Published:Updated:

தமிழுக்கு ஓர் அண்ணா - பி.சி.கணேசன் #Classics

Annadurai.C.N
பிரீமியம் ஸ்டோரி
Annadurai.C.N

அண்ணா என்பவர் எப்படிப்பட்டவர் என்பதை அறிய இந்த ஒரு கட்டுரை போதும்...!

தமிழுக்கு ஓர் அண்ணா - பி.சி.கணேசன் #Classics

அண்ணா என்பவர் எப்படிப்பட்டவர் என்பதை அறிய இந்த ஒரு கட்டுரை போதும்...!

Published:Updated:
Annadurai.C.N
பிரீமியம் ஸ்டோரி
Annadurai.C.N

ண்ணா அவர்களின் அரசியல் முக்கியத்துவம் அவருடைய எழுத்துலகச் சாதனையினைச் சரியாக மதிப்பிட முடியாமல் செய்து விட்டது என்றேதான் சொல்ல வேண்டும். அவருடைய ஆற்றல் மிக்க பேச்சும், வலிமை மிகுந்த எழுத்தும்தாம் அவருக்குத் தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம் தந்து அவரை ஓர் சிறப்பு மிக்க அரசியல் வாதியாகவும் ஆக்கின.

பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் தான் அண்ணா முதன் முதலாக அரசியலுக்கு அறிமுகமே ஆனார். ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களுக்குத் தேர்தல் பிரசாரகராகத் தன்னுடைய அரசியல் வாழ்க்கையினைத் தொடங்கிய அவர், பெரியாரின் ‘விடுதலை’ நாளிதழுக்கு உதவியாசிரியர் என்கிற பொறுப்பேற்று, பின்னர் தனக்கென்றே சொந்தமாக 1942-ல், ‘திராவிட நாடு’ வார ஏட்டினைத் தொடங்கினார்.

Annadurai.C.N
Annadurai.C.N

மேடையில் அவர் பெற்ற வெற்றி பிரமிக்கத் தக்கது. சொற்களை இடமறிந்து பயன்படுத்துவார். வாதங்களை வலிமை பெறும் வகையில் வரிசைப்படுத்தி எடுத்து வைப்பார். சிந்தனைத் தெளிவினைப் புலப்படுத்துவார். அவருடைய பேச்சைக் கேட்க வந்திருக்கும் கூட்டம், மகுடியின் இசையில் கட்டுண்ட நாகம் போல் மயங்கி நிற்கும். கூடியிருப்போரின் நிலையுணர்ந்து, தரமறிந்து பேசுவதிலே நிபுணர். கற்றோர் அவையிலே வரலாற்று உண்மைகளைத் தர்க்கரீதியான நியாயம் புலப்பட எடுத்துச் சொல்லுவார். பல தரப்பட்ட மக்களும் குழுமியுள்ள பொதுக் கூட்டங்களிலே, மனத்தைத் தொடும் கதைகள் சொல்லி, அன்றாட வாழ்க்கையின் அவலத்தினை வார்த்தைப் படங்களாக்கி வாதம் புரிவார். சொற்களை வைத்து ஜாலம் புரிவதில் அவர் ஒரு மந்திரவாதி. அடக்கத்தின் உருவமாகக் காட்சியளிப்பவர், அரங்கத்தில் ஏறி விட்டால் கடல்மடை திறந்ததுபோல் கர்ஜனை புரிவார். சமத்காரமாகக் கணை தொடுப்பார். நளினமாக நையாண்டி செய்வார். அவருடைய நாவன்மைக்கு மாற்றாரும் மரியாதை அளிக்கத் தவறியது கிடையாது.அண்ணாவின் பேச்சு நடையும், எழுத்து நடையும் பிரபல அமெரிக்கச் சிந்தனாவாதி ராபர்ட் கிரீன் இங்கர் சால் என்பவரின் நடையினை ஒட்டி அமைந்தது என்று சொல்லுவதில் தவறில்லை. எதுகை, மோனைகளை எழில் பட நிரவிப் பேசும் பாணியினை அவர் இங்கர்சாலிடமிருந்துதான் கற்றிருக்க வேண்டும். அவருடைய உள்ளங் கவர்ந்த மேலை நாட்டு அறிஞர்களில் இங்கர்சாலும் ஒருவர் என்பது குறிப்பிடத் தக்கது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆரம்பக் காலத்தில் கையாண்ட இந்த நடையினை மெள்ள மெள்ளக் கை விட்டார். நீண்ட வாக்கியங்களைக் கொண்ட ஆற்றொழுக்கு நடையினைப் பிற்காலத்தில் ‘தம்பி’க்கு எழுதிய கடிதங்களில் அவர் கையாண்டார். தனக்குப் பிடித்த புத்தகங்களில் ஒன்றாக, ‘கிப்பன்’ எழுதிய ‘ரோம் சாமராஜயத்தின் சரிவும் வீழ்ச்சியும்’ என்கிற புத்தகத்தை அண்ணா குறிப்பிடுகிறார், அந்த, ‘கிப்பனு’ டைய கற்பனை வளம் மிக்க நடையின் சாயலை, அண்ணாவின் பிற்கால எழுத்துக்களில் தெளிவாகக் காண முடிகிறது.

தமிழ் எழுத்துத் துறையில் அண்ணா தொடாத பகுதியில்லை; அவர் தொட்டுச் சிறக்காதது அதில் எதுவுமில்லை. பரபரப்பூட்டும் அரசியல் விமர்சனங்கள் எழுதினார். சமூக சீர்திருத்தத்தினை வலியுறுத்த சிறு கதைகளும் நாவல்களும் எழுதினார், நாடகக் கலையினை மிகச் சிறந்த பிரசாரக் கருவியாகக் கையாண்டார். பிரசாரம் இடம் பெறும்போது கலையின் நளினம் கெட்டு விடும் என்று பொதுவாகச் சொல்லுவ துண்டு. ஆங்கிலப் பேரறிஞன் பெர்னார்ட்ஷாவைப் போலவே ‘கலை கலைக்காகவே!’ என்பதில் நம்பிக்கையில்லாதவர் அண்ணா. எண்ணங்களை அழகுடன் வெளிப்படுத்தும் கருவியே கலை என்பதுதான் அவருடைய கருத்து. ‘வேலைக்காரி’,‘ஓர் இரவு’ போன்ற நாடகங்களில் பிரசாரத்தினை எத்தகைய கலையழகுடன் செய்து காட்ட முடியும் என்பதனை நிரூபித்தார், அவருடைய ‘ஒர் இரவு’ நாடகத்தைப் பார்த்த அமரர் ‘கல்கி'. கிருஷ்ணமூர்த்தி ‘தமிழ் நாடக உலகுககு ஒரு பெர்னார்ட்ஷா கிடைத்து விட்டார், ஒரு இப்ஸன் கிடைத்து விட்டார். ஒரு மோலியர் கிடைத்து விட்டார்’ என்று வெகுவாகப் பாராட்டினார்.

Annadurai.C.N
Annadurai.C.N

இலக்கிய விமர்சனத்தைப் பாத்திரப் படைப்புக்கள் மூலம் நாடக அரங்கத்துக்குள் கொண்டு வந்து வெற்றி பெற்ற பெருமை அண்ணாவையே சாரும். ‘நீதி தேவன் மயக்கம்’ என்கிற நாடகம் கம்பனது பாத்திரப் படைப்பு புற்றிய ஓர் இலக்கிய விமர்சனம். விமர்சனத்துறையில் அண்ணா கையாண்ட புதிய உத்தி அது. கம்பனது காவியத்தில் அவர் பெற்றிருந்த புலமையினை நாடகம் முழுவதும் கண்டு அனுபவிக்க முடிகிறது.

ஆங்கிலத்தில் அவருக்கிருந்த புலமையின் பிரதிபலிப்பை அவருடைய தமிழ் எழுத்துப் பூராவும் காண முடிகிறது. ஆங்கில வழக்காற்றுச சொற்களையும், சொற்றொடர்களையும் தழிழில் அநாயாசமாகக் கையாண்டு தமிழ் உரை நடைக்கு வளம் சேர்த்தார்.

“எதையும் தாங்கும் இதயம்" என்று அவர் அடிக்கடி கையாண்ட வாசகம் ஆங்கிலப் பெருங் கவிஞன் பைரனிடமிருந்து எடுத்தாண்டது. ‘ஆளவந்தார்கள்' , 'சாய்வு நாற்காலி அரசியல்வாதிகள் , அவர்கள் சிலர், நாம் மிகப் பலர்’ போன்றவை ஆங்கிலத் தொடர் மொழிகளை அவர் தமிழ்ப் படுத்திக் கையாண்டதற்குச் சில உதாரணங்கள். அதேபோல் பண்டைத் தமிழ் இலக்கியங்களில் மட்டுமே காணப்படும் பல சொற்களை நவீன உத்வேகத்தோடு பேச்சிலும், எழுத்திலும் பயன்படுத்தி வழக்குக்குக் கொண்டு வந்தார். ‘மனோன் மணீ’யத்தில் வரும் ‘குடிலன்’ பாத்திரத்தின் குண இயல்பினை வைத்து ‘அரசியல் குடிலர்கள்’ என்கிற தொடரை உருவாக்கித் தன்னுடைய அரசியல் எதிரிகளை விமர்சித்தார்.

'இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?’ ‘தம்பியுடையான் படைக்கு அஞ்சான்' போன்ற இலக்கிய வாக்கியங்களை வலிமைமிகு அரசியல் ஆயுதங்களாகப் பேச்சிலும், எழுத்திலும் அவர் பயன்படுத்தினார்.

துணிவு, எளிமை, வலிமை, அழகு இவையனைத்தும் அவர் எழுத்தில் ஒரு சேர ஆட்சி புரிந்தன. தமிழ் மொழியின் வளத்தையும், அழகையும் தன் வயப்படுத்தி அவர் கையாண்ட லாகவம், செளடய்யா வயலின் மீது இன்னிசை எழுப்பக் கையாண்ட லாகவத்துக்கு இணையானது. எத்துறையைப் பற்றியும் எழுதினார். சுவை பட, அழகுற எழுதினார். மனத்தைத் தொட்டு, கிறங்க வைக்கும்படி எழுதினார். இதயத்தைக் கிளு கிளுக்கச் செய்யும் இனிமையோடு எழுதினார். இலக்கியங்களில் புதைந்து கிடந்த சொற்களை அகழ்ந்தெடுத்துப் புதுமை மெருகிட்டு எழுதினார்.

அண்ணா இப்போது நம்மிடையே இல்லை. அவருடைய அரசியல் பற்றி ஆயிரம் கருத்து வேறுபாடுகளும், சர்ச்சைகளும் இருந்திருக்கலாம். அரசியலுக்கு அப்பால் ஒதுங்கி நின்று, வெறும் இலக்கியக் கண்ணோட்டத்தோடு பார்க்கும்போது. . . . எழுத்துலகில் அவர் புரிந்த அற்புதச் சித்துக்களும், சாதனைகளும் பிரமிப்பூட்டுகின்றன. தமிழ் எழுத்துலகில் அவர் ஒரு சகாப்தம். பெருமை கொள்ளத் தக்க சகாப்தம்.

(23.02.1969 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)