Published:Updated:

ஸ்டாலினின் ``ஆபரேஷன் ஸ்பைடர்” - முன்னாள் அமைச்சர்களின் உதவியாளர்களுக்குச் செக்!

செக் வைக்கும் ஸ்டாலின்
செக் வைக்கும் ஸ்டாலின்

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கோலோச்சிய சில அமைச்சர்களின் உதவியாளர்களுக்கு குறிவைத்திருக்கிறது ஸ்டாலின் அரசு. அந்த உதவியாளர்கள் சேர்த்திருக்கும் சொத்துக்கள் பற்றிய விவரங்களை தோண்டியெடுக்க உளவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதால், ஆடிப்போயிருக்கிறது முன்னாள் அமைச்சர்கள் வட்டாரம்.

எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் இடம்பிடித்திருந்த ஒருசில அமைச்சர்கள், கடந்த நான்கே வருடத்தில் வளமான வசதிகளை உருவாக்கிக் கொண்டுள்ளனர். குறிப்பாக, அவர்களிடம் உதவியாளர்களாக இருந்தவர்களின் சொத்து மதிப்பு பல நூறு கோடிகளை தாண்டியிருக்கிறதாம். அந்த உதவியாளர்களை வளைப்பதன் மூலமாக, சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர்களுக்கும் செக் வைக்க முடிவெடுத்திருக்கிறாராம் ஸ்டாலின். உளவுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் இந்தப் பணிக்கு ‘ஆபரேஷன் ஸ்பைடர்’ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். எந்தெந்த உதவியாளர்களுக்கு குறிவைக்கப்பட்டிருக்கிறது, இந்தத் தகவல்களை வைத்து என்ன செய்ய திட்டமிட்டுள்ளார் ஸ்டாலின் என்பதையறிய உளவுத்துறை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்.

தமிழ்நாடு தலைமைச் செயலகம்
தமிழ்நாடு தலைமைச் செயலகம்

“கடந்த ஆட்சியில் பசையுள்ள இலாக்காக்களை வைத்திருந்த முன்னாள் அமைச்சர்கள் 12 பேரின் உதவியாளர்களின் சொத்து, பின்புலம் பற்றிய விவரங்களை சேகரித்து வருகிறோம். சுத்தமான துறைக்கு பொறுப்பேற்றிருந்த அமைச்சரின் கொரோனா கால ஊழல்கள் அனைவருக்கும் தெரியும். அந்த அமைச்சரிடம் உதவியாளராக இருந்தவர்களில், முருகப் பெருமான் பெயர் கொண்டவர் மீதுதான் ஏகப்பட்ட புகார்கள் சொல்லப்படுகின்றன. தேவகோட்டையை பூர்வீகமாக கொண்ட அந்த உதவியாளர், 2011 வாக்கில் சுத்தத்தை கையில் வைத்திருந்த அமைச்சருக்கு அறிமுகமாகிறார். துறையில் வரும் கமிஷன்களில் கைவைக்காமல், பக்காவாக கலெக்ட் செய்து கொடுத்துவிடுவதால், அந்த உதவியாளருக்கும் அமைச்சருக்கும் நெருக்கம் அதிகமானது. ஒருகட்டத்தில் ஒருமையில் பேசிக் கொள்ளும் அளவுக்கு இருவரும் நட்பானார்கள். இந்த நெருக்கம், அமைச்சரின் வீட்டம்மாவுக்குப் பிடிக்கவில்லை. ‘எனக்கு தெரியாத விஷயங்களைக் கூட அந்தாளு தெரிஞ்சு வைச்சிருக்காரு. அவராலதான் நீங்க கெட்டு குட்டிச்சுவரா போறீங்க. இனிமே அவர் வீட்டுப் பக்கம் வந்தார்னா, நான் இங்க இருக்க மாட்டேன்’ என்று அமைச்சருடன் சண்டையிட்டுள்ளார் அவர் துணைவியார்.

`எடப்பாடி மீதும்தான் ஊழல் புகார் இருக்கிறது!’ - கொதிக்கும் முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில்

வேறு வழியில்லாமல், அந்த உதவியாளரை வீட்டுக்கு வரக்கூடாது என்று தடா போட்ட அமைச்சர், அதற்கு பிரதி உபகாரமாக, அந்த உதவியாளரின் பெயரில் சில மருந்து நிறுவனங்களை தொடங்கச் சொல்கிறார். இங்கேயிருந்துதான் விவகாரங்கள் விஸ்வரூபம் எடுத்தன. கொரோனா தடுப்புப் பணிக்கான பொருள்களை கொள்முதல் செய்யும் பல டெண்டர்கள் அந்த நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டன. சில மாதங்களிலேயே பல நூறு கோடிகளை பார்த்துவிட்டார் அந்த உதவியாளர். மூப்பனார் பாலத்திற்கு அருகே ஒரு வீடு, ராஜா அண்ணாமலைபுரம் லீலா பேலஸ் அருகே ஒரு வீடு, அவ்வை சண்முகம் சாலையில் ஒரு வீடு, போரூரிலிருக்கும் தன் தோழி பெயரில் பங்களா என கோடிகளில் கொழித்தார் அந்த உதவியாளர். தற்போது ஆட்சி மாறியிருப்பதால், சம்பந்தப்பட்ட சுத்தமான முன்னாள் அமைச்சரை வளைப்பதற்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்துள்ளது. அந்த முன்னாள் அமைச்சரின் ஆதி முதல் அந்தம் வரை அனைத்து விவரங்களும் அவர் உதவியாளருக்குத் தெரியும் என்பதால், அவரை வளைப்பதற்கு ஸ்கெட்ச் போட்டுள்ளோம். விரைவிலேயே மத்திய குற்றப்பிரிவில் அந்த உதவியாளருக்கு எதிராக ஒரு தரப்பினர் புகாரளிக்கவுள்ளனர். அதன்பிறகு பட்டாசு கிளம்பும்.

டிஜிபி அலுவலகம்
டிஜிபி அலுவலகம்

அதேபோல, கற்றலை போதிக்கும் துறைகளை வைத்திருந்த அமைச்சர்களின் உதவியாளர்களுக்கும் செக் வைக்கப்பட்டுள்ளது. எடப்பாடியின் அமைச்சரவையில், ‘க்ளீன் இமேஜ்’ஜை ஏற்படுத்தியிருந்த அந்த மூத்த அமைச்சரிடம் ‘நதி’யின் பெயர் கொண்ட ஒருவர் நெருக்கமாக இருந்தார். அமைச்சருக்கு அவர்தான் ஆல் இன் ஆல். அவரின் சொத்துகள் தொடர்பாகவும் லிஸ்ட் எடுக்கப்பட்டு வருகிறது. பாசமான அமைச்சரிடம் உதவியாளராக இருந்த கடவுள் முருகனின் ஆயுதம் பெயர் கொண்டவரிடம் கரன்சி மட்டுமே 200 கோடி ரூபாய் இருக்கிறதாம். கடந்த நான்கு வருடத்தில் தேற்றிய இந்தத் தொகையை எப்படி முதலீடு செய்வது என்பது தெரியாமல், பல்வேறு இடங்களில் அவர் பதுக்கி வைத்திருக்கிறார். அதை மிரட்டிப் பறிப்பதற்காக, அ.தி.மு.க-விற்குள்ளேயே ஒரு கும்பல் அவரைச் சுற்றிவர ஆரம்பித்திருக்கிறது. தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அப்ரூவராக மாறவும் தயாராகியிருக்கிறார் ஆயுதம் பெயர் கொண்டவர். அவர் வாய் திறந்தால், துறையில் நடந்த பல்வேறு முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வரும். கொங்கு மண்டல மூத்த அமைச்சரிடம் உதவியாளராக இருந்த பகவான் பெயர் கொண்டவரும் எங்கள் ரேடாரில் இருக்கிறார்.

”நானும் முன்னாள் முதலமைச்சர்தான்” - அறிக்கை ஈகோ யுத்தத்தில் பன்னீர் - எடப்பாடி!

இப்படி 12 அமைச்சர்களின் உதவியாளர்களை பட்டியலிட்டு, அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்களின் விவரங்கள், பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இடங்களை பட்டியலிட ஆரம்பித்திருக்கிறோம். ‘ஆபரேஷன் ஸ்பைடர்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த பணிக்கு மூன்று மாத கால அவகாசத்தை ஆட்சி மேலிடம் தந்திருக்கிறது. உதவியாளர்களை வளைத்து, அவர்களிடம் கைப்பட வாக்குமூலம் வாங்கிவிட்டால், அதைவைத்தே முன்னாள் அமைச்சர்களுக்கு செக் வைக்கலாம் என்பதுதான் திட்டம். தீபாவளி நெருக்கத்தில் அரசியல் தீபாவளி அரங்கேறலாம்” என்றனர்.

நிலோபர் கபில்
நிலோபர் கபில்

முன்னாள் அமைச்சர் நிலோபர் கபிலிடம் உதவியாளராக இருந்த ஒருவர் அளித்திருக்கும் மோசடி புகாரின் எதிரொலியாகத்தான், நிலோபரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கியிருக்கிறது அ.தி.மு.க. இதே ஃபார்முலாவில், தங்கள் உதவியாளர்களும் தங்களுக்கெதிராக கத்தியைத் திருப்பினால், சிறைக்குச் செல்ல வேண்டியதிருக்கும் என ஆடிப்போயிருக்கிறார்களாம் முன்னாள் அமைச்சர்கள் சிலர். கொரோனா தொற்று படிப்படியாக குறைந்தபிறகு, அரசின் ஆக்‌ஷன் அரங்கேறலாம் என்பதே உளவுத்துறையிலிருந்து நமக்கு கிடைக்கும் தகவல்.

அடுத்த கட்டுரைக்கு