Election bannerElection banner
Published:Updated:

``மனுசங்க எப்படி இருக்காங்க பாருங்க” - புலம்பிய எடப்பாடி... தேற்றிய பன்னீர்!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

குடலிறக்க அறுவை சிகிச்சை செய்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னையிலுள்ள தன் வீட்டில் ஓய்விலிருக்கிறார். அவரைக் கட்சி நிர்வாகிகள் தொடர்பு கொண்டு நலன் விசாரிக்காததால், வேதனையில் இருக்கிறாராம்.

குடலிறக்க பாதிப்பினால் அவதிப்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவமனை கண்காணிப்பிலிருந்த அவர், ஏப்ரல் 20-ம் தேதி வீடு திரும்பினார். கொரோனா பரவல் காரணமாக, கட்சி நிர்வாகிகள் யாரும் நேரில் வந்து பார்க்க வேண்டாமென முதல்வர் அலுவலகத்திலிருந்து அறிவுறுத்தப்பட்டிருந்ததது. ஆனாலும், அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.விஜயபாஸ்கர், தங்கமணி ஆகியோர் நேரில் வந்து முதல்வரை நலம் விசாரித்தனர். ஏப்ரல் 22-ம் தேதி எடப்பாடியைச் சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், உடல்நலன் குறித்து விசாரித்திருக்கிறார். அப்போது பன்னீரிடம், கட்சி நிர்வாகிகள் போன் கூட செய்து தன்னிடம் நலன் விசாரிக்கவில்லையே என்று எடப்பாடி வருத்தப்பட்டிருக்கிறார்.

பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி
பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வின் சீனியர் நிர்வாகிகள் சிலர், ``பன்னீருக்கும் எடப்பாடிக்கும் இடையேயான சந்திப்பு சுமார் அரை மணிநேரம் நடந்தது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு எடுத்துக் கொள்ளும் உணவு முறைகள் குறித்து அக்கறையுடன் பன்னீர் நலன் விசாரித்தார். அப்போது, ‘2014-ல் சொத்துக் குவிப்பு வழக்குல இடைக்கால ஜாமீன் கிடைத்தபிறகு, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து அம்மா போயஸ் கார்டன் வந்தாங்க. அந்த வழக்குல கர்நாடகா உயர்நீதிமன்றம் அம்மாவை விடுதலை செய்யுற வரைக்கும், போயஸ் கார்டன் வீட்டைவிட்டு அம்மா வெளியே வரவேயில்லை. நாமதான் தினமும் போய் அம்மாவைப் பார்த்துட்டு வந்தோம்.

“எடப்பாடி, பன்னீர்... துரோக நாணயத்தின் இரண்டு பக்கங்கள்!” - சுளீர் தினகரன்

எனக்கு ஆபரேஷன் பண்ணி நாளு நாள் ஆச்சு. கொரோனாவால கட்சி நிர்வாகிகள் இங்கே வரமுடியாதுதான். நானே வரவேண்டாம்னு தான் சொல்லச் சொன்னேன். ஆனால், ஒரு ஃபோன் பண்ணியாவது விசாரிச்சிருக்கலாம். இதுவரை ஒருசில மாவட்ட நிர்வாகிகளைத் தவிர, வேற யாரும் என்ன ஏதுனு ஒரு வார்த்தைக் கூட கேட்கல. அதுதான் ரொம்ப வருத்தமா இருக்குண்ணே’ என்றிருக்கிறார் எடப்பாடி. முதல்வரின் வருத்தத்தைப் புரிந்து கொண்ட பன்னீர், `ஒவ்வொருத்தரும் பல்வேறு பிரச்னைகள்ல இருப்பாங்க. நான் அவங்களைப் பேசச் சொல்றேன்’ என்றிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

உடனடியாக அதை மறுத்துவிட்ட எடப்பாடி, `அப்படி ஏதும் செஞ்சுடாதீங்கண்ணே. இந்த மரியாதையை எல்லாம் கேட்டு வாங்கக் கூடாது. கொரோனாவால பாதிக்கப்பட்ட நிலையிலும், அமைச்சர் சி.வி.சண்முகம் போன் பண்ணி எப்படி இருக்கீங்கனு நலன் விசாரிச்சாரு. அந்த உணர்வு தானா வரணும். நான் நம்பியிருந்த சில அமைச்சர்களும் ஒரு வார்த்தைக் கூட எப்படி இருக்கீங்கனு கேட்கல. பரவாயில்லை விடுங்க. `மனுசங்க எப்படி இருக்காங்க பாருங்க’னு சொல்லத்தான் உங்ககிட்ட இந்த விஷயத்தைப் பகிர்ந்துக்கிட்டேன்’ என்று எடப்பாடி தழுதழுத்திருக்கிறார்.

ஆ.ராசா மட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமியும் மன்னிப்புக் கேட்க வேண்டும்! #VoiceOfAval

கொரோனா பரவல் குறித்து சிறிது நேரம் பேசிய இருவரும், தேர்தல் முடிவுகள் குறித்துப் பெரியதாக எதுவும் பேசிக் கொள்ளவில்லை. `ரிசல்ட் வர்ற வரைக்கும் உடம்ப பார்த்துக்கங்க. தேவையில்லாததை போட்டு மனசைக் குழப்பிக்காதீங்க’ என்று அட்வைஸ் செய்துவிட்டு கிளம்பியிருக்கிறார் பன்னீர். கடந்த நான்கு வருடத்தில், எவ்வளவோ எம்.எல்.ஏ-க்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் அவர்கள் எதிர்பார்த்ததையும் தாண்டி நிறைய செய்திருக்கிறார் எடப்பாடி. ஆனால், அந்த விசுவாசம் ஏதுமில்லாமல், குடலிறக்க அறுவை சிகிச்சை செய்திருக்கும் இந்தக் காலக்கட்டத்திலும், தன்னை அந்த நிர்வாகிகள் புறக்கணித்ததை எடப்பாடியால் மனதளவில் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. `தேர்தல் ரிசல்ட் அ.தி.மு.க-வுக்குப் பாதகமாக வந்தால், இவர்கள்தான் தன் பக்கம் விசுவாசமாக நிற்கப் போகிறார்களா?’ என்கிற சந்தேகக் கேள்வியையும் தன் ஆதரவாளர்களிடம் எடப்பாடி கேட்டிருக்கிறார். அவர் கேள்வியில் நியாயம் இல்லாமல் இல்லை” என்றனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

கட்சி நிர்வாகிகள் புறக்கணித்திருப்பதால், எடப்பாடியின் மனதில் சந்தேக நெருப்பு எரிய ஆரம்பித்திருக்கிறது. வரும் நாள்களில் அது கொழுந்துவிட்டு எரியுமா, அல்லது அணைந்துப் போகுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு