார்.

கோவை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ``நீட் தேர்விலிருந்து யாருக்கும் விலக்கு கொடுக்கப்படவில்லை. நீட் தேர்வு கூடாது என்பதுதான் அ.தி.மு.க- வின் நிலைப்பாடு. இந்தியாவிலேயே `நீட்’-ஐ எதிர்த்துப் போராடும் ஒரே மாநிலம் தமிழகம்தான். நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதால்தான் 7.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இட ஒதுக்கீட்டின் மூலம் 313 பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்திருக்கின்றனர். நான் கிராமத்தில் படித்து வந்தவன் என்பதால், அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என அறிந்து உள் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது.

சசிகலா சிறையிலிருந்து வெளியில் வருவது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஆன்லைன் லாட்டரி தடை குறித்துச் சட்டம் இயற்றியிருக்கிறோம். அதை மத்திய அரசு நடைமுறைப்படுத்துவார்கள். அவர்களிடம் முழு அதிகாரம் இருக்கிறது. வடகிழக்குப் பருவமழை பாதிப்பைச் சரிசெய்யவும், பருவமழையால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது. புதிய கல்விக் கொள்கை குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டிருக்கிறது. குழு அறிக்கையைப் பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`நீட்’-ஐ கொண்டு வந்தது காங்கிரஸ் ஆட்சியில். அப்போது தி.மு.க அவர்களுடன் கூட்டணியில் இருந்தது. அதை யாரும் கேட்காமல் எங்ககிட்ட `நீட்... நீட்... நீட்...’னு திருப்பித் திருப்பிக் கேட்குறீங்க...” என்றபோது, நிருபர் ஒருவர், ``மத்திய அரசு, அவர்களின் கல்வி நிறுவனத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளித்திருக்கிறது. ஆனால், தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருக்கிறது. 7.5 இட ஒதுக்கீடு கொடுத்ததைப் பெருமை பேசறீங்க...” என்று கேள்வி எழுப்பினார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அதற்கு பதிலளித்த எடப்பாடி, ``பெருமை பேசறேன்னு தவறா பேசாதீங்க. நீங்க நிருபர்... கேக்குற கேள்வியைச் சரியாக் கேளுங்க. 7.5 சதவிகிதம் ஒதுக்கீடுனா என்னனு தெரியுமா? நீட் தேர்வு வர்றதுக்கு முன்னாடி எத்தனை பேர் அரசுப் பள்ளியிலருந்து சேர்ந்தாங்கனு உங்களுக்குக் கணக்கு தெரியுமா?” என்று கேட்டார்.

அதற்கு அந்த நிருபர், ``10 சதவிகிதம் கூடுதலாக ஒதுக்கீடு வாங்கியிருக்க முடியும்?” என்று கேட்க முயன்றார். ஆனால், எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக, ``சும்மா தேவையில்லாம கேள்வி கேட்காதீங்க. பெருமை பேசறோம்னு சொல்லாதீங்க... நான் கிராமத்துல இருந்து வந்தவன்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

நான் உண்மையாலுமே பெருமைகொள்கிறேன். ஏழை மாணவர்களுக்காக நாங்க கஷ்டப்பட்டிருக்கோம். என்ன கேள்வி கேக்கறீங்க... கேள்வி.. ஏழை மாணவர்களுக்கு சப்போர்ட் பண்ணுங்க சார்” என்று சொல்லி கிளம்பினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு