Published:Updated:

`நிரந்தர ஆட்சி’: ஸ்டாலின் சொன்னதன் பின்னணி என்ன?

`தமிழ்நாட்டில் இனி நிரந்தரமாக திமுக ஆட்சிதான் என்ற நிலையை தொண்டர்கள் உருவாக்க வேண்டும்’ என முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பேரறிஞர் அண்ணா, பெரியார் பிறந்தநாள் விழா, திமுக நிறுவன நாள் விழா ஆகியவற்றை இணைத்து ஒவ்வோர் ஆண்டும் திமுக சார்பில் செப்டம்பர் 15-ம் தேதி முப்பெரும் விழா கொண்டாடப்பட்டுவருகிறது. ஆண்டுதோறும் மாநாடுபோல லட்சக்கணக்கான தொண்டர்களைக் கூட்டிவைத்து நடத்தப்படும் விழா, இந்தமுறை கொரோனா காலம் என்பதால் எளிய முறையில் அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில் நடைபெற்றது. மற்ற மாவட்டங்களில் உள்ளவர்களும் விழாவைக் காணும் வகையில் காணொலிக் காட்சி வாயிலாக இணைக்கப்பட்டனர். அண்ணா, பெரியார், பேராசிரியர் போன்றோரின் பெயர்களில் கட்சியினருக்கு விருதுகளை வழங்கிய முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இறுதியில் உரையாற்றினார். அப்போதுதான் `தமிழ்நாட்டில் இனி நிரந்தரமாக திமுக ஆட்சிதான் என்ற நிலையை தொண்டர்கள் உருவாக்க வேண்டும்’ என்று தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

திமுக முப்பெரும் விழா
திமுக முப்பெரும் விழா

முதல்வர் ஸ்டாலின் என்ன சொல்ல வருகிறார்... அவரின் திட்டம் என்ன? திமுக-வினர் மத்தியில் விசாரித்தோம். ``முதல்வருக்கு இருக்கும் அதே ஆசை எங்களுக்கும்தான் இருக்கிறது. அதை நடத்திக்காட்ட வேண்டிய கடமையும் எங்களைப் போன்ற நிர்வாகிகளிடம்தான் இருக்கிறது. ஏனெனில், எந்த திமுக-காரன், எந்த இடத்தில் அலப்பறை செய்தாலும் உடனடியாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுவிடுகிறார்கள். உடனடியாக தலைமை நடவடிக்கை எடுத்தபோதும், அந்த நிர்வாகியின் தொல்லையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதால், மக்கள் மத்தியில் முதல்வர் மீதிருக்கும் மரியாதை, கட்சி நிர்வாகிகள் மீதில்லை என்பதே நிதர்சனம்.

இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக எழுப்பும் சந்தேகத்துக்கு திமுக-வின் பதில் என்ன?!

ஆட்சி மீது எந்த ஒரு குறையும் சொல்ல முடியாத அளவுக்கு மிகச்சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கிறார் தலைவர் ஸ்டாலின். அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் செய்த காரியங்களுக்கான பின்விளைவுகளை சந்திக்கிறார்களே தவிர, யாரையும் வேண்டுமென்றே எதிர்ப்பதில்லை. மாறாக, எதிரிகளையும் அரவணைத்துச் செல்கிறார். இப்போது ஸ்டாலினும், இவருக்குப் பின்னர் உதயநிதியோ அல்லது யாருமோ முதல்வரானாலும் மேல்மட்டத்தில் மட்டுமே சிறப்பானவர்கள் இருந்தால் போதாது. கீழ்மட்டத்தில் உள்ளவர்களும் அப்படி இருக்க வேண்டும். இதோ... வருகிற ஊரக உள்ளாட்சித் தேர்தல் அதற்கான சிறந்த மேடை. கட்சிக்காரர்கள் எந்த அளவுக்கு மக்களிடம் நெருக்கமாக இருக்கிறார்கள் என்பது இதில் தெரிந்துவிடும்.

முதல்வரும், அமைச்சர்களும்கூட திட்டங்களையெல்லாம் அடுத்த பத்தாண்டுகளுக்கு சேர்த்துத்தான் உருவாக்கிவருகிறார்கள். அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க-தான் ஜெயிக்கப்போகிறது என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை. ஆனால், ஸ்டாலின் சொன்ன `நிரந்தரம்’ என்ற வார்த்தைக்குச் சரியான அர்த்தங்களைப் புரிந்துகொண்டு தொண்டர்கள் செயலாற்ற வேண்டும். ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது ஒருமுறை சட்டசபையில் `நான் இல்லாவிட்டாலும் 100 ஆண்டுகள் அ.தி.மு.க இருக்க வேண்டும்’ என்றார். அதன்படியே அந்தக் கட்சியினர் என்ன நடந்தாலும் கட்சி யாரிடமும் சென்று சீரழிந்துவிடக் கூடாது என்று இரட்டைத் தலைமையாகவே செயல்பட்டுவருகிறார்கள். அந்தக் கட்சித் தொண்டர்களும் அதை ஏற்றுக்கொண்டனர். அதேபோல், ஸ்டாலினின் விருப்பத்தை எங்களைப் போன்ற நிர்வாகிகளும் தொண்டர்களும் நிச்சயம் நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று முடித்தனர்.

ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி

இது குறித்து தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் கேட்டோம். ``தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ந்து மக்களுக்கான நல்ல காரியங்களைச் செய்கிறோம்; நல்ல பல திட்டங்களைக் கொண்டுவருகிறோம். இதைக் கட்சித் தொண்டர்கள் பொதுமக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். ஏனெனில், தொண்டர்கள் மூலமாகத்தான் மக்களை நெருங்க முடியும் என்பதை முதல்வர் அறிந்திருக்கிறார். அதனால், தொண்டர்கள்தான் மக்களிடம் தி.மு.க குறித்தும், அரசு செய்துவரும் நல்லவை குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அத்தகைய பணியைத் தொடர்ந்து தொண்டர்கள் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்கிறார் தலைவர். அப்போதுதான் நிரந்தரமாக திமுக ஆட்சி தமிழகத்தில் இருக்கும் என்பதைத்தான் வேண்டுகோளாகச் சொன்னார்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு