Published:Updated:

ஸ்டாலின் பிறந்தநாள்: ஆட்டுக்குட்டி கிஃப்ட்... ஐந்தாயிரம் பேருக்கு சாப்பாடு - களைகட்டிய அறிவாலயம்!

ஸ்டாலின் பிறந்தநாள்

முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அண்ணா அறிவாலயம் திருவிழா கோலம் பூண்டிருந்தது. அதனால், அங்கு ஒரு விசிட் அடித்தோம்...

ஸ்டாலின் பிறந்தநாள்: ஆட்டுக்குட்டி கிஃப்ட்... ஐந்தாயிரம் பேருக்கு சாப்பாடு - களைகட்டிய அறிவாலயம்!

முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அண்ணா அறிவாலயம் திருவிழா கோலம் பூண்டிருந்தது. அதனால், அங்கு ஒரு விசிட் அடித்தோம்...

Published:Updated:
ஸ்டாலின் பிறந்தநாள்

தி.மு.க தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 68-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இதையொட்டி, காலை மெரினாவில் உள்ள கருணாநிதி மற்றும் அண்ணா சமாதிக்குச் சென்று இரு தலைவர்களுக்கும் மரியாதை செலுத்தினார் ஸ்டாலின். அங்கிருந்து வேப்பேரி பெரியார் திடலில் இருக்கும் பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் கீழ்பாக்கம் கார்டன் சாலையில் இருக்கும் மறைந்த பேராசிரியர் க.அன்பழகன் இல்லம் சென்று அவரது படத்துக்கு மரியாதை செலுத்தியவர், அங்கிருந்து நேரடியாக சேப்பாக்கத்தில் இருக்கும் கலைவாணர் அரங்கம் சென்றார்.

நான் முதல்வன் திட்டம் தொடக்கம்
நான் முதல்வன் திட்டம் தொடக்கம்

அங்கு தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட, ‘நான் முதல்வன்’ என்கிற இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி நிகழ்ச்சியைத் துவக்கிவைத்தார் ஸ்டாலின். எல்லா நிகழ்ச்சிகளும் முடிந்து காலை 10.30 மணியளவில் அண்ணா அறிவாலயம் வந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இருப்பினும், காலை 7 மணி முதலே தொண்டர்கள் ஒவ்வொரு ஊர்களில் இருந்தும் குவியத்தொடங்கினர். முதல்வர் பிறந்தநாள் நிகழ்வுகளைக் காண நாமும் காலை 7 மணிக்கே அறிவாலயத்தில் ஆஜரானோம். அறிவாலயத்திற்கு முன்பாக இருக்கும் ஹயாத் ரீஜென்சி ஓட்டலால் சென்னை மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஓ.எஸ்.ஆர் நிலத்தில் இருசக்கர வாகன நிறுத்தத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. உள்ளே அறிவாலய பிரதான நுழைவாயில் தாண்டி, கண் மருத்துவமனை இருக்கும் இடத்தில் சோதனையிடும் மெட்டல் டிடெக்டர் கருவிகள் வைக்கப்பட்டு, இருபக்கமும் பேரிகார்டுகள் போடப்பட்டன. விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் புகழேந்தியின் ஏற்பாட்டில் தாரை, தப்பட்டை வாத்தியங்கள் அறிவாலயத்தை ரணகளமாக்கின.

தாரை, தப்பட்டை
தாரை, தப்பட்டை
பரிசுப் பொருட்களுடன் தொண்டர்கள்
பரிசுப் பொருட்களுடன் தொண்டர்கள்

இடையிடையே பேரிகார்டுகளை ஒதுக்கிவிட்டும், அதன்மீது எகிறி குதித்தும் தொண்டர்கள் கலைஞர் அரங்கம் செல்ல முயன்றனர். அவர்களையெல்லாம் அங்கு பாதுகாப்பிற்கு இருந்த போலீஸார் தொடர்ந்து அப்புறப்படுத்திக் கொண்டே இருந்தனர். வந்திருந்த ஒவ்வொரு தொண்டர்களும் கைகளில் புத்தகங்கள், பேக் செய்யப்பட்ட பழங்கள், சால்வைகள், பொக்கேகள் என முதல்வருக்குக் கொடுப்பதற்காக கிஃப்ட்களைக் கொண்டு வந்திருந்தனர். தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தொண்டர் அமெரிக்க டாலர்களால் ஆன ஆளுயர மாலையை எடுத்துச்சென்றார்.

டாலர் மாலை
டாலர் மாலை

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புத்தக விற்பனை
புத்தக விற்பனை

பரிசுப் பொருள்களை மறந்துவிட்டு வந்தவர்களும் கவலைப்படக் கூடாது என்பதற்காகவே திடீர் கடைகள் முளைத்தன. ஒருவர் ஸ்டாலின், உதயநிதி போட்டோ போட்ட கார்டு, சால்வைகளை விற்றுக்கொண்டிருந்தார். இன்னொருவர் திராவிட சித்தாந்தம் தொடர்பான புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருந்தார். பூம்புகார் பதிப்பக நிர்வாகிகள் நேற்று ராகுல் வெளியிட்ட ஸ்டாலின் எழுதிய `உங்களில் ஒருவன்’ புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருந்தனர். அதை தொண்டர்கள் 500 ரூபாய் கொடுத்து போட்டிப்போட்டுக்கொண்டு வாங்கினர்.

ஆட்டுக்குட்டி பரிசளித்த அருள்காந்த்
ஆட்டுக்குட்டி பரிசளித்த அருள்காந்த்

சில வித்தியாசமான பரிசுகளையும் பார்க்க முடிந்தது. சென்னையைச் சேர்ந்த ஏ.ஆர்.அருள்காந்த் என்பவர், தளபதி பேரவை என்ற பெயரில் அமைப்பினை நடத்தி வருகிறார். அவர் கையோடு வெள்ளாட்டுக் குட்டியினை கயிறு கட்டி அழைத்துவந்தார். எதற்கு இந்த ஆட்டுக்குட்டி என்று கேட்டால், “எல்லோரும் புத்தகம், பொக்கே போன்றவைகளைத்தான் கொண்டு வருவார்கள் என்று யூகித்தேன். நாம் கொஞ்சம் மாறுதலாக பரிசு கொடுக்கலாம் என்றுதான் ஆட்டுக்குட்டியைக் கொண்டு வந்தேன்” என்றார்.

பலாப்பழம் கொண்டுசென்ற தொண்டர்
பலாப்பழம் கொண்டுசென்ற தொண்டர்

கூட்டத்தில் பலாப்பழம் நகர்வதைக் கவனித்து, தொண்டர்களை ஓரம்கட்டி அந்த நபரை அழைத்தோம். ``எனது பெயர் ராஜன், கடலூர் மாவட்டம் பன்ருட்டியில் இருந்து வருகிறேன். எங்க ஊரில் பேமஸ் பலாப்பழம்தானே, அதனால்தான் தலைவருக்காக சிறந்த பழத்தை எடுத்துவந்தேன்” என்று அவர் சொல்லிமுடிப்பதற்குள் கூட்டம் அவரை உள்ளே இழுத்துச் சென்றுவிட்டது.

காலை டிஃபன்
காலை டிஃபன்

தொண்டர்கள் வருகைக் காரணமாக அறிவாலயத்திலேயே காலை டிஃபன் ஏற்பாடு செய்யப்பட்டது. தேனாம்பேட்டை ஆனந்தா ஓட்டலில் இருந்து வந்த மினி டிஃபன் கன்டைனரும், ஒரு அரை லிட்டர் தண்ணீர் பாட்டிலும் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டது. காலை 8 மணிக்குத் தொடங்கிய உணவு விநியோகம் 10 மணி வரை நடந்தது. உணவு கன்டைனர்கள் தீரத்தீர ஓட்டலில் இருந்து வந்துகொண்டே இருந்தது. காலை டிஃபன் மட்டுமே சுமார் 3,000 பேருக்கு மேல் சாப்பிட்டிருப்பார்கள்.

அறிவாலயம் உள்ளே இருக்கும் பூங்காவில், ஜல்லிக்கட்டு சிலை அருகே பெரியவர் ஒருவர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் பேச்சுக்கொடுக்கையில் தனது பெயர் ரத்தினம் என்றும் திண்டுக்கல்லில் இருந்து வந்திருப்பதாகவும் கூறினார். மேலும், ``நான் 20 வயதில் இருந்தே தி.மு.க-வில் இருக்கிறேன். எனக்கும் தலைவர் ஸ்டாலினுக்கும் சில வருடங்கள்தான் வித்தியாசம். ஸ்டாலின் செயல் தலைவராக இருந்தபோதும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் எவ்வித காத்திருப்புமே இல்லாமல் நேரடியாக சென்று சந்தித்திருக்கிறேன். ஆனால், தற்போது அதெல்லாம் முடியவில்லை. எங்க மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் இருக்காங்க, அவர்களிடம் சொன்னால் கூட என்னை அழைத்துச்செல்ல மறுக்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் அடித்துப்பிடித்து எப்படியும் தலைவரைப் பார்த்துவிட வேண்டும்” என்றார்.

மணி சரியாக 10.30 ஆனதும் நாமும் நிகழ்ச்சி நடக்கும் கலைஞர் அரங்கம் செல்வதற்கு முயன்றோம். முதலில் தொண்டர்கள் சென்ற வழியில் சென்றபோது போலீஸார் அனுமதிக்கவில்லை. அடுத்து வெளியேறும் வழி வழியாகச் சென்றபோதும் போலீஸார் அனுமதிக்கவில்லை. இறுதியாக பின் கேட் வழியாகச் சென்றபோதும் அனுமதி மறுத்துவிட்டனர். `உள்ளே இருந்து பூச்சி முருகனோ, அன்பகம் கலையோ எங்களுக்கு போன் செய்து சொன்னால் அனுப்புகிறோம். இல்லையெனில் மீடியாவுக்கு அனுமதி இல்லை’ என்று கூறிவிட்டனர். பிறகு பேசி எடுத்துக்கூறியபோது போட்டோகிராஃபர்களை மட்டும் அனுமதித்தனர்.

காலில் விழும் தொண்டர்
காலில் விழும் தொண்டர்

10.30 மணிக்கு வாழ்த்துகளையும், பரிசுகளையும் பெறத் தொடங்கிய முதல்வர் ஸ்டாலின், மதியம் 1.30 வரை சுமார் மூன்று மணிநேரம் நின்றுகொண்டே வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டார். தொண்டர் ஒருவர் இரண்டு ஜோடி வெள்ளைப் புறாக்களை தி.மு.க கொடியினால் சுற்றப்பட்ட கூண்டில் வைத்து ஸ்டாலினுக்குப் பரிசளித்தார்.

புறாக்களைப் பரிசளித்த தொண்டர்
புறாக்களைப் பரிசளித்த தொண்டர்

வரிசையில் அடித்துப் பிடித்துக்கொண்டு சென்ற இளைஞர்களில் சிலர் முதல்வருடன் செல்ஃபி எடுப்பதிலேயே குறியாக இருந்தனர். இன்னும் சிலர் காலில் விழுந்து ஆசி வாங்கிச் சென்றனர். பெரும்பாலானவர்கள் மாஸ்க்கினை முகத்தில் மாட்டாமல் பாக்கெட்டிலேயே வைத்திருந்தனர். இதையெல்லாம் கவனித்த தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகன், ‘மாஸ்க் போடுங்க.. காலில் விழக்கூடாது.. செல்ஃபி எடுக்கக்கூடாது..’ என்று மைக்கில் சொல்லிக்கொண்டே இருந்தார்.

கேக் வெட்டும் ஸ்டாலின்
கேக் வெட்டும் ஸ்டாலின்

தொண்டர்கள் கூட்டத்துக்கு இடையே வி.சி.க தலைவர் திருமாவளவன், சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சி.பி.ஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு உள்ளிட்டோரும் மேடைக்குச் சென்று ஸ்டாலினுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அப்போது ஸ்டாலின் 68 கிலோ எடையுள்ள கேக்கினை வெட்டி கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு ஊட்டினார். அவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசரும் நேரில் வாழ்த்துக்கூறினார்.

திருநாவுக்கரசர் வாழ்த்துக்கூறியபோது
திருநாவுக்கரசர் வாழ்த்துக்கூறியபோது

தொண்டர்கள், கூட்டணிக் கட்சியினருக்கிடையே அமைச்சர்கள் சேகர்பாபு, ஐ.பெரியசாமி உள்ளிட்டோரும் ஸ்டாலினுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் ஐ.பி
அமைச்சர் ஐ.பி

நன்பகல் 12 மணி நெருங்கியதும் மதியச் சாப்பாடு சைவம், அசைவம் என இரு வகைகளில் பேக் செய்யப்பட்டு தொண்டர்களுக்கு பின்பக்க கேட்டில் வழங்கப்பட்டது. சைவத்தில் மினி மீல்ஸும், அசைவத்தில் பிரியாணியும் கொடுக்கப்பட்டது. காலை, மதியம் என இரு வேளை உணவு செலவுகளையும் அமைச்சர்கள் பொன்முடி மற்றும் எ.வ.வேலு ஆகியோர் ஏற்றுக்கொண்டதாக அறிவாலய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

பிறந்தநாள் நிகழ்வுக்கிடையே சில மனுத்தாக்கல்களும் நடந்தன. அதாவது, சென்னை வடகிழக்கு மா.செ சுதர்சனத்துக்கு எதிராக சிலர் புகார் மனுவை அறிவாலய நிர்வாகிகளிடம் வழங்கியதாக தொண்டர் அணியினர் தெரிவித்தனர். எல்லாம் முடிந்து முதல்வர் புறப்பட்டுச் சென்றதும், நாமும் நடையைக் கட்டினோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism