Published:Updated:

``கொரோனா பரவலுக்கு மத்தியில் இந்த விழா தேவைதானா என்றார்கள், ஆனால்..! - தஞ்சையில் முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்
News
முதல்வர் ஸ்டாலின்

``ஒருமுறை இருமுறை அல்ல... பலமுறை யோசித்தேன். இது தொடர்பாக, அமைச்சர் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழியையும் அழைத்து தீவிரமாக ஆலோசித்தேன்..!" - ஸ்டாலின்

தமிழக அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா இன்று தஞ்சாவூர் சரபோஜி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ``கொரோனா பரவல் அதிகரித்து வரும் இந்த நேரத்தில், இப்படி விழா தேவைதானா என நானும் யோசித்தேன்" எனத் தெரிவித்தவர், இது தொடர்பாக விரிவான தன்னிலை விளக்கத்தை அளித்தார். இந்த விழா தொடர்பாக, கடந்த சில நாள்களாக, எதிர்க்கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் எழுப்பி வந்த கேள்விகளுக்கு மறைமுகமாக பதில் சொல்லும் விதத்தில் முதல்வர் ஸ்டாலினின் இந்த பேச்சு அமைந்திருந்தது.

தஞ்சாவூர் ஆற்றுப்பாலத்தில் இயங்கி வரும் தி.மு.க மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலைகள் திறப்பு விழா மற்றும் தமிழக அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா டிசம்பர் 29, 30 ஆகிய நாள்களில் நடைபெற இருப்பதாகவும், இதில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்ள இருப்பதாகவும் அண்மையில் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு வெளியானவுடனே, தஞ்சை நகரில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

விழா
விழா

தஞ்சை நகரத்தை தூய்மைப்படுத்தும் பணி, சாலை சீரமைப்பு, காவல்துறையினர் முன் ஏற்பாடுகள் என கடந்த ஒரு வாரமாக பணிகள் நடந்துவந்தன. முதல்வர் ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுப்பதற்கான முன்னேற்பாடுகளில் தஞ்சை தி.மு.க-வினர் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில்தான், கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள இந்த நேரத்தில், இப்படி ஒரு பிரமாண்டமான கூட்டத்தை கூட்டி விழா நடத்த வேண்டுமா என அ.தி.மு.க, அ.ம.மு.க-வினர் மட்டுமல்லாமல், சமூக ஆர்வலர்களும் தங்கள் கண்டனங்களைப் பகிர்ந்து வந்தார்கள். தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த விஷயத்தில் பொறுப்புடனும், மக்கள் நலனில் அக்கறையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த தகவல்கள் உளவுத்துறையின் மூலம் தமிழக அரசின் கவனத்துக்கு சென்றது. இந்த நிலையில்தான், இன்று தஞ்சாவூர் சரபோஜி கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ``கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் இந்த நேரத்தில் இப்படி ஒரு விழா நடத்தப்பட வேண்டுமா என யோசித்தேன். ஒருமுறை இருமுறை அல்ல... பலமுறை யோசித்தேன். இது தொடர்பாக, அமைச்சர் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழியையும் அழைத்து தீவிரமாக ஆலோசித்தேன், இந்த விழாவை தள்ளி வைத்து, இன்னும் சில மாதங்கள் கழித்து நடத்தலாமா என அவர்களிடம் நான் கேட்டேன். ‘தமிழக அரசு, பொதுமக்களுக்கு, என்னவெல்லாம் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறதோ, அதை அப்படியே முழுமையாக கடைப்பிடித்து, இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம் என இவர்கள் உறுதி அளித்த பிறகுதான் இந்த நிகழ்ச்சிக்கு நான் ஒப்புக் கொண்டேன்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இந்த நிகழ்ச்சியில் 22 ஆயிரம் நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அப்படி நடத்தினால், 22 ஆயிரம் நபர்களோடு நம் கட்சியினர், பொதுமக்கள் எல்லாம் சேர்த்து ஒரு லட்சம் பேர் இங்கு வரக்கூடும். இதனால் கொரோனா பரவல் அதிகரித்துவிடக்கூடாது என்பதால்தான், இங்கு 5 ஆயிரம் நபர்களுக்கு மட்டுமே, நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதனால் மற்றவர்கள், தங்களுக்கு இது கிடைக்காமல் போய்விடுமோ என கவலைப்படத் தேவையில்லை. மற்றவர்களுக்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அவர்களுக்கு வீடுகளுக்கே தேடிச் சென்று, இன்னும் இரண்டு மூன்று நாள்களில் நலத்திட்ட உதவிகளை வழங்கிவிடுவார்" என்றார்.